உலகம் பிரதான செய்திகள்

ஹொகொங் போராட்டத்திற்கு காரணமானவர் விடுதலை – சட்ட மசோதா ரத்து – நிர்வாக தலைவரை மாற்ற முடிவு?

ஹொகொங் போராட்டத்துக்கு வித்திட்டவர் விடுதலை – நிர்வாக தலைவரை மாற்ற சீனா முடிவு?

ஹொங்கொங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்ததும், அதனை தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த மசோதா கைவிடப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை சீனா மற்றும் தைவானுக்கு நாடு கடத்த வழிவகை செய்வதற்கு சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய காரணமாக இருந்தவர் 20 வயதுடைய சான் டோங் காய்

ஹொங்கொங்கை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு தைவானில் கர்ப்பிணி காதலியை கொலை செய்துவிட்டு ஹொங்கொங்குக்கு தப்பி சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அத்துடன் காதலியின் கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுத்ததாக பணமோசடி வழக்கும் தொடரப்பட்டது.

இதில் பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சான் டோங் காய் மீதான கொலை வழக்குக்காக அவரை தைவானுக்கு நாடு கடத்துவதற்காகவே கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதுதான் அங்கு மாபெரும் போராட்டத்துக்கு வித்திட்டது.

இந்த நிலையில், சான் டோங் காயை ஹொங்கொங்  நீதிமன்றம் நேற்று முன்தினம் விடுதலை செய்தது. சிறையில் இருந்து வெளியே வந்த சான் டோங் காய், பாதிக்கப்பட்ட தனது காதலியின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டதோடு, தன் மீதான குற்றச்சாட்டை தைவானில் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதாவது அவர் தாமாகவே தைவானுக்கு சென்று காவற்துறையில்  சரணடைவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே சர்ச்சைக்குரிய கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா ஹொங்கொங் நாடாளுமன்றத்தில் நேற்று முறைப்படி வாபஸ் பெறப்பட்டது. இதனை ஜனநாயக ஆர்வலர்கள் வரவேற்று உள்ளனர்.

இந்த நிலையில் ஹொங்கொங்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் அதன் நிர்வாக தலைவர் கேரி லாமை பதவியில் இருந்து நீக்கிவிட்டு வேறுநபரை பணியமர்த்த மத்திய அரசான சீனா முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும் இது குறித்து சீனா தரப்பிலோ அல்லது ஹொங்கொங் தரப்பிலோ அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.