கொரோனா வைரஸினால் நேற்றைய தினத்தில் 103 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 இற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. ஹூபேய் மாகாணத்திலேயே இந்த உயிரிழப்புகள் அனைத்தும் பதிவாகியுள்ளன. இருப்பினும் புதிதாகத் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
நேற்று முன்தினம் 2,618 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியதாக அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்றைய தினத்தில் 2,097 பேரே புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஹுபேய் நகர சுகாதார ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. 42,200 பேர் சீனாவில் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பீஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்படும் வைத்தியசாலைக்கு அந்நாட்டு ஜனாதிபதி ஸி ஜின்பிங் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது தொற்றுக்குள்ளானவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள், தாதியர்களையும் ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட வேண்டிய தீர்க்கமான, மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அங்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையிலேயே, ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அபூர்வமான பொதுவௌிப்பிரசன்னம் அமைந்துள்ளது. சீன ஜனாதிபதி, இந்தப் பயணத்தின்போது சமூக சுகாதாரநல நிலையத்திற்கும் சென்றிருந்தார். முகக்கவசம் அணிந்து சென்ற அவருக்கு அங்கு உடல்வெப்பநிலை பரீட்சிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.