இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச எண்ணிக்கையாகக் கடந்த 24 மணி நேரத்தில் 9887 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 294 பேர் இறந்துள்ளனர்.
இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236,657 ஆக உயர்ந்துள்ளது. 6642 பேர் இறந்துள்ளனர் என இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று உள்ளது. இந்த மாநிலங்களில் 4300க்கும் மேற்பட்ட தொற்றுகள் உள்ளன.
சண்டிகர், கோவா, மணிப்பூர், புதுச்சேரி, லடாக், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறைந்த எண்ணிக்கையிலான தொற்று உள்ளது. இந்த பகுதிகளில் 1 முதல் 350 தொற்றுகள் உள்ளன.
அதே போல ஹரியானா, ஜம்மு காஷ்மீர், தெலங்கானா, ஒடிசா, பஞ்சாப், அசாம், கேரளா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தொற்று மிதமான எண்ணிக்கையில் உள்ளது. இந்த மாநிலங்களில் 352 முதல் 4300 வரை தொற்று எண்ணிக்கை உள்ளது.
இந்திய அரசால் இதுவரை 45 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
உலக நிலவரம் என்ன?
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 6-ம் இடத்தில் உள்ளது.
கிட்டதட்ட 19 லட்ச தொற்றுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகள் உள்ளன. இறப்பு எண்ணிக்கையைப் பொருத்தவரை அமெரிக்காவில் 1 லட்சம் பேரும், பிரிட்டனில் 40 ஆயிரம் பேரும், பிரேசிலில் 34 ஆயிரம் பேரும், இத்தாலியில் 33 ஆயிரம் பேரும் இறந்துள்ளனர். அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை குறையாமல், ஒரே நிலையில் தொடர்வது மக்களை கவலையடைய வைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 922 பேர் இறந்துள்ளனர்.
2 மில்லியன் தடுப்பூசி
இந்தநிலையில் கோவிட் 19 வைரசைத் தடுக்க 2 மில்லியன் தடுப்பூசிகளை அமெரிக்கா தயார் நிலையில் வைத்துள்ளது என்றும், இதை அதிகளவிலான மக்களுக்கு செலுத்தி சோதிப்பதற்கு முன்பு விஞ்ஞானிகளின் அங்கீகாரத்தைப் பெறுவது முக்கியம் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனாலும், இது எந்த மருந்து அல்லது எந்த நிறுவனம் தயாரித்துள்ள மருந்து என்பதை டிரம்ப் விளக்கவில்லை. இது எப்போது மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்படும் என்பதற்கான காலவரையறையையும் அவர் கூறவில்லை.
பொது இடங்களில் மாஸ்க் அணியுங்கள்
கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்க, பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
சில நாடுகள் ஏற்கனவே பொது இடங்களில் மாஸ்க் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளன. கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுவதை மாஸ்க் குறைக்கும் என்றும், மாஸ்க் அணிவதால் முழு பாதுகாப்புடன் இருப்பதாக மக்கள் உணர வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
BBC..