301
யாழில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்.அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை அதிகாலை புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று 45 பவுண் நகை , 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது.
குறித்த வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் இடைவிடாது குரைத்துக்கொண்டு இருந்ததை அடுத்து குடும்ப தலைவர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்த போது , வீட்டின் கேட் திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து வீட்டின் முன் கதவினை திறந்து வெளியே சென்று கேட்டினை பூட்டுவதற்கு முற்பட்ட போது , அவ்விடத்தில் மறைந்திருந்த கொள்ளையர்கள் அவரை ஆயுத முனையில் மடக்கியுள்ளது.
ஐந்து பேரை கொண்ட அந்த கொள்ளையர்கள் முகங்களை துணிகளால் மறைத்து கட்டி இருந்ததுடன் கைகளில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை வைத்திருந்துள்ளார்கள். குடும்ப தலைவரை பணயமாக வைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்ற கொள்ளை கும்பல் வீட்டில் இருந்த 45 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளது.
குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
அதேவேளை கடந்த 27ஆம் திகதி சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் , 47 பவுண் நகைகளையும் ஒரு தொகை பணத்தினையும் கொள்ளையிட்டுள்ளனர். 28ஆம் திகதி பருத்தித்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் 24 பவுண் நகைகளையும் , ஒரு தொகை பணத்தினையும் கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இவ்வாறாக கடந்த நான்கு நாட்களில் மூன்று வீடுகளில் பாரிய கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் அச்ச நிலையை ஏற்படுத்தி உள்ளது. #யாழ் #அச்சுவேலி #கொள்ளை
Spread the love