மனிதர்களின் கட்டுமீறிய வாழ்வியல் நடைமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால் இயற்கையில் மனிதர்களும், ஏனைய உயிர்களும் இணைந்து வாழ்வதலிற்கான தன்மை அசாத்தியமாகின்றன. இன்றைய உலகு எதிர்கொள்ளும் சவாலாக கருதுவது இயற்கை சுரண்டப்படுதல் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்படைதலாகும். இதன் பின்னணியில் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டிருக்கும் எதிர்விளைவுகளை எம்மால் எதிர்கொள்வது என்பது முடியுமானதா? என்ற கேள்வியில் இருந்து நாளாந்த காலநிலை மாற்றமும், அதன் ஆபத்துக்களின் பட்டறிவும் வாழும் வாழ்வியலை மாற்றுவதற்கான முனைப்புக்களை முன்னெடுக்கப் போவதா அல்லது இயற்கைக்கு எதிரான நடைமுறையை கையாளப் போகின்றோமா என்ற புரிதல் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்குமானது.
ஏனெனின் இவை மிகப்பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் தன்மை உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பனிப்பாறைகள் உருகுதல், கடல்நீர் மட்டம் அதிகரித்தல், வெள்ளம், மழையில்லை, வரட்சி, புயல், தண்ணீர் பஞ்சம் என இன்னோரன்ன பிரச்சனைகளை உலகு எதிர்கொள்ள வேண்டி வரும். ‘மாசிமாதம் மரமும் குளிரும்’ என்ற முன்னோர் பொதுமொழிகளெல்லாம் மாறி காலநிலை வௌ;வேறு விளைவுகளை கொண்டுள்ளது.
உலக சனத்தொகையின் வளச்சியின் நிமிர்த்தம் உருவான விஞ்ஞான கண்டுபிடுப்புக்களினால் இயற்கை ஒவ்வாத விளைவுகளை எதிர்கொள்கின்றது. இன்நிலையில் அமெரிக்கா போன்ற வல்லரசுகள் இயற்கையை பாதுகாப்பதிலிலும், அதன் நீடித்து நிலைத்துநிற்றலிலும் அக்கறையின்றி செயற்படுகின்றன. இயற்கை மூல வளங்களை தனியார் மயப்படுத்தல் ஆக்குவதில் இன்நாடுகள் திட்டமிட்டு மேற்கொள்கின்றது. இதற்கு அடிப்படை இவ்வல்லரசுகள் பெரு நிறுவனங்களையும், முதலாளித்துவத்தையும் சார்ந்து இயங்கி வருவதனாலாகும். புவியில் பசுங்குடில் வாயுவை கட்டுப்படுத்துவதாக ஒப்புக்கொண்டால் பெரு நிறுவனங்களையும், பொருளாதார முறைமைகளையும் மாற்ற வேண்டி வரும். அத்துடன் அரசின் இருப்பிற்கும் கேள்வி எழும், சௌகரியங்களும், மறைமுக இலாபங்களும் அற்றுப்போகும். இதற்கு ஏற்றால் போலே பல்தேசிய கம்பனிகளின் தரகரான உலகவங்கி அதற்கு சாதகமான திட்டங்களை வகுக்கின்றது.
இருந்தும் இயற்கையை பாதுகாப்பதற்கான உலக நாடுகள் இணைந்த பேரவை மாநாடுகள்(யு.என்.எப்.சி.சி.சி) வருடா வருடம் ஒன்றுகூடி சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்து வெறும் எழுத்துமூல திட்டங்களை வகுத்து கையொப்பங்களையும் இட்டுக் கொண்டுதான் இருக்கச் செய்கின்றன. எழுத்துமூல ஒப்பந்தங்களுக்கு ஒத்துப்போனாலும் செயற்பாடு ரீதியாக ஆக்கபூர்வமற்ற செயல்வடிவங்களே காணப்படுகின்றது.
இந்தவகையில் தற்கால உலக நிலவர பிரதிபலிப்புக்கள் மூலம் காலநிலையில் ஏற்கனவே இருந்த நிலையைவிட நாம் உணராத அல்லது எதிர்பாராத சாதகமான துலங்கலை காட்டி நிற்கின்றது. அதாவது மிகத்தீவிரமாக இயங்கிய விஞ்ஞான உலகை, இயக்கத்தின் மையப்புள்ளியில் நின்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரொனா வைரஸ் இதன் கட்டுப்படுத்தலில் அரசும், மக்களும் கடைப்பிடித்த முனைப்புக்களின் விளைவாக இதனை கருதமுடியும். இக்கூற்றை உறுதிப்படுத்தலிற்காக நாசா விண்வெளி ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்ட தரவினை குறிப்பிடலாம்.
இத்தரவினை அடிப்படையாக கொண்டு அவதானத்தை செலுத்துவதன் மூலம், இயற்கையோடு இணைந்து சமநிலையாக வாழ்ந்த மனிதர்களை தொழிற்புரட்சி வருவித்த விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் இன்நிலமையை மாற்றுகிறது. இதனால் ஏற்பட்ட அபரீத மாற்றம் சுற்றுச் சூழல் காரணிகளின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கும் நிலைமையினை தோற்றின. இன்னும் விரிவாக கூறின் இதன் விளைவாக உருவாகிய இயந்திரங்களின் கண்டுபிடிப்பு, தொழிற்சாலைகளின் தோற்றம், போக்குவரத்து துறையில் ஏற்பட்ட அபரீத மாற்றம், மின்சார இயங்கியல் பொருட்களின் வருகை இவையனைத்தும் இம்மாறுதல்கள் ஏற்பட காரணமாகின்றன.
கொரொனா உலகில் 95 வீதத்துக்கு மேற்பட்ட நாடுகளில் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாடுகளும் உற்பத்திகளை, ஏற்றுமதிகளை, வெளிநாட்டு உள்நாட்டு போக்குவரத்துக்களை கட்டுப்படுத்தியும் அல்லது முற்றாக தடைசெய்தும் இருக்கின்றது. அத்துடன் இயந்திரங்களாக இயங்கிய மனிதர்களையும் வீடுகளிற்குள்ளே முடக்கி சுய தனிமைப்படுத்தலில் ஆக்கி இருக்கின்றன. இதனால் புவிவாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாகவும், பருவகால மாற்றத்திற்கும் காரணமாய், கட்டுக்கணங்கா உருவாகிய கரியமில வாயுக்கள் குறைவடைந்து உயிரினங்கள் வாழ்தலிற்கு ஏதுவான வளிகள் உருவாகியிருக்கின்றன. அண்மையில் கொழும்பு நகரத்தில் ஒட்சிசன் வாயுவின் அடர்த்தி 50 வீதம் என கணிக்கப்பட்டது. வாகன போக்குவரத்துக்கள் இன்மையே இதற்கு காரணமாகும். நீண்ட காலத்திற்கு பிற்பாடு இம்மாற்றம் உணரப்பட்டு இருக்கின்றன.
உலகளாவிய ரீதியில் உற்பத்திகள் குறைவடைந்து தொழிற்சாலைகளின் இயக்கநிலை அற்ற வெளியில், இவற்றின் கழிவுகள் நீர்நிலைகளுடன் கலந்து கடல், ஆறு, குளம், அருவி மாசுபடும் தன்மை குறைவடைந்து இருக்கின்றது. இதனடியாக பல கடற்கரைகளில் இதுவரை கண்டறியாத பெருவகையான மீனினங்கள் வருகை தருவதை குறிப்பிட முடியும். மீனினங்கள் வாழ்தலிற்கான கழிவற்ற நீர் உள்ளமையினால் வந்திருக்க கூடும். ஆகவே நீர்வாழ் உயிரினங்கள் சுத்தமான காற்றை, நீரை, உணவை பெறுகின்ற நிலமைக்கு மாற்றி இருக்கின்றன.
இயற்கை மீது தொடுக்கும் வன்முறை சுரண்டல்களான காடழிப்பு, மண்ணகழ்தல், மலைகள் உடைத்தல் போன்றனவும் பொலித்தின் பாவனையின் தன்மையும் குறைவடைந்தும் உள்ளன. இதன் நிமிர்த்தம் மண்வாழ் உயிரினங்களின் இயக்கம் அதிகரித்து மண்வளம் பேண வழியமைத்திருக்கின்றன. இதன் விளைவாக மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் பல காட்டுவாழ் மிருகங்கள், பறவைகள் வருகை தந்தமை பற்றி அண்மையில் வெளிவந்த செய்திகளை பொருத்தி பார்க்கவும் முடியும்.
சமகால மனித நடைமுறையின் பிரதிபலிப்பு இயற்கையியல் ரீதியாக பல மாறுதல்களை கொண்டிருக்கின்றது. இம்மாறுதல்கள் இயற்கையின் சமநிலைக்கு சாதகமாய் உள்ளன. இச்சந்தற்பத்தை எடுகோளாக கொண்டு அரசும், மக்களும் எவ்வாறு கையாளப்போகின்றார்கள் என்பதை எதிர்காலமே பதில் சொல்லும். அவதானிப்புக்களின் முடிவாய் தெரிவது உலக அரசுகள் கொரொனா கட்டுப்படுத்தலிலும், பொருளாதரத்தை கட்டியெழுப்புவதையும் பேசும் அளவிற்கு காலநிலை மாற்றம் சார்ந்து கவனிக்காதவர்களாக அல்லது உணராதவர்களாகவே உள்ளனர். குறிப்பிட்ட நாட்களின் உலக முடக்கத்திற்குள் இம்மாற்றங்களை உணரக் கூடியதாய் இருப்பின் இப்புரிதலை அடிப்படையாய் வைத்து காலநிலை மாற்றம் சார்ந்து வலுவான திட்டங்களையும், கொள்கைகளையும் தாயரிக்க வேண்டிய தேவை முக்கியமாகின்றன. இதனை வளிமண்டல ஆரட்சியகம், இயற்கையியல் சார் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் முன்வந்து ஆக்கபூர்வமாக பன்முகப்பட்ட நிலையில் இயங்குதல் என்பது அவசியம்.
அமெரிக்காவில் இன்று கொரொனா வைரஸ் ஏனைய நாடுகளை விட எதிர்பாராத வகையில் அதிக உயிரிழப்புக்களையும், தொற்று பாதிப்புக்களையும் கொடுத்துள்ளது இதற்கு அடிப்படை அம்மக்களின் இயற்கைக்கு மாறான செயற்கையும், ஆடம்பரமும் நிறைந்த வாழ்வியல்முறையாகும். உலக நாடுகளில் தங்களைப்போன்று அதிகமான கொரொனா இரசாயன பரிசோதனைகளை எவரும் செய்திருக்க மாட்டார்கள் என தமது தொழில்நுட்பத்தை அடையாளப்படுத்தும் அமெரிக்கா அடிப்படையில் தாம் செய்துகொண்டிருக்கும் இயற்கைக்கு மீறிய வாழ்வுமுறை சார்ந்து பேசவில்லை. இற்றைக்கு உலக அளவில் ஒரு அமெரிக்கர் 5 டொன் (5000 கிலோ) கரியமில வாயுவை வெளியிட்டு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றது. (தரவு- புவிவெப்பமடைதலும் காலநிலை பிறழ்வும், பூவுலகின் நண்பர்கள்) இவை வளர்ச்சியடையாத ஏனைய நாட்டுமக்களின் வெளியிடுகைக்கு அதியுச்ச வித்தியாசமாகும். வல்லரசுகளில் வாழும் மக்கள் சொகுசு வசதிகளிற்காக அதிக கரியமில வாயுவை வெளியிடுகின்றனர். இரண்டாம் தரப்பினர் உயிர் வாழ்தலிற்காக வெளியிடுகின்றனர். இவர்களும் முதலாம் தரப்பினர் போன்று வாழ முற்படும்போது புவியில் கரியமில வாயுவின் நிலை என்ன என்ற கேள்வி எழுகின்றது. இதனைப் புரிந்தும் ஆடம்பர நாடுகளில் வாழவேண்டுமென நினைக்கும் தரப்பினர் இன்னும் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் ஆட்கொண்ட காலனிய ஆட்சி முறை அன்நாடுகளில் காணப்பட்ட இயற்கை வளங்களை சுரண்டியும், திட்டமிட்டு அழித்தும் இருக்கின்றன.
உலகமயமாக்கம் செல்வந்த நாடுகளின் உற்பத்திகளின் நஞ்சுப்பொருட்களையும், கழிவுகளையும் கொள்வனவு செய்யும் நாடுகளிற்கு கொட்டுவதற்கு திட்டமிடப்பட்டவை. ஒரு நாட்டில் வாழும் மக்கள் எவ்வளவு பணக்காரர்களாக வாழ்கின்றார்களோ அதற்கு ஏற்றால்போல் பசுங்குடில் வாயுக்களையும் வெளியிடுகின்றனர். உலகம் நாள்தோறும் எண்ணிலடங்கா மின்சாரத்தை பயன்படுத்துகின்றது. இயற்கையாக இயங்குபவை மாறி மின்சார இயக்கப்பொருட்கள் அதிகரித்ததன் விளைவாகவும், பயன்படுத்தலில் சிக்கனம் இன்மையும் இதற்கு காரணமாகும். வீதி மின்விளக்குகள் சார்ந்து இதுவரை எந்த அரசிடமும் முறையான திட்டமிடல்கள் இன்மையால் அதிகமான மின்சாரம் வீண்விரயமாகின்றது.
இலங்கை மின்சாரசபையின் மின் உற்பத்தி குறைவாக உள்ளமையினால் தனியார் நிறுவனங்களிடம் கொள்வனவு செய்கின்றன. ஆனால் முறையாக மின்சாரம் பயன்படுத்துவதற்கான திட்டமிடல் அரசிடமும், மக்களிடமும் இருப்பின் இவற்றை கட்டுப்படுத்திக் கொள்ளமுடியும். நாள்தோறும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்த படுகின்றதோ அதுபோலவே இயற்கையும் அழிக்கப்படுகின்றது. இவற்றுடன் எரிபொருட்களையும் பொருத்திப் பார்க்கலாம்.
கொரொனாவின் தாக்கத்தின் விளைவு எதிர்கால பொருளாதாரத்தை எவ்வாறு அரசுகள் எதிர்கொள்ளப்போகின்றது என்ற நிலையில், வலுவான அரசுகள் முதலாளித்துவத்தை நோக்கி நகர்தல் அதிகரிக்க கூடும். இவை முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு சாதகமாக்கப்படும் ஏனெனின் இயற்கை மூலவளங்கள் பெருவணிகத்துக்குரியதாய் சுரண்டப்படுகின்றன.
இவ்விடத்தில் உலகை மீளுருவாக்கம் செய்யவேண்டிய தேவை எழுகின்றது. இவை உணவு, தொழில், உற்பத்தி, விவசாயம், போக்குவரத்து, பொருளாதாரம், கல்வி, அரசியல், வாழ்வுமுறை என பன்முகப்பட்டதாக அமையவேண்டும். ஆகவே உலக நாடுகள் இலாபகரமற்ற சரியான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தல் மிகமுக்கியம். அதைத்தாண்டி ஒவ்வொரு மனிதரும் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வுமுறை சார்ந்து சிந்தித்தல் கவனிப்புக்குரியவை. இதேவேளை பெருவணிக உற்பத்திகளை குறைத்தல், முதலாளித்துவம் அல்லது தனியார் மயப்படுத்தப்பட்ட வளங்களை மக்கள் மயப்படுத்தல். எடுத்துக்காட்டாக பொதுபோக்குவரத்து துறையை குறிப்பிடலாம். மேலும் உள்ளூர் உற்பத்திகளை தரமாக்குதல் போன்றவை ரீதியாக சிந்தித்தலும், புரிதலும் காலத்தின் தேவையாய் உணரப்பட்டுள்ளன.
இ.குகநாதன்