நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் பெப்ரவரி 1 ஆம் திகதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
இதற்கிடையே, நிர்பயா குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் பெப்ரவரி 1 ஆம் திகதி நிறைவேற்றப்பட உள்ள தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
குற்றவாளிகள் கருணை மனு அளித்துள்ளதாலும், மனுக்கள் நிலுவையில் உள்ளதாலும் பெப்ரவரி 1 ஆம் திகதி அறிவித்தபடி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், திட்டமிட்டபடி பெப்ரவரி 1 ஆம் திகதி குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்படுவார்கள் என திகார் சிறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, திகார் அதிகார் ஒருவர் கூறுகையில், 2012 ஆம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் உத்தர பிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த தூக்கு தண்டனை நிறைவேற்றும் ஊழியரான பவன் ஜலாத் தண்டனையை நிறைவேற்ற உள்ளார்.
இதற்கான ஒத்திகை இன்று (ஜனவரி 31) திகார் சிறை வளாகத்தில் நடக்க உள்ளது. குற்றவாளிகள் 4 பேரும் திட்டமிட்டபடி பெப்ரவரி 1 ஆம் திகதி தூக்கிலிடப்படுவார்கள் என தெரிவித்தார்.