புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபரொருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை காணவில்லை எனவும் அதனை குற்ற புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் காவற்துறைப் பரிசோதகர் நிசாந்த சில்வா பயன்படுத்தினார் எனவும் குற்றம் சுமத்தி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புங்குடுதீவை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா எனும் மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். மறுநாள் பாடசாலைக்கு செல்லும் வழியில் உள்ள பாழடைந்த வீட்டிற்கு அருகில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
குறித்த படுகொலை தொடர்பில் முன்னெடுக்கபட்ட விசாரணைகளில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று, கடந்த 2017ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி முதலாம் மற்றும் ஏழாம் சந்தேக நபர்கள் நிரபராதிகள் என தீர்ப்பாயம் கண்டு அவர்களை வழக்கில் இருந்து விடுவித்ததுடன் ஏனைய ஏழு பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன் 30 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அதனை அடுத்து இரு மாதங்களில் தீர்ப்பயத்தால் குற்றவாளிகள் என காணப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் மாணவி கொலை வழக்கின் விசாரணைகளை முன்னெடுத்த விசேட விசாரணை அதிகாரியான குற்ற புலனாய்வு திணைக்கள முன்னாள் காவற்துறைப் பரிசோதகர் கைது செய்யப்பட்ட நபரிடம் பறிமுதல் செய்ய மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் தடய பொருளாக ஒப்படைக்காது தான் பயன் படுத்தியதாக குற்றம் சாட்டி குற்றப்புலனாய்வு திணைக்கள விசேட அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தென்னிலங்கையை சேர்ந்த ஊடகம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டு உள்ளது.
மாணவி கொலை வழக்கினை முன்னதாக ஊர்காவற்துறை காவற்துறையினரே முன்னெடுத்தனர். மாணவி கொலை செய்யப்பட்ட தினத்திற்கு மறுநாளான 14ஆம் திகதி சடலம் மீட்கப்பட்ட அன்றைய தினமே புங்குடுதீவில் சகோதரர்களான மூன்று சந்தேக நபர்களை காவற்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 17ஆம் திகதி மேலும் ஐந்து சந்தேக நபர்களை கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளி என மக்களால் 17ஆம் திகதி இரவு மடக்கி பிடிக்கப்பட்டு காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் யாழ்ப்பாண காவற்துறையினரால் விடுவிக்கப்பட்ட நிலையில் 19ஆம் திகதி மக்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக அன்றைய தினமே வெள்ளவத்தையில் வைத்து வெள்ளவத்தை காவற்துறையினரால் சசிக்குமார் கைது செய்யப்பட்டார்.
மாணவி கொலை சம்பவம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியமையாலும் மக்களால் காவற்துறையினர் மீதும் சந்தேக பார்வை விழுந்தாலும் குறித்த வழக்கினை குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணைக்காக எடுத்துக்கொண்டனர். சுமார் ஒரு வார காலத்திற்கு பின்னர் 20ஆம் திகதிக்கு பின்னரே குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கொலை நடந்தது, சந்தேக நபர்களை கைது செய்தது அனைத்தும் ஊர்காவற்துறை காவற்துறையினரால் முன்னெடுக்கப்பட்டது. அவர்களாலையே சந்தேக நபர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். ஒரு வார காலத்திற்கு பின்னரே குற்ற புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து.
இந் நிலையில் தான் வழக்கு விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பளிக்கப்பட்டு சுமார் இரண்டரை வருடங்களுக்கு பின்னர் குறித்த வழக்கில் சான்று பொருளாக ஒப்படைக்க வேண்டிய மோட்டார் சைக்கிளை வழக்கினை விசாரணை செய்த முக்கிய அதிகாரியான முன்னாள் காவற்துறைப் பரிசோதகர் பாவித்ததாக தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. என செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நாட்டின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவான நாளன்று நாட்டில் இருப்பது தனக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி நாட்டை விட்டு வெளியேறி சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்ததக்கது.