Home இலங்கை இலங்கையில்  பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியது – தொற்றாளர்களின் எண்ணிக்கை 1164 ஆக உயர்ந்தது.

இலங்கையில்  பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியது – தொற்றாளர்களின் எண்ணிக்கை 1164 ஆக உயர்ந்தது.

by admin

இலங்கையில்  பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சீனன்குடா காவற்துறைப் பிரிவிற்கு உட்பட்ட மங்கிபிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர்களில் 52 வயதான பெண் ஒருவர் இன்று அதிகாலை மரணமானதாக சீனன்குடா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த பெண் இருதய நோயாளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 21 திகதி குவைத்திலிருந்து நாடு திரும்பிய 162 நபர்களை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருந்த நிலையில் இம்மரணம் இடம்பெற்றுள்ளது. இறந்தவர் 52 வயதான பயாகல்ல பிரதேசவாசி எனவும்,  இன்று அதிகாலை 4.30 மணியளவில் மரணம் நிகழ்ந்துள்ளதாகவும்  காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலம் பொதிசெய்யப்பட்ட நிலையில் இராணுவ முகாமில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறந்தவரின் இரத்தமாதிரியும் அவருடன் தங்கி இருந்த இருவரின் இரத்தமாதிரிகளும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொரோனா நோய் தொற்று சம்பந்தமான பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 21 திகதி கட்டார் நாட்டிலிருந்து 142 நபர்கள் நாடு திரும்பிய நிலையில் திருகோணமலை கிளம்ப்பம் பேக் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மேலும் இருவருக்கு  கொரோனா…

இலங்கையில் மேலும் இருவருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1164 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 695 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 459பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டள்ளது…

இலங்கையில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த 14 பேரும் குவைத்தில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1162 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 695 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 457 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More