ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதனையடுத்து அங்கு கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவை தவிர ஹொங்கொங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மக்காவ், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.
இதில் ஹொங்கnhங், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இத்தாலியில் கொரோனா வைரசுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
78 வயதான முதியவர் ஒருவர் வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து இத்தாலியில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வடக்கு மண்டலத்தில் உள்ள 10 நகரங்களில் உள்ள பொது இடங்கள் மூடப்பட்டுள்ளதுடன் விளையாட்டு நிகழ்ச்சி மற்றும் மத கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை தென்கொரியாவில் கொரோனா வைரஸால் இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டதனையடுத்து அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தென் கொரியாவில் வியாழக்கிழமை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது அந்நாட்டில் இரண்டாவது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சீனாவில் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் தற்போது அங்குள்ள சிறைகளில் வேகமாக பரவி வருகின்றது. ஷான்டாங் மாகாணத்தின் ரெஞ்செங் சிறையில் 7 காவல்துறையினர் மற்றும் 200 கைதிகளுக்கும் வைரஸ் பரவியுள்லது. அது போல் ஜெஜியாங் மாகாணத்தில் ஷிலிபெங் சிறையில் 34 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
{ஹபெய் மாகாணத்தில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ள சிறுவனுக்கும் வைரஸ் தாக்குதல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து ; வைரஸ் பாதிப்புக்குள்ளான கைதிகள், காவல்துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன் நோய் அறிகுறி இருக்கும் நபர்கள் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். #கொரோனா #இத்தாலி #தென்கொரியா #உயிரிழப்பு #சீனா #சிறை