நான் நான்கு பெண் பிள்ளைகளோட வாழ்கிறேன். அவர்களுக்கு இனி எந்த தொந்தரவும் இருக்க கூடாது. அவர்களுக்கு ஒரு நிரந்தர அரசாங்க வேலையை கொடுங்கள் என இராணுவத்தினரால் 2000 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மிருசுவில் படுகொலையில் கணவர் உட்பட இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தாயார் தெரிவித்தார்.
யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில், இன்றைய தினம் திங்கட்கிழமை முறைப்பாடு ஒன்றினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
“என்னுடைய கணவர் மற்றும் இரண்டு மகன்களும் இராணுவத்தினரால் படுகொலை செய்யபப்ட்டனர். படுகொலை செய்யதவர் என குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளியானவர். தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பொது மன்னிப்பு வழங்கி இந்த அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.
ஆனால் எங்களுக்கு ஒரு நஷ்ட ஈடோ , அல்லது என்னுடைய பிள்ளைகள் கல்வி கற்று உள்ளார்கள் அவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்போ வழங்க வேண்டும். எங்கள் குடும்பம் இனி மேலாவது கஷ்டங்கள் இல்லாமல் கண்ணீர் இன்றி வாழ வேண்டும். எமக்கான வீட்டு திட்டங்கள் கூட கிடைக்கவில்லை. அவற்றை தந்து உதவ உதவி செய்ய வேண்டும்.
எங்களுக்கு நஷ்ட ஈட்டினை பெற்று தாருங்கள். நான் நான்கு பெண் பிள்ளைகளோட வாழ கஷ்டப்படுகிறேன். இருக்கிற பெண் பிள்ளைகளுக்கு எந்த தொந்தரவும் இல்லாம இருக்கணும். எங்களது கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும்.
இந்த 20 வருடமாக நாங்கள் அலையாத இடங்கள் இல்லை. அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் போது எங்களை அழைத்து பேசி இருக்கலாம். அதனை செய்யவில்லை. எங்களது பிள்ளைகளின் உடைமைகள் கொழும்பு மேல் நீதிமன்றில் உள்ளது அவற்றை கூட எமக்கு பெற்று தர யாரும் இல்லை.
நஷ்ட ஈடு கேட்டும் எனது பெண் பிள்ளைகளுக்கு நிரந்த அரச வேலை வாய்ப்பை பெற்று தருமாறும் பலரிடம் கேட்டும் யாரும் எந்த உதவியும் இல்லை. என்ர பிள்ளைகளுக்கு வேலை கிடைத்தால் அவர்களை திருமணம் செய்து வைத்து கரை சேர்த்து விடுவேன். என தெரிவித்தார்.
வெள்ளை வானில் வந்தவர்கள் எம்மை மிரட்டும் வகையில் செயற்பட்டார்கள் என மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த பின்னரே ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.