Home இந்தியா டெல்லி வன்முறை: வட கிழக்கு டெல்லியில் அதிக பாதிப்பு: உயிரிழப்பு 20-ஆக அதிகரிப்பு….

டெல்லி வன்முறை: வட கிழக்கு டெல்லியில் அதிக பாதிப்பு: உயிரிழப்பு 20-ஆக அதிகரிப்பு….

by admin
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள் இடையே உண்டான மோதலால் ஞாயிறன்று தொடங்கிய வன்முறைகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனை என்று அறியப்படும் குரு தேஜ் பகதூர் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சுனில் குமார் கெளதம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 189 என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை இரவில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

டெல்லி
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதேபோல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ஜிடிபி மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

டெல்லி வன்முறை

டெல்லி வன்முறை குறித்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவொன்றில், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக அவர்களை இடத்துக்கு அழைத்து செல்ல முழு அளவில் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு படையினரை அமர்த்த டெல்லி போலீஸுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்முறை சம்பவங்களால் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியின் சில இடங்களில் மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சேவைகள் வழக்கம் போல் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ஹர்ஷ்வர்த்தன் கூறுகையில், ”உயிழந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆகி உயர்ந்துள்ளது. திங்கள்கிழமையன்று 81 பேர் வன்முறையால் காயமடைந்த நிலையில் இந்த மருத்துவமனைக்கு வந்தனர். செவ்வாய்கிழமை காயமடைந்த 69 பேர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் 30 முதல் 40 பேர் வரை சிகிச்சை முடிந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் உள்ள சிலரின் உடல்நிலை கவலை தருவதாக உள்ளதாக கருதப்படுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் டெல்லி கலவரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அமைதியை நிலைநாட்டவேண்டுமென்றும் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் இல்லத்துக்கு முன்பாக இரவில் குழுமியவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர்.

டெல்லி வன்முறை
படத்தின் காப்புரிமைPRAKASH SINGH/AFP VIA GETTY IMAGES)

டெல்லி அரசின் கல்வி இயக்ககம் கேட்டுக்கொண்டதை அடுத்து பிப்ரவரி 26 அன்று நடக்கவேண்டிய சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை வடகிழக்கு டெல்லியில் மட்டும் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

“வன்முறை பாதித்த வடகிழக்கு டெல்லியில் நாளை புதன்கிழமை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். எல்லா மாநிலத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்படுகின்றன. நாளைய சிபிஎஸ்இ தேர்வுகளை ஒத்திவைக்கும்படி சிபிஎஸ்இ வாரியம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார் என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.

செவ்வாய்க்கிழமையன்று வடகிழக்கு டெல்லி வன்முறையில், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மூவர் மற்றும் ஒரு கேமிராமேன் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதேபோல் சமூகஊடங்களில் இந்த செய்தி பகிரப்பட்டது.

முன்னதாக வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சந்த்பாக், ஜாஃபராபாத் மோஜ்பூர், பஜன்புரா உள்ளிட்ட டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் திங்கள்கிழமை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

இந்நிலையில் நேற்று பகலில் பஜன்பூரா பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே மீண்டும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன.

பிபிசி செய்தியாளர்களின் அனுபவம்

டெல்லியின் வடகிழக்கு பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசி செய்தியாளர்கள், இந்து கும்பல் கற்களை வீசி எறிந்தும், கோஷங்களை எழுப்பி சென்றதையும் பார்த்துள்ளனர். மேலும் அந்த கூட்டத்தில் இருந்த சிலர் “துரோகிகளை சுடுங்கள்” என்றும் கோஷமிட்டுள்ளனர்.

பிபிசி செய்தியாளர் யோகிதா லிமாயே, டயர் மார்க்கெட் ஒன்று தீ வைக்கப்பட்டு புகை வரும் காட்சியை பார்த்துள்ளார்.

மேலும் செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில், ஷஹாத்ரா பகுதியில் மசூதி ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது.

சிலர் மசூதியின் தூபியின் மேல் உள்ள பிறையை சேதப்படுத்துவது போன்ற காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வன்முறை தொடங்கியது எப்படி?

வடகிழக்கு டெல்லியின் மோஜ்பூர் பகுதியில் டிசம்பர் மாதம் முதலே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தவர்கள், சனிக்கிழமை, ஜாஃபராபாத் மெட்ரோ ரயில் நிலையம் முன்பு போராடத் தொடங்கினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

போராட்டம் காரணமாக அங்கு மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதுடன், அப்பகுதியில் இருந்த சாலைகளும் மூடப்பட்டன.

ஞாயிறன்று ஜாஃபராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவானவர்கள் பேரணியாக செல்லத் தொடங்கியதும் பதற்றம் உண்டானது.

ஊடங்கங்கள் மற்றும் சமூக ஊடங்களில் வெளியான காணொளிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான மற்றும் எதிரான போராட்டக்காரர்கள் கற்களை வீசிக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

டெல்லி வன்முறை:
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதனால் ஏற்பட்ட வன்முறைகளில் வடகிழக்கு டெல்லியின் பகுதிகளில் கடைகள் மற்றும் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் காணொளிகள் மற்றும் படங்களும் ஊடங்களில் வெளியாகியுள்ளன.

இந்த வன்முறையை கட்டுப்படுத்த காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.

பொது மக்களின் சொத்துகளை தீக்கிரையாக்கி, சூறையாட முயன்ற கூட்டத்தை கட்டுப்படுத்த தாங்கள் தடியடி நடத்த வேண்டி இருந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.

திங்கள் கிழமை என்ன நடந்தது?

திங்கள் மதியம் மற்றும் மாலையில் நடந்த வன்முறை சம்பவங்களில் நால்வர் உயிரிழந்தனர்.

டெல்லி வன்முறை
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

டெல்லி கோகுல்புரி பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான மற்றும் எதிரானவர்கள் இடையே நடந்த மோதலில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பலியானதாகவும், துணை போலீஸ் ஆணையர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்தது.

இறந்த போலீஸ் கான்ஸ்டபிளான ரத்தன் லால் ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியை சேர்ந்தவர் என்றும், கடந்த 1998-இல் டெல்லி போலீசில் அவர் கான்ஸ்டபிளாக சேர்ந்தார் என்றும் ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ஜாஃபராபாத்தை சேர்ந்த முகமது சுல்தான் மற்றும் ஷாஹித் ஆல்வி என்ற ஆட்டோ ஓட்டுநரும் இந்த வன்முறை சம்பவங்களில் இறந்துள்ளதாக போலீசார் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

முகமது சுல்தானின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், அவரது காலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறியதால், அவர் இறந்துவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

உயிரிழந்த மற்றொருவரான ஷாஹித் ஆல்வியின் சகோதரனான ரஷீத் ஆல்வி இது குறித்து பிபிசியிடம் கூறுகையில், ”என் சகோதரர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார். இன்றைய போராட்டத்தின்போது அவரது வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அவர் இறந்துவிட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். ஜாபராபாத்தில் காவல்துறையினர் இருக்கும்போதே துப்பாக்கியால் சுட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சுட்டதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

BBC

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More