142
மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இன்று பதவியேற்றார்.
மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தும், முதல்-அமைச்சர் பதவி போட்டியால் ஆட்சியமைக்க முடியவில்லை. எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா கட்சி தீவிரம் காட்டி வந்தது. இதற்காக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதனால் சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியானதாக கருதப்பட்டது.
ஆனால், மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று காலை பொறுப்பேற்றது. தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.
மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பட்னாஸ் மற்றும் அஜித் பவாருக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் கடந்த 10 நாட்களாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஆட்சியமைப்பதற்கு 145 சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜகவின் 105 சட்ட மன்ற உறுப்பினர்கள், தேசியவாத காங்கிரசின் 54 சட்ட மன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தற்போது ஆட்சியமைத்துள்ளன.
ஒரே இரவில் இந்த திடீர் மாற்றம் எப்படி ஏற்பட்டது என அரசியல் ஆர்வலர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரசும் சிவசேனாவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்து பேசிஇருந்தார்.
இதேவேளை ‘பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைத்துள்ள அஜித் பவாரின் முடிவு அவரது தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல. அஜித் பவாரின் இந்த முடிவை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை ஆமோதிக்கவும் இல்லை’ என்று சரத் பவார் கூறியுள்ளர்.
இதனால் மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரின் ஒப்புதல் இல்லாமல் அஜித் பவார் தன்னிச்சையாக பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பதால் அக்கட்சியில் சலசலப்பு உருவாகி உள்ளது. இதே நிலை நீடிக்கும்பட்சத்தில், கட்சி உடையும் சூழல் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love