ஏழு பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. பேரறிவாளன் உள்பட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒன்றரை வருடங்களாகியும் அதுதொடர்பாக இதுவரை ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்கவில்லை.
இதனிடையே ஏழு பேரில் ஒருவரான நளினி, சட்டவிரோத காவலில் வைத்திருப்பதால் தன்னை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று (பெப்ரவரி 12) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், ‘முன்கூட்டியே விடுதலை செய்யச் சொல்லி நாங்கள் கோரவில்லை. ஏழு பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய பிறகு நியாயமற்ற முறையிலும், சட்டவிரோதமாகவும் சிறையில் அடைத்துள்ளதால் நாங்கள் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான். தற்போது, தமிழக அரசே எங்களை விடுவிக்க வேண்டும். ஏனெனில் அமைச்சரவை நிறைவேற்றும் தீர்மானத்துக்கு ஆளுநர் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்’ எனும் வாதத்தை எடுத்துவைத்தார்.
தமிழக அரசு தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் ‘உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்குப் பரிந்துரை அனுப்பினோம். அதுதொடர்பாக உத்தரவு ஏதும் அரசு பிறப்பிக்கவில்லை. இதுபற்றி ஆளுநர்தான் உத்தரவிட வேண்டும். அவர்களை நேரடியாக விடுதலை செய்யும் அதிகாரம் அரசுக்கு இல்லை’ என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், நளினி சட்டவிரோதக் காவலில் இருக்கிறாரா அல்லது சட்டபூர்வமான காவலில் இருக்கிறாரா என்பது குறித்து வரும் 18ஆம் திகதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கிழனை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்துள்ளனர். #விடுதலை #தமிழகஅரசு #பேரறிவாளன் #நளினி