(க.கிஷாந்தன்)
பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களை தோட்ட மக்களுக்கே பகிர்ந்தளித்து விவசாய நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் இருந்து ஊர் திரும்புபவர்களும் இம்முயற்சியில் பங்கேற்கலாம் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகரமாக முறியடித்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைமைக்கு கொண்டு வருவதற்காக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் அட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் சுமார் இரு மணிநேரம் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், மாவட்ட அரச அதிபர், தோட்டப்பிரிவுகளுக்கு பொறுப்பான முகமையாளர்கள், மாவட்டத்துக்கு பொறுப்பான உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள், பிரதேச சபை தவிசாளர்கள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று தமது கருத்துகளையும், ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
குறிப்பாக பெருந்தோட்டப்பகுதிகளுக்கான நிவாரணத் திட்டங்கள், 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு, கொழும்பு உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து ஊருக்கு வருபவர்களுக்கான வாழ்வாதார ஏற்பாடுகள், மருத்துவம் ஆகியன தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டன.
இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்,
” கொரோனா வைரஸ் கொடூரமான நிலைக்கு சென்றுக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என பல தரப்பினரும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
எனவே, தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களை மக்களுக்கு வழங்கி விவசாயத்தை ஊக்குவிக்குமாறு முகாமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், விவசாயத்துறை அதிகாரிகளும் வருகைதந்திருந்தனர். விதைகள் விநியோகிக்கப்படும் வழிமுறைகள் குறித்து அவர்கள் விளக்கமளித்தனர்.
தோட்டப்பகுதிகளில் எத்தனை ஏக்கர் தரிசு நிலம் உள்ளது, ஒருவருக்கு எவ்வளவு பகிர்ந்தளிக்கலாம் போன்ற விபரங்களை வழங்குவதற்கு 10 நாட்கள் அவகாசத்தை முகாமையாளர்கள் கோரினர். அந்த விபரங்கள் முன்வைக்கப்பட்டதும் விவசாயத்தை ஆரம்பிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
5 ஆயிரம் ரூபா யார், யாருக்கு வழங்கப்படும் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. தினக்கூலிகளாக இருந்து தற்போது வேலையில்லாமல் இருப்பவர்களுக்கும் வழங்கப்படும். கிராம சேவகர்கள் ஊடாக பெயர், விபரம் திரட்டப்பட்டுள்ளன. நாளையும், நாளை மறுதினமும் தோட்டங்களுக்கே சென்று வழங்கப்படும்.
அதேவேளை, கொழும்பில் இருந்து நிறையபேரை அழைத்துவர ஏற்பாடு இடம்பெற்றிருந்தது. எனினும் மருதானை சம்பவத்தின் பின்னர் அது தடைபட்டது. தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றனர்.
பதற்றத்தால் நிறைய பேர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துகின்றனர். எனவே , பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
ஊருக்கு வந்த பின்னர் வீட்டுக்குள் இருந்து அரசாங்கத்தினதும், சுகாதார தரப்பினரினதும் ஆலோசனைகளை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.” – என்றார்.
அரச அதிபரின் கருத்து
” தோட்ட நிர்வாகங்கள் இடத்தை வழங்கும். விவசாய திணைக்களம் விதைகளை வழங்கும். எனவே, தோட்டத்தில் வேலை இல்லாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். எதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். நுவரெலியா மாவட்டத்திலுள்ள தரிசு நிலங்களிலும் விவசாயம் செய்தால் விளைச்சலை இரட்டிப்பாக்கலாம். நாட்டுக்கு தேவையான மரக்கறி விநியோகத்தை வழங்கலாம்.” – என்றார். #பெருந்தோட்டப்பகுதி #தரிசுநிலங்கள் #விவசாயம் #கம்பனிகள் #அவகாசம் #கொரோனா