இந்தியா பிரதான செய்திகள்

இந்திய பொருளாதார வீழ்ச்சி, 2020-ல் மேலும் மோசம் அடையும்…

இந்தியாவில் சர்வதேச  கூட்டு முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 52 சதவீதம் பேர் 2020-ம் ஆண்டில் பொருளாதார நிலை இன்னும் மோசமாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார்கள் இந்தியாவின் பொருளாதாரம் ஏற்கனவே மந்த நிலையில் உள்ளது. கடந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்து உள்ளது.

அதற்கு முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது. அடுத்ததாக டிசம்பர் முதலான அடுத்த காலாண்டின் வளர்ச்சி எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை.

இந்த நிலையில் கோப்பரேட் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் 50 பேரிடம் பொருளாதார ஆங்கில பத்திரிகை ஒன்று இது சம்பந்தமாக கருத்து கணிப்பு நடத்தி உள்ளது.

அதில், 52 சதவீதம் பேர் 2020-ம் ஆண்டில் பொருளாதார நிலை இன்னும் மோசமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். 42 சதவீதம் பேர் பொருளாதார வீழ்ச்சி மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி உள்ளனர். 6 சதவீதம் பேர் எந்த கருத்தும் சொல்லவில்லை.

பொருளாதார வீழ்ச்சி என்பது உலக அளவில் தற்போது நிலவி வரும் வர்த்தக போரால் ஏற்பட்டிருக்கிறது. இதில் எல்லா நாடுகளுமே பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு பிரச்சினை சீரடைந்து விட்டால் இங்கும் சரியாகி விடும் என்று பல நிர்வாகிகள் கூறினார்கள்.

முன்னணி நிர்வாகி ஒருவரும் கூறும்போது, ஆண்டு தொடக்கம் இந்தியாவில் திருவிழா காலமாகும். எனவே மக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்குவார்கள். எனவே சந்தை நிலவரம் மேம்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.

இன்னொரு நிர்வாகி கூறும்போது, இந்தியாவில் மக்களின் நுகர்வு தன்மை குறைந்துவிட்டது தான் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. நகர பகுதிகளில் திருவிழா காலங்களில் மட்டும் பொருட்கள் விற்பனை ஆகிறது. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாங்கும் திறன் மிகவும் குறைந்துள்ளது என்று கூறினார்.

2020-ம் ஆண்டில் நுகர்வோர்கள் பொருட்கள் வாங்குவது அதிகரிக்கும் என்று 62 சதவீத நிர்வாகிகள் தெரிவித்தனர். வழக்கமாக உள்ள வருமான வரியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்களுக்கு சேமிப்பு பணம் அதிகமாகும். அந்த பணத்தை கொண்டு பொருட்கள் வாங்க விரும்புவார்கள். எனவே விற்பனை அதிகரித்து பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று சிலர் தெரிவித்தனர்.

மேலும் பொருளாதார மந்த நிலையை போக்குவதற்கு மத்திய அரசு பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்புகளை வெளியிடலாம். இது நன்றாக அமைந்தால் வளர்ச்சி ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தனர்.

GST

அதே நேரத்தில் GST  வரி வசூலை அதிகரிக்கும் வகையில் சில பொருட்களுக்கு வரி உயர்வு செய்வது மற்றும் 20 சதவீத வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் என்று ஒரு நிர்வாகி தெரிவித்தார். பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிப்பதாக 58 சதவீதம் பேர் தெரிவித்தனர்.

ரெயில்வேயில் அடிப்படை கட்டுமானம் மேம்படுத்துதல், கம்பெனி வரிகளில் வரி குறைப்பு, வட்டி விகிதம் குறைவு போன்றவைகள் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் செயல் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆனாலும் பல அவசர நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டியது அவசியம். ஆனால் அது நடக்கவில்லை என்று முன்னணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ்-ல் பெரிய அளவில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அது இந்த ஆண்டில் 46 ஆயிரம் புள்ளிகளை தாண்டுவதற்கான வாய்ப்பு குறைவு என்று 38 சதவீதம் பேர் கூறினார்கள்.

அதே நேரத்தில் பொருளாதார வீழ்ச்சி நிலையிலும் தங்களால் சாதிக்க முடியும் என்ற நோக்கத்தில் கூடுதல் முதலீடு செய்யப்போவதாக 66 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். 86 சதவீதம் பேர் இந்த ஆண்டில் கூடுதல் கொள்முதல்களை நிகழ்த்தப்போவதாக தெரிவித்தனர்.

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள், சலுகைகள் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று 75 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக ரெப்போ ரேட்டில் இன்னும் மாற்றம் தேவை எனவும் வலியுறுத்தி உள்ளார்கள்…

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.