தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தகவலுக்கான உரிமைச் சட்டமானது மக்களுக்கான முன்னேற்றகரமான ஒரு சட்டத்துக்கான எடுத்துக்காட்டாக அமைகின்றது. இச்சட்டத்தினூடாக அரச நிறுவனங்களிலுள்ள தகவல்களை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அணுகுவதானது அவர்களது வாழ்கையில் தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஓய்வூதியம், வீட்டுத் திட்டம் போன்ற தனிப்பட்ட விடயங்கள் முதல் பொதுச் சுகாதாரம் மற்றும் கல்வி தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு இச்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனமானது 2017 பெப்ரவரி 3ம் திகதி முதல் கொழும்பின் தலைமைக் காரியாலயம் உள்ளிட்ட மாத்தறை, வவுனியாவில் அமைந்துள்ள கிளை காரியாலயங்களினூடாகவும் அதேபோன்று யாழ்ப்பாணம், அம்பாறை, திருகோணமலை, அனுராதபுரம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பங்குதார நிறுவனங்களினூடாகவும் சுமார் 2000க்கும் மேற்பட்ட தகவலுக்கான விண்ணப்பங்களுக்கு பொதுமக்களுக்கு உதவியளித்துள்ளது. இலங்கையின் ஊடகத்துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு அதனூடாக ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை இனங்கண்டு 2019ம் ஆண்டுக்கான அதியுயர் ஊடக விருதுகளில் தகவலுக்கான உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி அறிக்கையிடப்பட்டிருந்த சிறந்த அறிக்கையிடலுக்கான விருது வழங்கப்பட்டடிருந்தமையும் TISL நிறுவனத்தை மேலும் வலுவூட்டுவதாக அமைந்தது.
TISL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர கூறுகையில், இலங்கையில் தகவலுக்கான உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மூன்று வருடங்களில் பல வெற்றிகளை அடைந்திருக்கின்றது. இருப்பினும், கருத்தில்கொள்ளப்படவேண்டிய சவால்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. சிரேஷ்ட அரசியல்வாதிகளின் சொத்துக்கள் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்பன போன்ற முற்போக்கான உத்தரவுகள் மூலம் தகவலுக்கான உரிமைச்சட்ட ஆணைக்குழுவின் மகத்தான பங்களிப்பினை நாம் காக்கூடியதாக இருந்தபோதும், வளப்பற்றாக்குறை காரணமாக ஏற்படுகின்ற நிறுவனரீதியான இயலுமைகளை கட்டுப்படுத்தும் பிரச்சினைகளையும் ஆணைக்குழு எதிர்கொண்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அமைச்சுக்கள் மற்றும் ஏனைய பொது அதிகாரசபைகள் RTI தொடர்பான அறிக்கைகளை வருடாந்தமும் வருடத்திற்கு இருமுறையும் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அறிக்கைகள் முறையாக சமர்ப்பிக்கப்படாமை குறித்தும் TISL நிறுவனம் கருத்தில் கொண்டுள்ளது. சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி குறித்த காலத்திற்குள் அறிக்கைகளை வெளியிடுவதை உறுதிப்படுத்துவதும் இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வெற்றிகளை அளவிடுவதற்கு மக்களுக்கு வழிவகுக்கும்.
RTI ஆனது உள்ளுர் மட்டத்திலும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் மட்டத்திலும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுவதாக 2019ம் ஆண்டுக்கான TISL இன் RTI நடைமுறைப்படுத்தல் தொடர்பான ஆய்வு அறிக்கையானது சுட்டிக்காட்டுகின்றது. பிரஜைகளுக்கும் அரசுக்குமிடையிலான தொடர்பினை வலுப்படுத்துவதாகவுள்ள அதேநேரம் ஒப்பீட்டளவில் தேசிய அளவிலான பொது அதிகாரசபைகள் பொறுப்புகூறும் தன்மையில் தவறியுள்ளன என்பதையும் TISL சுட்டிக்காட்ட விரும்புகின்றது. அதேபோன்றே தாமாக தகவல்களை வெளிப்படுத்தும் விடயத்திலும் பின்தங்கியே உள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நடைமுறைப்படுத்தலில் அரச அலுவலர்களின் கடமைகளை இலகுவாக்கும் செயற்றிறன்மிக்க ஒன்றாக உள்ளதுடன் தகவலை பெறுவதில் பிரஜைகளுக்குள்ள தடைகளையும் இது தகர்க்கின்றது.
ஒபேசேக்கர மேலும் கூறுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுச்சேவை வழங்களை மேம்படுத்துவது தொடர்பான உறுதிப்பாட்டுடன் தகவல் அறியும் உரிமையானது தொடர்புபட்டுள்ளது. இதனை உணர்ந்த வகையில் ஒவ்வொரு பிரஜையும் தகவல் அறியும் உரிமையின் தொடர்ச்சியைப் பேணவும் அதன் நீடித்து நிலைக்கும் தன்மையை பேணவும் அதற்கான ஆதரவினை உறுதிப்படுத்துவதை கருத்திற்கொண்டு ஆணைக்குழுவுக்கான தேவைகள் தொடர்பான மதிப்பாய்வை நடாத்துமாறு TISL அரசாங்கத்திடம் கோருகின்றது.