உரிமை என்பது இயற்கை சார்ந்தது. அதனால், உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவற்றை ஒருவர் மற்றவருக்கு கொடுக்கவோ, மற்றவரிடம் இருந்து எடுக்கவோ முடியாது. இயற்கையானவை என்ற இயல்பில் உரிமைகள் ஒவ்வொருவருக்கும் உரித்தானவை என்பதே இதற்கான காரணமாகும். இதன் அடிப்படையில்தான் உலகப் பொது நீதியாக, பொது நடைமுறையாக மனித உரிமைகள் தினம் அனுட்டிக்கப்படுகின்றது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று மனித உரிமைகள் பற்றிய தாற்பரியம் நினைவூட்டப்படுகின்றது. மனித உரிமைகளின் அவசியம், அவற்றை மதித்து நடக்க வேண்டியதன் தேவை என்பன குறித்து விழிப்புணர்வூட்டப்படுகின்றது. மனித உரிமைகள் ஒவ்வொருவருடையதும் பிறப்புரிமை என்பது இந்தத் தினத்தன்று அனைவருக்கும் இடித்துரைக்கப்படுகின்றது.
உலக நாடுகள் அனைத்திலும் மனித உரிமைகள் உரிய முறையில் மதிக்கப்படுவதில்லை. அதிகாரத்திலும் பொருளாதார வசதிகளிலும் மேம்பட்டிருப்பவர்கள் ஏனையோரின் மனித உரிமைகளை மறுக்கின்றார்கள். இயற்கை வழியிலான உரித்துடைய உரிமைகளை மற்றவர்கள் அனுபவிப்பதற்கு அவர்கள் தடையாக இருக்கின்றார்கள்.
இந்த நிலைமைகள் மோசமானவை. மனித இயல்பிற்கும், இயற்கை நீதிக்கும் முரணானவை. பாதகமானவை. மனிதன் நாகரிகப் போக்கில் வளர்;ச்சி அடைந்துள்ளதாகவும் வளர்ந்து செல்வதாகவும் கூறப்படுகின்றது. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் மனித நாகரிக வளர்ச்சிக்கு பேருதவி புரிகின்றன. இந்த வளர்ச்சி புற நிலையிலானது. அதன் முன்னேற்றத்தைக் கண்கூடாகப் பார்க்க முடியும். அனுபவிக்க முடியும்.
ஆனால் இந்த நாகரிக வளர்ச்சியை அகநிலையில் காண முடியவில்லை. பொது நோக்கில் – ஒப்பீட்டளவில் வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளிலும், முன்னேற்றமடைந்துள்ளவை என்று கூறப்படுகின்ற நாடுகளிலும் கூட இந்த வளர்ச்சியை ஏனைய விடயங்களுடனான சம வளர்ச்சியாகக் காண முடியாமல் உள்ளது. பல நாடுகளில் மனித உரிமைகள் முறையாகப் பேணப்படுகின்றன. அந்த நாடுகளின் வளர்ச்சியோடு அக நிலையிலான மனித உரிமை நிலைமைகளும் வளர்ச்சியடைந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
இலங்கையின் நிலைமை
இலங்கை போன்ற நாடுகளில் நாகரிக வளர்ச்சிக்கும், விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் மனித உரிமைகளும், இயற்கை உரிமைகளும் பேணப்படுவதில்லை. சமூகங்களிடையே ஏற்றத்தாழ்வான நிலைமைகளிலேயே காணப்படுகின்றன. இங்கு மனித உரிமைகளும், அரசியல் உரிமைகளும் அப்பட்டமாக மறுக்கப்பட்டிருக்கின்றன. மீறப்பட்டிருக்கின்றன.
இந்த உரிமை மீறல்களை எதிர்த்து உரிமைகளை நிலைநாட்டுவதற்கான போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அவற்றிற்கு முடிவேற்படுவதற்குரிய சமிக்ஞைகளைக் காண முடியவில்லை.
நாட்டில் யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகின்றன. ஆனால் யுத்தமோதல்களின்போதும், அதன் பின்னரும் அப்பட்டமாக மீறப்பட்ட மனித உரிமைகளுக்கும், சர்வதேச மனிதநேய சட்ட மீறல்களுக்கும் இன்னும் பொறுப்பு கூறப்படவில்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் என்ற மனப்பாங்கில் உரிமை மீறல்கள் என்ற பொறுப்புக்கூறலின் விலக்கீட்டு உரிமையைப் பயன்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளே முனைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பொறுப்பு கூறல் மற்றும் உரிமை மீறல்கள் என்ற குற்றச் செயல்களுக்கான தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்வதற்காக அரசியல் ரீதியான அதிகார பலமும், ஆட்சி முறையிலான செல்வாக்கும் மிகத் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் ஜனநாயகம் என்ற அளவுகோளும் மிக வசதியாகப் பயன்படுத்தப்படுகின்றது.
நாடு அன்னியராகிய ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலம் முதலே தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளான அரசியல் உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன. அரசியல் உரிமைகள் என்பது மனிதனால் வகுக்கப்பட்டவை. அரசியல் மனிதன் தனது நிர்வாகச் செயற்பாடுகளுக்கு வசதியாக அமைத்துக்கொண்டதொரு வழிமுறையாகும்.
அரசியல் உரிமைகள் அந்தந்த நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம், அரசியலமைப்பு விதிகளின் மூலம் வகுக்கப்படுகின்றன. வழிகாட்டப்படுகின்றன. இலங்கையைப் பொறுத்தமட்டில் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை. தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்திருப்பதே அதன் அரசியல் வரலாறாகக் காணப்படுகின்றது. நாட்டின் ஆட்சி முறை வரலாற்றில் மிகவும் பாதகமானதொரு நிலைமையாக இது பதிவாகி இருக்கின்றது.
பின்தங்கிய நிலைமை
இந்த உரிமை மீறலின் அப்பட்டமான அடையாளமே முப்பது வருடங்களாகத் தொடர்ந்த உள்நாட்டு யுத்த நிலைமையாகும். ஒரு நாட்டில் உள்நாட்டு யுத்தம் அல்லது ஆயுத முரண்பாடு ஏற்படுவதற்குப் பலமான காரணங்கள் இருக்க வேண்டும். சாதாரணமாக மக்கள் அரசுக்கு எதிராகவோ அல்லது ஒரு சமூகம் மற்றுமொரு சமூகத்திற்கு எதிராகவோ ஆயுதமேந்திப் போராடுவதில்லை. அங்கு உரிமைகள் மோசமாக மீறப்பட்டதன் விளைவாகவே இந்த ஆயுத மோதல்களும், முரண்பாடும் எழுகின்றன.
இலங்கையில் பௌத்த மதம் அரசியலுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றது. பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றது. மதம் என்பது ஆட்சியாளர்களையும் பொதுமக்களையும் அக நிலையில் வளர்ச்சி அடைவதற்கு உதவ வேண்டுமே தவிர அரசியலில் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. ஆட்சியளார்கள் மத ரீதியான நம்பிக்கைகளின் ஊடாக அகப் புற நிலையில் பண்பட்டவர்களாக மத ரீதியான ஒழுக்க வழிநெறிகளில் சிறந்தவர்களாக ஆட்சிபுரிய வேண்டும். இதனை உறுதிப்படுத்திக் கொள்வதே அரசியலில் மதத்திற்கு உள்ள பங்கேற்பாகும்.
ஆனால் இங்கு மதம் அரசியலில் மேலாதிக்கம் செலுத்துகின்றுத. இதுவே பல்வேறு பிரச்சினைகளுக்கான அடிப்படை காரணமாகும். அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் மேல் நிலைமையையும் அதிகாரப் போக்கையும் மதம் கொண்டிருப்பதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.
மதமும், அரசியலும் தனித்துவமிக்கவை. அவைகள் தன்னளவில் வேறுபட்டவை. ஒன்றையொன்று ஆதிக்கம் செலுத்துவதும், அதிகாரம் செலுத்துவதும் பாதிப்புகளுக்கே வழி சமைக்கும். இதனை கண்கூடாக இலங்கை அரசியலில் காண முடிகின்றது. இந்த நிலைமையே நாட்டின் மனித உரிமை நிலைமைகள் வளர்ச்சி அடையாமைக்கும், அது ஒப்பீட்டளவில் கீழ் நிலையில் இருப்பதற்குமான அளவீடாகும்.
யுத்தத்தின் போது யுத்த தர்மம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இயற்கை சார்ந்த மனித நீதி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது உலக நிலையிலான பொதுவான எதிர்பார்ப்பாகும். யுத்த மோதல்களில் நேரடியாக சம்பந்தப்படாத பொதுமக்கள் ஆயுதமேந்தியவர்களினால் பாதிக்கப்படக் கூடாது என்பது இந்த எதிர்பார்ப்பின் முக்கிய அம்சமாகும். இது மனித இயல்பிலான முக்கியமான பண்பாகவும் கருதப்படுகின்றது.
ஆயுதம் ஏந்தியவர்கள் மோதிக்கொள்ளும்போது இடம்பெறுகின்ற மரணங்களும் அங்கு இடம்பெறுகின்ற கொலைகளும் யுத்தகளத்தின் இயல்பான தன்மையாகக் கருதப்படுகின்றன. அந்த மரணங்களும் கொலைகளும் யுத்த மோதல்கள் என்ற நிலையில் தவிர்க்க முடியாதவையாகவும், ஏற்றுக்கொள்ள வேண்டியவையாகவும் உள்ளன.
பயங்கரவாதமும் போராட்டமும்
ஆனால் நிராயுதபாணிகளான மக்களை – குறிப்பாக பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், இயலாதவர்கள், நோயாளிகள், யுத்த மோதல்களினால் காயமடைந்தவர்கள் போன்றவர்கள் மீது யுத்த காலத்தில் தாக்குதல் நடத்தவதும், அவர்களைப் பாதிப்படையச் செய்வதும் யுத்த மீறல் என்ற நியதியாக முன்னோர்கள் வகுத்திருக்கின்றார்கள். நிராயுதபாணிகளைப் பாதிப்படையச் செய்யக் கூடாது. அவர்களைப் பாதுகாக்க வேண்டும். யுத்தத்தில் காயமடைந்த எதிரிகளையும், சரணடைந்த எதிரிகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதும் யுத்த தர்மத்தின் அம்சங்களாகும். அதேபோன்று யுத்தத்தில் சிக்கியுள்ள பொதுமக்களைப் பாதுகாத்து, அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்வதும்கூட அந்த யுத்த தர்மத்தின் முக்கிய அம்சமாகும்.
இந்த விதிமுறைகளை அல்லது இந்த யுத்தகளப் பண்புகளை மீறுபவர்கள் மனித உரிமைகளை மீறியவர்களாகக் கருதப்படுவார்கள். அடிப்படை உரிமைகளை மீறியவர்களாகக் குறிப்பிடப்படுவார்கள். எல்லாவற்றிற்கும் மேலாகப் போர்க்குற்றம் புரிந்தவர்களாகக் குற்றம் சுமத்தப்படுவார்கள்.
இன ரீதியான அரசியல் உரிமை மறுப்புக்கு உள்ளாகிய தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காகக் குரல் எழுப்பினார்கள். அந்த உரிமைகளுக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். ஆனால் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் சாத்வீக வழிகளில் போராடினார்கள். அந்தப் போராட்டங்கள் அரச அதிகார பலத்தினால் ஆயுத முனையில் அடக்கி ஒடுக்கப்பட்டன. இதனால் உரிமைக்காகப் போராடியவர்களின் போராட்டங்கள் தோல்வியடைந்தன. அதேவேளை அவர்களின் பாதுகாப்பும் கேள்வி குறிக்கு ஆளாகியது.
அரசியல் உரிமைகளுக்கான போராட்டங்கள் நசுக்கப்பட்டதனால், உரிமைகளுக்காகப் போராடியவர்கள், தமது பாதுகாப்புக்காகவும் போராட வேண்டியேற்பட்டது. அதன் விளைவாகவே ஆயுதப் போராட்டம் தலையெடுத்தது. ஆயுதப் போராட்டம் பொதுமக்களினதும், போராளிகளினதும் பாதுகாப்புக்குக் கவசமாகியது. அதேவேளை உரிமைகளுக்கான போராட்டத்தைத் தொடர்வதற்கும் உறுதுணையாகியது. ஆனால் துரதிஸ்டவசமாக ஆயுதப் போராட்டத்தின் மூலம் உரிமைகளை மறுத்த அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைக்கு இட்டுச் செல்ல முடியவில்லை.
போராட்டத்திற்கான நியாயமான நிலைப்பாடுகளுக்கு, பயங்கரவாதம் என்ற முலாம் பூசப்பட்டு, அரசியல் தந்திரோபாயச் செயற்பாட்டின் மூலம் உலக நாடுகளின் ஆதரவைப் பெற்று அதீத ஆயுதப் பலத்தின் மூலம், ஆயுதப் போராட்டமும் நசுக்கி அழிக்கப்பட்டது. இந்த வகையிலேயே அரசியல் உரிமைகளுக்காக எழுந்த ஆயுதப் போராட்டத்தினால் ஏற்பட்ட முப்பது வருடகால யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
மனிதாபிமானத்துக்கான யுத்தம்………..?
யுத்த மோதல்களின்போது மனித உரிமைகள் மீறப்பட்டன. சர்வதேச மனிதநேய சட்ட முறைமைகளும் மீறப்பட்டன. இந்த மீறல்கள் தொடர்பிலான உண்மை நிலைமைகள் என்ன என்பது ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியும். யுத்தத்தில் ஈடுபட்டிருந்த அரச படைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் சிப்பாங்களுக்கும் அனுபவ ரீதியாக யுத்தகளத்தின் உண்மை நிலைமைகள் நன்கு தெரியும்.
பயங்கரவாதிகள் என சித்தரிக்கப்பட்ட இராணுவ வலிமை மிகுந்திருந்த விடுதலைப்புலிகளை யுத்த களத்தில் நேரில் பொருதிய படையினருக்கு, யுத்தத்தின் தன்மையும், அங்கு இடம்பெற்ற மனிதாபிமானத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் நன்கு தெரிந்திருந்தன. பயங்கரவாதிகளுடன் மோதுகின்றோம் என்ற மனப்பாங்கை இராணுவத்தினருடைய மனங்களில் அரசு விதைத்திருந்த போதிலும், அவர்களும் சாதாரண மனிதர்களே. அத்தகைய நிலையிலேயே போர்க்களத்தில் இடம்பெற்றவை நியாமானவையா இல்லையா என்பதை அவர்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள். இந்த மனிதாபிமானத் தன்மை காரணமாகவே சாட்சிகளற்ற யுத்தம் என்று வர்ணிக்கப்படுகின்ற போர்க்களச் சம்பவங்கள் தொடர்பிலான காணொலிகள் பல பதிவு செய்யப்பட்டு பின்னர் இரகசியமான முறையில் வெளியிடப்பட்டிருந்தன.
ஏற்கனவே யுத்தகளம் தொடர்பில் வெளியாகிய காணொலிகள் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த அரச தரப்பினர் மற்றும் விடுதலைப்புலிகள் தவிர்ந்த வேறு எவராலும் பதிவு செய்ய முடியாதவை. ஏனெனில் வெளியார் எவரும் அங்கு செல்ல முடியாத நிலையிலேயே இறுதிக்கட்ட யுத்தம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உண்மையில் இராணுவ தரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளே போர்க்குற்றச் சாட்சியங்களுக்கு ஆதாரமான தகவல்களாகப் பின்னர் வெளியாகி இருந்தன. இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பிலான சம்பவங்களை விடுதலைப்புலிகள் பதிவு செய்வதற்கான வாய்ப்புக்கள் அங்கு இருக்கவில்லை.
இவ்வாறு வெளியாகிய போர்க்களத்தின் மோசமான நிலைமைகள் தொடர்பிலான காட்சிகளை, யுத்தமோதல்களில் சிக்கி அதீத இராணுவ பலத்தினால் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்களின் கண்கண்ட சாட்சியங்கள் மேலும் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
விடுதலைப்புலிகளை என்னதான் பயங்கரவாதிகள், மனிதத் தன்மையற்ற மோசமானவர்கள் என்று படைத்தரப்பினர் கருதி இருந்தாலும், யுத்தத்தை வழிநடத்தியவர்களும், அதில் நேரடியாகக் களத்தில் ஈடுபட்டிருந்தவர்களும் அங்கு நிலவிய நியாயத்தன்மை குறித்து நன்கு அறிந்தே இருந்தார்கள். இதன் காரணமாகவே, யுத்தக் குற்றங்கள் சுமத்தப்பட்ட போதிலும், அங்கு எதுவுமே இடம்பெறவில்லை என்று முற்றாக மறுத்துரைப்பதுடன், விடுதலைப்புலிகளின் கைகளில் – பயங்கரவாதத்தில் சிக்கியிருந்த தமிழ்மக்களை மீட்பதற்கான மனிதாபிமான யுத்தமே நடத்தப்பட்டதாக, அரச தரப்பினர் கூறுகின்றார்கள். வாதிடுகின்றார்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல் கடந்த காலச் செயற்பாடுகளைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை. அவ்வாறு அவற்றை மீட்டுப்பார்ப்பதனால் பாதிப்புகளும் இனமுறுகல் நிலைமையுமே மீண்டும் ஏற்படும் என்ற அச்சத்தையும் அவர்கள் வெளியிட்டு வருகின்றார்கள்.
அரியாசனத்தில் அழகு பார்க்கப்படுபவர்கள்……
ஜனநாயகம் என்ற போர்வையில் இனவாத மதவாத பிரசாரத்தின் மூலம் யுத்தக் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் என்று கூறப்படுபவர்களே அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளனர். அவர்களே ஆட்சி அமைத்துள்ளார்கள். பத்து வருடங்களின் முன்னர், யுத்த வெற்றி என்ற அரசியல் முதலீட்டின் உதவியில் நாட்டை இராணுவ மயமாக்கி எதேச்சதிகாரப் போக்கில் அரசோச்சியவர்கள் என்று கூறப்பட்டு, மக்களால் தேர்தலில் நிராகரிக்கப்பட்டவர்களே, ஐந்து வருடங்களின் பின்னர் ஜனாதிபதி தேர்தலின் மூலம் ஆட்சியில் அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள்.
எதேச்சதிகாரிகளாகச் செயற்பட்டார்கள். ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்தார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்களையே பேரினவாத பிரசாரத்தின் மூலம் சிங்கள மக்கள் அரியாசனத்தில் ஏற்றி அழகு பார்த்திருக்கின்றார்கள். அடுத்து வரப்போகின்ற பொதுத் தேர்தலிலும் இந்த ஆட்சியாளர்களே அமோக வெற்றியீட்டுவார்கள். மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 13 இலட்சம் அதிகப்படியான வாக்குகளினால் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபாய ராஜபக்ச முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியவர். விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வழிநடத்தியவர்களில் இவருக்கும் கணிசமான பங்குண்டு.
இவரும் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மகிந்த ராஜபக்சவும் வெல்ல முடியாத யுத்தத்தில் வெற்றி பெற்றவர்கள் என்று கொண்டாடுப்படுபவர்கள். அதேவேளை அந்த யுத்தத்தைத் தாங்களே வெற்றிகொண்டு நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து மீட்டெடுத்து, உண்மையான சுதந்திரத்தை நிலைநாட்டியவர்கள் என்று உரிமையும் பெருமையும் கொண்டாடுபவர்கள். இந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகிய கோத்தாபாய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படடுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிய தற்காலிக அரசாங்கத்தின் பிரதமராக நியமனம் பெற்றுள்ளார். யுத்த வெற்றிவாதத்துடன், இனவாதமும் இணைந்து அவர்களை மீண்டும் அரியாசனத்தில் ஏற்றியிருக்கின்றன.
நல்லாட்சி அரசாங்கம் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமே, மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு பொறுப்பு கூறப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் உறுதியாக வெளிப்படுத்தி இருந்தது. ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பொறுப்பு கூறல் தொடர்பான பிரேரணைகளுக்கு இணை அனுசரணை வழங்கி, அவற்றை நிறைவேற்றுவதாக ஒப்புதல் அளித்த பின்பே நல்லாட்சி அரசாங்கம் அதற்கு முரணான இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.
ஐநா பிரேரணையின்படி, நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்திருந்த நல்லாட்சி அரசாங்கம் அதனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முடிந்த அளவில் தாமதப்படுத்தியது. காலத்தை இழுத்தடித்து போக்குக் காட்டி மறைந்து போனது.
ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஐநா பிரேரணைகளை மறுபரிசீலனை செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோத்தாபாயவும் பழைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படமாட்டாது. நாட்டை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதிலேயே கவனம் செலுத்தப்படும் என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். அதற்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
மனித உரிமைகளை மேம்படுத்துவதிலோ அல்லது மனித உரிமை மீறல்களுக்கோ சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கோ பொறுப்பு கூறுவதிலும் புதிய அரசு கவனம் செலுத்தப் போவதில்லை என்பதும் ஏற்கனவே நிச்சயமாக வெளிப்பட்டிருக்கின்றது. அரசியல் உரிமைகள், அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு என்பவற்றிலும் கவனம் செலுத்தப்படமாட்டாது என்பதும் வெளிப்பட்டிருக்கின்றது.
இத்தகைய பின்புலத்திலேயே 2019 ஆம் ஆண்டின் சர்வதேச மனித உரிமை தினத்தன்று முல்லைத்தீவில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், கசிந்துருகி கண்ணீர் பெருக்கி காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு கூற வேண்டும். அதற்காக உரிய அழுத்தத்தை அர்த்தமுள்ள வகையில் அரசின் மீது ஐநா பிரயோகிக்க வேண்டும் எனக் கோரி ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு மகஜர் சமர்ப்பித்துள்ளனர்.
ஆட்சி மாற்றச் சூழலில் இந்தப் போராட்டமும், ஐநா மன்றத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையும் முக்கியத்துவம் மிக்கது. உரிமைகள் மீறப்பட்டமைக்கு பொறுப்பு கூற வேண்டும். உரிமை மீறலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நியாயமும் நீதியும் வழங்கப்பட வேண்டும் என்பது அந்தக் கோரிக்கையின் உயிர்நாடியான சாராம்சமாகும்.
செய்வார்களா, செயற்படுவார்களா….?
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் இலங்கை அரசுகளுக்குப் பேருதவி புரிந்த சர்வதேச நாடுகள் யுத்தத்தில் வெற்றி அடைந்ததன் பின்னர் அந்த யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் உரிமை மீறல்களுக்கும் நியாயம் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஐநாவினாலும், சம்பந்தப்பட்ட சர்வதேச நாடுகளினாலும் கடந்த பத்து வருடங்களில் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னர் ஓர் ஆட்சி மாற்றம் இடம்பெற்றது. சுமார் ஐந்து வருடங்களாகப் புதிய அரசு அரசோச்சியது. யுத்தத்தை முடித்திருந்த – பதவி இழந்தவர்கள் 2019 ஆம் ஆண்டு மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளார்கள். இவர்களின் காலத்தில் மனித உரிமை நிலைமைகள் முன்னே;றறமடைவதையும், யுத்தக் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுவதையும் உறுதி செய்ய வேண்டியது சர்வதேசத்தின் கடமையாகும்.
ஐநா மன்றமும், ஐநா மனித உரிமைகள் பேரவையும் மனித உரிமை நிலைமைகள் ஜனநாயக உரிமைகள் என்பவற்றில் ஆர்வமுள்ள நாடுகளும அதற்குத் தேவையான அழுத்தத்தை அரசு மீது பிரயோகிக்க வேண்டும்.
இதுவே மூன்று வருடங்களுக்கு மேலாக – ஆயிரம் தினங்களுக்கு அதிகமாக வீதியோரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினதும், யுத்தத்தினால் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டவர்களினதும் கோரிக்கையாகும். இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு ஐநா மன்றமும் சர்வதேச நாடுகளும் முன்வர வேண்டும்.
அத்துடன் இதுவிடயத்தில் போராடுகின்ற மக்களுக்கு உறுதுணையாக இருந்து செயற்படுவதும், பல்வேறு தளங்களில் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதும் தமிழ் அரசியல் தலைமைகளினதும் இன்றியமையாத கடமையாகும். பொறுப்புமாகும்.
வரப்போகின்ற பொதுத் தேர்தலில் எத்தனை ஆசனங்களைக் கைப்பற்ற முடியும், எத்தனை இடங்களில் வெற்றி பெற முடியும் என்ற தேர்தல் அரசியல் மனநிலையில் இருந்து வெளிப்பட்டு, மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் அரசியல்வாதிகளும் சீரிய கவனம் செலுத்த வேண்டும். – செய்வார்களா…?
—
P.Manikavasagam