அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப் பெசோஸின் செல்பேசி ஹேக் செய்யப்பட்டதில் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை தொடர்புபடுத்தும் புதிய குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
பெசோஸ் உரிமையாளராக உள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வேலை பார்த்து வந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டதற்கு ஐந்து மாதங்கள் முன்னதாக, இந்த வேவு பார்த்தல் நடந்துள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது. அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் பெசோஸ், போர்ப்ஸ் இதழின் பட்டியலின்படி இப்போது உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார்.
சௌதி அரசாங்கத்தை விமர்சித்து வந்த, கஷோக்ஜி, இஸ்தான்புல் நகரில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் 2018 அக்டோபர் மாதம் கொல்லப்பட்டார்.
அவரை கொலை செய்யுமாறு பின் சல்மான் உத்தரவிட்டார் என குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால், தூதரகத்தின் பாதுகாப்பு அலுவலர்கள் செய்த மூர்க்கத்தனமான செயல் காரணமாகதுணைத்தான் அவர் கொல்லப்பட்டார் என்று சௌதி அரேபியா தொடர்ந்து கூறி வருகிறது.
பின் சல்மானின் தனிப்பட்ட வாட்சப் தொடர்பில் இருந்து சந்தேகத்துக்கு இடமான ஒரு லிங்க் பெறப்பட்டதைத் தொடர்ந்து ஜெஃப் பெசோஸின் தொலைபேசி ஹேக் செய்து வேவு பார்க்கப்பட்டது என்று `தி கார்டியன்` பத்திரிகை புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
என்ன நடந்தது, எப்போது நடந்தது என்பது பற்றி எங்களுக்கு தெரிந்த தகவல்களை கீழே தொகுத்துள்ளோம்.
2018 மே 1 – ‘சம்மந்தமே இல்லாத கோப்பு’
இந்தத் தேதியில் பட்டத்து இளவரசரின் வாட்சப் கணக்கில் இருந்து, எந்த அவசியமும் இல்லாமல் பெசோஸுக்கு ”நட்பு பரிமாற்றம் போல காட்டிக் கொள்ளும்” ஒரு ”சம்மந்தமே இல்லாத கோப்பு” அனுப்பப்பட்டது என்று ’தி கார்டியன்’ கூறியுள்ளது.
சில மணி நேரங்களில் பெசோஸின் செல்போனில் இருந்து ஏராளமான தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று, பெயர் குறிப்பிட விரும்பாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி அந்தப் பத்திரிகை கூறியுள்ளது.
2018 அக்டோபர் 2 – கஷோக்ஜி கொல்லப்பட்டார்
இஸ்தான்புல் நகரில் உள்ள சௌதி தூதரகத்துக்குள் ஜமால் கஷோக்ஜி நடந்து செல்கிறார். துருக்கியை சேர்ந்த ஹாட்டிஸ் செங்கிசை திருமணம் செய்து கொள்வதற்குத் தேவையான ஆவணங்களைப் பெறுவதற்காக அவர் அங்கு சென்றார். ஆனால், அவர் வெளியே வரவே இல்லை.
கஷோக்ஜி இறந்துவிட்டார் என சௌதி அரேபியா அறிவிக்க இரண்டு வாரங்களுக்கும் மேல் அவகாசம் எடுத்துக் கொண்டது.
2018 நவம்பர் 16 -வாஷிங்டன் போஸ்ட் செய்தி
ஜமால் கஷோக்ஜியை கொலை செய்வதற்கு, பின் சல்மான் உத்தரவிட்டார் என சி.ஐ.ஏ. புலனாய்வு அமைப்பு நம்புவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது; கஷோக்ஜி கொல்லப்பட்டதில் இளவரசருக்கு தொடர்பு இல்லை என்று சௌதி அரேபியா கூறியது.
2019 பிப்ரவரி 7 – பெசோஸும் டேப்லாய்ட் பத்திரிகையும்
அமெரிக்காவை சேர்ந்த சௌதி ஆதரவு டேப்லாய்ட் பத்திரிகையான National Enquirer, தனக்கும் தன்னுடைய தன்னுடைய பெண் தோழியான Fpx தொலைக்காட்சியின் முன்னாள் தொகுப்பாளினியுமான லாரென் சான்செஸுக்கும் இடையிலான செல்போன் தகவல் பரிமாற்றங்களை வெளியிட்டு ”மிரட்டி பணம் பறிக்கும்” செயலில் ஈடுபடுவதாக பெசோஸ் குற்றஞ்சாட்டினார்.
2019 மார்ச் 30 – ‘அந்தரங்க விஷயங்களில் ஊடுருவல்‘
பெசோஸ் பணிக்கு அமர்த்திய புலனாய்வாளர் காவின் டி பெக்கர் என்பவர், அவருடைய தொலைபேசியை வேவு பார்த்ததில் சௌதிக்கு தொடர்பு உள்ளதாகக் கூறினார்.
“பெசோஸின் செல்போனில் சௌதி நாட்டவர்கள் ஊடுருவல் செய்து, அவருடைய அந்தரங்க விஷயங்களை எடுத்துள்ளனர் என்பதற்கு அதிக நம்பகமான தகவல்கள் உள்ளன என்று எங்கள் புலனாய்வாளர்களும், பல்வேறு நிபுணர்களும் முடிவுக்கு வந்தனர்” என்று Daily Beast இணையதளத்தில் டி பெக்கர் எழுதியுள்ளார்.
2019 ஜூன் 19 – ‘முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டது’
ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்ட சம்பவம் பற்றிய ஐ.நா. சிறப்பு விசாரணைக் குழுவுக்கு தலைமையேற்றுச் சென்ற ஏக்னஸ் கல்லாமர்டு, அது திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட கொலை என்றும், இளவரசர் முகமது பின் சல்மானை விசாரிக்க வேண்டும் என்றும் அறிக்கை சமர்ப்பித்தார்.
2019 டிசம்பர் 23 – மரண தண்டனைகள்
கஷோக்ஜி கொல்லப்பட்டது தொடர்பாக ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்தும், மூன்று பேருக்கு சிறைத் தண்டனை விதித்தும் சௌதி அரேபியாவில் ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
”கொலை செய்ய உத்தரவிட்டவர்கள் சுதந்திரமாக சென்றுவிட்டது மட்டுமின்றி, புலனாய்வு மற்றும் விசாரணை அவர்களை நெருங்கவே இல்லை” என்று ஐ.நா. குழுவுக்கு தலைவராக வந்த கல்லாமர்டு கூறினார்.
2020 ஜனவரி 21 – ‘பொருத்தமற்ற’ குற்றச்சாட்டுகள்
சல்மான் வாட்சப் கணக்கில் இருந்து காரணம் எதுவும் இல்லாமல் வாஷிங்டன் போஸ்ட் உரிமையாளருக்கு ஒரு பைல் அனுப்பப்பட்டுள்ளது என்று `தி கார்டியன்` கூறியுள்ளது. ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்படுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு இது நடந்திருப்பதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
அவருடைய செல்போனில் இருந்து என்ன தகவல்கள் எடுக்கப்பட்டன அல்லது அவை எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்று தெரியவில்லை என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் ”பொருத்தமற்றவை” என்று அமெரிக்காவில் உள்ள சௌதி தூதரகம் கூறியுள்ளது.
அமேசானின் நிறுவனரும், உலகின் மிகப் பெரிய பணக்காரருமான ஜெஃப் பெசோஸ், பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்படுவதற்கு முன்பு வரை பின் சல்மானுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தார். சௌதி அரேபியாவில் வணிகத் தொடர்புகளும் வைத்திருந்தார்.
ஆனால் கொலை சம்பவத்தை வாஷிங்டன் போஸ்ட் வன்மையாக கண்டித்து செய்தி வெளியிட்ட பிறகு உறவுகள் கசந்து போய்விட்டன.
உலகின் மிகப் பெரும் பணக்காரரின் செல்போனை ஹேக் செய்திருப்பதாக, ரியாத் ஆட்சியாளர்கள் பற்றி குற்றஞ்சாட்டுபவர்களுக்கு ”ஒரு எச்சரிக்கையை” அளித்துள்ளது என்று, ஆஸ்லோவைச் சேர்ந்த அரபு எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான இயாத் எல்-பக்தாதி கூறியுள்ளார். இவர் கஷோக்ஜியின் நண்பர்.
”பெசோஸ் குறிவைக்கப்பட்டதன் பின்னணியை இது மோசமான வழியில் வெளிப்படுத்தியுள்ளது” என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எல்-பக்தாதி எழுதியுள்ளார்.
”பூமியில் மிகப் பெரிய பணக்காரரை குறிவைத்து, பிளாக்மெயில் செய்ய முடியும் என்றால், யார் தான் பாதுகாப்பாக இருக்க முடியும்,” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.