திரைப்பட உலகம், வணிகமயமாகிப் போன நிலையில், ஆங்காங்கே, சில திரைப்படங்கள், சமுகத்தை பிரதிபலித்து நிற்கவும் செய்கின்றன. அந்த வகையில், லக்ஷ்மி கிரியேஷன்ஸ் தயரிப்பில், அருள், சீனிவாஸ் இரட்டையர் ஒளிப்பதிவில், மரியா மனோகர் இசையில், இசக்கி கார்வண்ணனின் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த ‘பெட்டிக்கடை’ திரைப்படம், கார்ப்பேர்ட் கம்பனிகளின், அபரித வளர்ச்சியில், செயலற்று போய் நிற்கும், ‘பெட்டிக்கடைகளின் நிலையினையும், அபரித வளர்ச்சிக் கண்ட, கார்ப்பேர்ட் கம்பனிகளால் ஏற்படுகின்;ற, ஏற்படப்போகின்ற பாரதூரமான விளைவுகளையும்,’ படம்பிடித்துக் காட்டுகிறது.
இயல்பான மொழியும், யதார்த்தமான காட்சிகளும் தோரணை செய்யும் படத்தில், சமுத்திரகனி, மொசக்குட்டி வீரா, சாந்தினி, சுந்தர், அஸ்மிதா, வர்ஷா, நான் கடவுள் ராஜேந்திரன், ஆர் சுந்தர் ராஜன், ஆர். வி. உதயகுமார் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
திரைப்படம் முழுதும், பெட்டிக்கடை இல்லாமல் போனதன் அவலமும், அதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டு, இறுதியில் பெட்டிக்கடைக்காக போராடுவதும், போராட்டம் வெற்றியடைந்ததா இல்லையா என்பதே, திரைக்கதையாகக் காட்டப்படுகிறது.
இன்றைய நவநாகரீக உலகில், ‘படிப்பும் நடைமுறையும் வேறு வேறு’ என்ற அடிப்படையில், பலரும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், திருநெல்வேலி, பகுதியிலுள்ள ஒரு கிராமத்தின், மருத்துவமனைக்கு மருத்துவராகச் செல்லும் சாந்தினி, அவருக்கு ஏற்படும் வயிற்று உபாதை காரணமாக, ஓமத்திரவம் தேடிப் பெட்டிக்கடைக்கு செல்வதும், ஊரில் பெட்டிக்கடைகளே, இல்லை என்பதையும், டோர்டெலிவரி முறையாகவே, பொருட்கள் கொள்வனவு செய்யப்படுகின்றது என்பதையும், ஊரவர் கதைகளின் மூலம் தெரிந்துக் கொள்ளும் அவர், பெட்டிக்கடை வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபடுவதும், போராட்டம் வெற்றி பெற்றதா இல்லையா? என்பதை அடியொட்டியே, படம் நகர்கிறது.
இடை இடையே வரும் நான் கடவுள் ராஜேந்திரனின், நகைச்சுவைகள், டோர்டெலிவரியின், கபடத்தனங்களை, படம்பிடித்துக் காட்டுவதன் மூலம், சிந்தனைக்குரியனவாக, அமைக்கப்பட்டுள்ளன. திரைப்படம் இவ்வாறு கதை சொல்லி இருக்க, இது கதையல்ல, நிஜம் என்ற நிலையில், நின்றும் சிந்திக்க வேண்டியத் தேவையும் இருக்கிறது.
வாழ்வதற்காக உழைத்தல் என்ற நிலைமாறி, உழைப்பதற்காக, வாழுதல் என்ற நிலையில், வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் நாம், எல்லாமே, வணிகமயமாகிப் போன, சூழ்நிலையில் உணவு தொடர்பில் சிந்திக்கின்றோமா என்பது கேள்விக்குறியே.
குறிப்பாக, ஆன்லைன் கொள்வனவிற்கு பழக்கப்பட்டு போன நாம், ஆடை தெரிவு முதல் காய்கறித் தெரிவு வரை எல்லாவற்றிலும், யாரோ ஒருவரின் தெரிவிலேயே தங்கி நிற்கிறோம் என்பதே, கசப்பான உண்மை. இந்நிலையில் தான், உள்ளுர் உற்பத்திகள் குறித்து, நமது கவனமும், தளர்வடைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது.
ஒரு கிராமமொன்றிற்குத் தேவையான அனைத்து பொருட்களையும், உள்ளுர் உற்பத்திகளையும் கொண்டு, ஏறக்குறைய மூன்று, நான்கு பெட்டிக்கடைகளாவது, ஒரு கிராமத்தில் இருக்கும். அங்குத் தெரிவு என்பது அவரவர் விருப்பத் தெரிவாக இருப்பதுடன், நேரடி தெரிவிற்கும் அவரவர் விருப்பத் தெரிவிற்கும் இடமிருக்கும்.
ஆனால், ஆன்லைன் கொள்வனவில், இத்தகைய நேரடித் தெரிவு என்பது, திரையோடு மட்டிட்டு நிற்பதால், திரைக்குப் பின்னால் மறைந்திருக்கும், பேரிடர்கள் அல்லது பின்விளைவுகள் அவ்வளவு எளிதில், நுகர்வோருக்குத் தெரிந்துவிட வாய்ப்பில்லை.
ஆன்லைன் கொள்வனவில், மலிவு விற்பனை என்பதாக கொள்வனவு செய்யப்படும், ஆடைகளே தெரிவு ஒன்றாகவும், கிடைக்கப் பெறுவது ஒன்றாகவும் இருக்கின்ற பட்சத்தில், உணவு கொள்வனவு என்னவாக இருக்கப் போகின்றது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
குறிப்பாக, உள்ளுர் உற்பத்திகளை, உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதாக, உள்ளுர் சந்தைப்படுத்தல் முறைகளை வலுப்படுத்துவதாக, ஒட்டுமொத்த கிராமத்தையும் போஷிப்பதாக அமைந்த, பெட்டிக்கடைகள், நலிவடையச் செய்யப்பட்டு, காப்பேர்ட் கம்பனிகள், இலாப நோக்கில் எல்லாவற்றையும், வணிகமாகவும், முதலீடுகளாகவும் கொண்டு, செயற்பட்டுவருவதையும் அவதானிக்க முடிகிறது.
ஆக, நவநாகரிகம் என்ற பெயரில், போலியான போர்வையாக, கட்டமைக்கப்பட்டிருக்கும், இத்தகைய கொள்வனவு முறைகள், பெட்டிக்கடைகளின் கொள்வனவு முறைகளைப் புறந்தள்ளிய அரசியல் பின்னணியும் இதுவே என்றுக் கருதக்கிடக்கிறது.
இன்றளவில், நெகிழி அரிசி, இறப்பர் முட்டை என இன்னோரன்ன உணவு பொருட்களும், கலப்படஞ் செய்யப்பட்டும், போலியாகவும் விற்பனை மற்றும் கொள்வனவு செய்யப்படும் ஒரு அவல சூழலில், மனிதர் அவர்தம் உணவு தெரிவு என்பது, கலப்படமற்ற தெரிவாக அமைய வேண்டிய இன்றியமையாத தேவை ஏற்பட்டு இருக்கிறது. இத்தகையத் தெரிவு என்பது, பெட்டிக்கடைவழி சாத்தியப்பாடுடையதாக இருந்த, யுகமொன்றை கடந்து வந்த நாம், மீளவும் அத்தகைய பெட்டிக்கடைகளை நோக்கி, நகர வேண்டிய தார்மீக கடப்பாட்டை உடையோம், என்ற நிதர்சன உண்மையையே, இசக்கி கார்வண்ணனின் திரைமொழி வழி பெட்டிக்கடை பேசிநிற்கிறது எனலாம்.
இரா. சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.