Home இலங்கை வடக்கில் திருமண மண்டபங்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்

வடக்கில் திருமண மண்டபங்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்

by admin

திருமண, வரவேற்புபசார மண்டபங்கள் மற்றும் விருந்தினர் விடுதிகளுக்கான கொவிட் – 19 சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த இடப்பரப்பினுள் அனுமதிக்கப்படக் கூடிய ஆகக் கூடிய பங்குபற்றுனர் தொடர்பான தகவல், பின்பற்றப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் மண்டப வாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நடைபாதைகள், ஆசனங்கள், அலங்கார அமைப்புகள் மற்றும் ஏனைய நோக்கங்களுக்கான இட ஒதுக்கீடுகளைக் கருத்திற் கொண்டு மண்டபத்தின் இடப்பரப்பிற்கு ஏற்ற வகையில் ஆசனங்களின் அனைத்துப் பக்கங்களிலும் ஒரு மீற்றர் தனிநபர் இடைவெளியைப் பேணக்கூடிய வகையில் அனுமதிக்கக் கூடிய விருந்தினர்களின் எண்ணிக்கை முகாமைத்துவத்தினரால் தீர்மானிக்கப்பட வேண்டும். எந்தவொரு மண்டபத்திலும் ஆகக் கூடியது 100 பங்குபற்றுனர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட முடியும்.

நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்ட எவரேனும் சுகவீனமாக உணர்ந்தால் நிகழ்வில் பங்குபற்றுவதை தவிர்ப்பதை உறுதிப்படுத்துவது நிகழ்வின் ஏற்பாட்டாளரின் பொறுப்பாகும்.

மண்டபத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அதாவது வரவேற்பு பகுதி, நிகழ்வு நடைபெறுமிடம், உணவு பரிமாறுமிடம் போன்ற அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து இருக்கை ஒழுங்கமைப்புகளிலும் ஆசனங்களின் அனைத்துப் பக்கங்களிலும் ஒரு மீற்றர் தனிநபர் இடைவெளி பின்பற்றப் படுவது கட்டாயமாகும்.

மண்டபத்தினுள் சிறந்த காற்றோட்ட வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். வளிச் சீராக்கி பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் போதுமான புதிய காற்று வெளியிருந்து உள்வாங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

கைகளைச் சரியான முறையில் சவர்க்காரமிட்டுக் கழுவுவதற்கான வசதி மண்டபத்தின் நுழைவாயிலில் பொருத்தமான இடத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படும் இடத்தில் கைகளை தொற்று நீக்கம் செய்து கொள்வதற்கு இலகுவாக கிடைக்கக் கூடிய வகையில் பொருத்தமான பல இடங்களிலும் கை தூய்மையாக்கிகள் இருப்பது உறுதிப் படுத்தப்பட வேண்டும்.

உணவு பரிமாறும் பகுதியில் உணவு வகைகள் அதற்கென நியமிக்கப்பட்ட பணியாளரால் மாத்திரம் பரிமாறப்பட வேண்டும். சுயமான உணவுப் பரிமாறுதல் அனுமதிக்கப்படக் கூடாது.

பாதுகாப்பான குடிதண்ணீர் மற்றும் பானங்கள் ஒவ்வொருவருக்கும் அதற்கென நியமிக்கப்பட்ட பணியாளரால் மாத்திரம் வழங்கப்பட வேண்டும். குடிதண்ணீர், பானங்களை வழங்க சூழலுக்குப் பாதிப்பற்ற கடதாசிக் கோப்பைகள் பாவிப்பது வரவேற்கத்தக்கது.

நிகழ்வு ஒன்றுக்காக ஒருவர் மண்டபத்தைப் பதிவு செய்ய வரும் போது தற்போது நடைமுறைப்படுத்தப் படுகின்ற சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய துண்டறிக்கை கட்டாயமாக சேவை பெறுநருக்கு வழங்கப்பட வேண்டும்.

நிகழ்வில் கலந்து கொள்ளுகின்ற அனைவரும் சரியான முறையில் முகக் கவசத்தை அணிந்திருப்பது உறுதிப் படுத்தப்பட வேண்டும். நடன மற்றும் இசை நிகழ்வுகளில் தனிநபர் இடைவெளி பேணப்படும் வாய்ப்புகள் குறைவென்பதால் அவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும்.  எந்தவொரு நிகழ்விலும் மதுபானம், புகைப்பொருள் பாவனை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

சுகாதார, பாதுகாப்பு நடைமுறைகளுக்கு பொறுப்பாக பணியாளரொருவர் நியமிக்கப்படுவதுடன் நிகழ்வுகளின் முன்னாயத்தம் முதல் இறுதி வரை சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படுவது கண்காணித்து உறுதி செய்யப்பட வேண்டும்.

கொவிட் – 19 பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டல்கள் நிகழ்வின் ஆரம்பத்திலும் நிகழ்வு நடைபெறும் போதும் ஒலிபரப்பப்பட வேண்டும். நிகழ்வு நிறைவடைந்ததும் மண்டபத்தின் அனைத்துப் பகுதிகள், தளபாடங்கள், பாவனைப் பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும்.

கொவிட் – 19 தொடர்பான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் விண்ணப்பம் மண்டபத்தின் உரிமையாளரால் முழுமைப் படுத்தப்பட்டு பகுதிக்குரிய உள்ளூராட்சி அதிகார சபைக்கும், பிரதியொன்று பகுதிக்குரிய சுகாதார மருத்துவ அதிகாரிக்கும் சமர்ப்பிக்கப்படுவதுடன் தற்போது நடைமுறையிலுள்ள அனைத்து நடைமுறைகள் தொடர்பில் மண்டபத்தின் உரிமையாளரே பொறுப்புக் கூறவேண்டியவராவார். என குறிப்பிடப்பட்டுள்ளது.  #திருமணமண்டபங்கள் #கொவிட்19  #சுகாதார

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More