கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பெரும்பாலான நாடுகள் முடக்கநிலையில் இருந்துவரும் சூழலில், இன்று செவ்வாய்கிழமை முதல் நியூசிலாந்தில் முடக்கநிலை படிப்படியாக தளர்த்தப்படுகிறது. மேலும் அங்கு சில பாடசாலைகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் ஆகியவையும் திறக்கப்பட்டுள்ளதுடன் உணவகங்களில் இருந்து உணவை வாங்கிச் செல்லவும் மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் முடக்கநிலை தளர்த்தப்பட்டதனையடுத்து சுமார் 4 லட்சம் பேர் தங்கள் பணிகளுக்கு இன்று சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலின் அனைத்து மூலங்களும் கண்டறியப்பட்டுள்ளதால் அந்த போரில் வென்றுவிட்டதாக அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் நேற்றையதினம் தெரிவித்திருந்தார்..
மேலும் கொரோனா வைரஸை இல்லாது ஒழிக்கும் இலக்கை நியூசிலாந்து அடைந்துவிட்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறையின் தலைமை இயக்குநர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
இதற்கு நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றே இல்லையென்று அர்த்தம் கிடையாது எனத் தெரிவித்த அவர் ஆனால், நோய்த்தொற்று பரவலின் அனைத்து மூலங்களையும் கண்டறிந்துவிட்டோம் என்று அர்த்தம் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுவரை நியூசிலாந்து முழுவதும் 1500க்கும் குறைவானவர்களுக்கே கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களில் 80 சதவீதத்தினர் ஏற்கனவே குணமடைந்துவிட்டனர். மேலும் இந்த தொற்றின் பாதிப்பால் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #நியூசிலாந்து #முடக்கநிலை #கொரோனா