யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு இல்லை என மாவட்ட மேலதிக அரச அதிபர் சட்டத்தரணி முரளிதரன் தெரிவித்தார். “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் சமூக நலனோம்பு அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் மூலம் வீடற்றவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இன்றைய புள்ளிவிவரத்தின்படி 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடு இல்லை.
அதிலும் குறிப்பாக தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் தேவையாக உள்ளன. ஏனெனில் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசம் என்பதால் அதிகளவில் வீடுகள் தேவைப்படுகின்றன” என்று யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் சட்டத்தரணி எஸ். முரளிதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தின் முன்னேற்பாட்டு குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த மேலதிக அரச அதிபர், “ காணாமற்போனவர்களின் குடும்பங்கள், இடம்பெயர்ந்தோர் மற்றும் முன்னாள் போராளிகள் என வீட்டுத்திட்டத்திற்கு பலரும் விண்ணப்பித்துள்ளார்கள். அதில் ஆயிரத்து 400 முன்னாள் போராளிகளுக்கு இன்றுவரை வீடுகள் வழங்கப்பட்டுள்ளன” எனவும் சுட்டிக்காட்டினார்.