சுவிட்சர்லாந்து தூதரக ஊழியர் தொடர்பானதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த புதிய தகவல்
கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் உள்நாட்டில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் தொடர்பாக கூறப்படும் குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசு தீவிர கவனம் செலுத்தி, 2019 நவம்பர் 25 திங்கள் அன்று இந்த விவகாரம் குறித்து உடனடியான முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது.
இன்று மாலை (டிசம்பர் 1, 2019) வெளியுறவுத்துறை செயலாளர் ரவிநாத ஆர்யசிங்ஹ மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமால் குணரத்ன மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் சுவிட்சர்லாந்தின் தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் அவர்களையும் தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதித் தலைவரையும் சந்தித்து, பொலிஸ் திணைக்களத்தின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவுகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளித்தனர்.
2019 நவம்பர் 29 வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்து தூதரகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், கூறப்படும் பாதிக்கப்பட்டவரை நேர்காணல் செய்யப்பட வேண்டியிருப்பதால் அவரை தம்மிடம் ஒப்படைக்குமாறு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்ற தூதரகம் நடவடிக்கை எடுக்காத போதும், விசாரணை நடத்தப்பட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுபவரின் சார்பாக சுவிட்சர்லாந்து தூதரகம் முறையாக முன்வைத்தவாறு, கூறப்படும் சம்பவத்தின் தொடர் நிகழ்வுகள் மற்றும் காலவரிசை கூறப்படும் பாதிக்கப்பட்டவர் அந்த தேதியில் மேற்கொண்ட நடமாட்டங்களுடன் ஒத்திருக்கவில்லை என்பதை உபெர் பதிவுகள், சி.சி.டி.வி காட்சிகள், தொலைபேசி பதிவுகள் மற்றும் ஜி.பி.எஸ் தரவு உள்ளிட்ட சாட்சி நேர்காணல்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களால் உறுதியாவது குறித்து தூதுவருக்கு தெளிவான சான்றுகள் வழங்கப்பட்டன.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் சுவிஸ் தூதரகத்துக்கு முன்வைத்த மறுக்கமுடியாத ஆதாரங்களின் அடிப்படையில், இந்த குற்றச்சாட்டைச் சுற்றியுள்ள உண்மையான விடயங்களை கண்டறிய மேலதிக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதற்காக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தூதரக ஊழியர் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் நேர்காணல் செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுபவர் தான் கடத்தப்பட்ட போது தனக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவித்திருப்பதால், அவர் இலங்கையில் உள்ள ஒரு நீதித்துறை மருத்துவ அதிகாரியால் மருத்துவ பரிசோதனைக்கு ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.
இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இந்த சம்பவம் தொடர்பான உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கத்துடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு தூதரகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வெளியுறவு அமைச்சு