Home இலங்கை மாவீரன் பண்டாரவன்னியன் வரலாறு கற்பனையா? நிஜமா? சுரேஸ்குமார் சஞ்சுதா…

மாவீரன் பண்டாரவன்னியன் வரலாறு கற்பனையா? நிஜமா? சுரேஸ்குமார் சஞ்சுதா…

by admin

பண்டார வன்னியனது வரலாறு கற்பனையா? நிஜமா? இந்தக்கேள்வி எழுந்ததன் விளைவாக தான் திரு.முல்லைமணி அவர்களுக்கு முன்னைய காலத்தில் வாழ்ந்தவர்கள் இதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பது தெரியவருகிறது. பண்டார வன்னியனின் வரலாறானது கற்பனையில் உதித்ததல்ல. அது கருணதந்திர கதையாக அல்லது வாய்மொழி மூலம் பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இக்கதையை உண்மை என்று எவரும் ஆரம்பகாலத்தில் உறுதிப்படுத்தவில்லை. திரு.முல்லைமணி அவர்களின் முயற்சியாலும் வன்னியில் எழுந்த பிரதேச விழிப்புணர்வினாலும் பண்டார வன்னியனின் கதை நிஜமென்றும் கற்சிலை மடுவில் பண்டார வன்னியனின் நினைவுக்கல் உண்டென்றும் உறுதிப்படுத்தப்பட்ட பின் தான் பண்டாரவன்னியனின் வரலாறு நூல்வடிவம் பெற்றது எனலாம்.

அந்தவகையில் குறுநில மன்னராகிய பண்டார வன்னியனின் சரித்திரம் மறைக்கப்பட்டு வெளிக்கொணராது இருந்த வேளையில் இவர்களது வீர வரலாறுகளை வரலாற்று ரீதியாகவும் ஆவண ரீதியாகவும் வெளிக்கொண்டு வந்த பெருமை முல்லைமணி ஐயா அவர்களைச் சாரும்.

வன்னி மண் மக்கள் உழுது பண்பட்ட மண், அந்நியரைத் தொழுது புண்படாத மண், இந்த மண்ணின் வரலாறு தகுந்த ஆராய்ச்சிக்குரியது. இந்த மண்ணை ஆண்ட மன்னர்களின் வீர வரலாறு பற்றியும் இந்த மண்ணில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறு பற்றியும் போதியளவ இலக்கியங்கள் வெளிவரவில்லை. இந்த மண்ணின் வரலாறு இங்கு கோலாச்சிய பண்டாரவன்னியனின் வீர வரலாற்றின் மூலம் உலகத்தி;ற்கு தெரிய வந்தது. தமிழ் மக்களின் இதயத்தை கவர்ந்த ஒரு வரலாறாக பண்டாரவன்னியனின் வரலாறு இடம்பிடிக்கின்றது. அந்தவகையில் அடங்காப்பற்று வன்னியில் ஆட்சி புரிந்த பண்டாரவன்னியனின் வரலாறு நிஜம் என்பதற்கு பல வரலாற்று சான்றுகளை முன்வைக்கலாம்.

ஈழத்தமிழர் வீரத்தைப் பறைசாற்றி நின்;;ற மாவீரர்களில் பண்டார வன்னியனும் ஒருவன். தமிழன் வீரத்திலும் மானம் காப்பதிலும் சளைத்தவன் அல்ல என்பதனை உலகிற்கு படமிட்டுக் காட்டிய வீரன். வன்னி மண்ணின் மாவீரன் ‘குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்’ 1785 காலத்தில் பிறந்தவராவார். இலங்கைத்தீவின் வடபுலத்திலுள்ள வன்னி இராட்சியத்தை ஆண்ட மிக வலிமை மிக்க அரசனாக விளங்கிய இவர் வரலாற்று ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் பலம் பொருந்திய ஒரு தலைவனாக விளங்கினான். வன்னி இராச்சியம் என்பது மன்னார், வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு, ஆகிய பிரதேசங்கள் என வரலாற்று ஏடுகள் விபரிக்கின்றன.

ஈழநாட்டிலே பிரித்தானியரின் ஆட்சி ஏற்படுவதற்கு முன் பல நூற்றாண்டுகளாக நிலைபெற்ற குறுநில அரசுகளே வன்னிமைகள் என்ற சிற்றரசுகளாகும். மானிய முறையிலான சமுதாய அமைப்பு நிலைபெற்ற காலத்தில் இலங்கையின் அரசியலிலும் பொருளாதார அமைப்பிலும் வன்னிமைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பொதுவாக அவை இலங்கையின் வரட்சி வலயத்திலே அமைந்திருந்தன. அடங்காப்பற்று, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வன்னிநாடுகள் தமிழ் வன்னியராலேயே ஆளப்பட்டு வந்தன. குறுநில மன்னர்க்குரிய பதவியினைக் குறிக்கும் வன்னிமை, வன்னிபம், வன்னியன், வன்னிராசன் என்ற சொற்கள் சோழராட்சிக் காலத்திலே தொண்டை மண்டலத்தொடர்பின் காரணமாக இலங்கையிலே வழக்கில் வந்தன.

வட இலங்கையிலுள்ள வன்னிமைகள் யாழ்ப்பாண இராச்சியத்தினுள் அடங்கியிருந்தன. ஆரியச்சக்கரவர்த்திகள் பதின்மூன்றாம் நூற்றாண்டிலே பாண்டி நாட்டிலிருந்து படையெடுத்து வந்த சிங்கை நகரிலே இராசதானியமைத்து தமது ஆதிக்கத்தை பலப்படுத்திய நாட்களில் அவர்களுக்காதரவாயிருந்த பிரதானிகள் பலர் வன்னிநாடுகளின் மேற் படையெடுத்துச் சென்று அங்கிருந்த அதிகாரிகளை அகற்றிவிட்டு தமது ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் ஆட்சியிலே அடங்காப்பற்று வன்னிகளிலே ஒரு புதிய அதிகார வர்க்கம் தோன்றியது. வன்னி நாடு என்னும் பெயர் ஏற்படுவதற்கு முன்னர் இப்பகுதி ‘அடங்காப்பற்று’ என்னும் பெயரைப் பெற்றது.

இலங்கைத்தீவில் யாழ்ப்பாண இராச்சியமும் பிரித்தானியர்களின் அதிகாரத்திற்கு கட்டப்பட்டு நின்றவேளையில் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடியணிய மறுத்து வன்னி மண்ணைக் காத்து நின்ற மாவீரன் பண்டாரவன்னியன் தாய்மானம் காப்பதற்காய்த் தம்மையே தந்த நிற்கும் தன்மானத் தமிழர்கள் வாழ்கின்ற வன்னி மண் அடங்காப்பற்றென்றே அன்னியராலும் அழைக்கப்பட்டது. தன் இறுதி மூச்சு வரை அன்னியருக்கு அடங்க மறுத்த பண்டாரவன்னியனும் மண்ணாசையும் பதவி மோகமும் கொண்ட ஒருவனாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டான் என்பது அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய வரலாற்று நிகழ்வுதான்.

சுவாமி ஞானப்பிரகாசரே பண்டாரவன்னியனின் குடும்ப ஆய்வை முதன்முதலாக செய்தவராவார். முல்லைத்தீவில் கற்சிலைமடுவின் காடுகளுக்குள் மறைந்து கிடந்த பண்டாரவன்னியனின் நினைவைக் குறித்த கல்லொன்று தற்செயல் நிகழ்வாக 1960களின் ஆரம்பத்தில் கண்டெடுக்கப்பட்டது. அந்த நிகழ்வுகளின் ஆரம்பமே பண்டாரவன்னியனின் நினைவைக் குறித்து வரலாற்றுச் சான்றுகளைத் தேடும் பணியை ஆர்வமுள்ள பலருக்கு வழங்கியிருந்தது.

முல்லைமணி வே.சுப்பிரமணியம், அருணாசெல்லத்துரை முதலிய ஒரு சிலரின் தீவிரமான முயற்சியினால் கொழும்பில் அரும்பொருட் காட்சியகத்தில் அகப்பட்டிருந்த வரலாற்று ஆவணங்கள் சில வெளிச்சத்திற்கு வந்தன.

வீரஞ்செறிந்த மன்னர் பரம்பரையிலே வன்னி நாட்டின் கடைசி மன்னனாகவும், ஈழத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின்னமாகவும் திகழ்ந்தவன் பண்டாரவன்னியன். பண்டாரவன்னியனின்; முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன். பெரிய மெய்யனார், கயிலாய வன்னியர் என்று இரண்டு சகோதரர்கள் இருந்தனர். யாழ்ப்பாண வைபவமாலையின் பதிவுகளின் படி சோழப்பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழிவந்தவன். இவன் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் முற்பகுதியிலும் வன்னி அடங்காப்பற்றை ஆண்டான். இவனுடைய இராசதானி பண்டாரிக்குளம் என்னுமிடத்தில் அமைந்திருந்தது. வன்னி இராச்சியம் யாழ்ப்பாண இராச்சியத்திற்குக் கீழ் உள்ளது என்று தவறாக எண்ணிய அந்நியரின் கருத்தை அர்த்தமற்றதாக்கி ஒல்லாந்தருக்கும் ஆங்கிலேயருக்கும் பெருந்தொல்லை விளைவித்தவன் இந்த பண்டாரவன்னியன்.

தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அமைந்திருக்கும் வளாகத்தில் 1715ஆம் ஆண்டு மாவீரன் பண்டார வன்னியன் வரலாற்றைக் கூறும் ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்ட கோட்டையை 1795இல் ஆங்கிலேயர் மீளருவாக்கம் செய்தார்கள். அத்தோடு ஆங்கிலேயர்களின் படைத்தலைமையகமாகவும் இந்த கோட்டை விளங்கியது. அப்போது ஆங்கிலேயருடன் போர் புரிந்த வன்னி மண்ணின் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் 1803 ஆகஸ்ட் 25ஆம் திகதி இந்த கோட்டையை கைப்பற்றி இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றார் என வரலாறு கூறுகின்றது. இவ் உச்சபட்சமான போர் வெற்றியே அவரது நினைவு நாளும்.

1621ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போர்;த்துக்கேயர் வசம் வீழ்ந்தபோது வன்னியன் பறங்கிச் செட்டிக்குளம் அவர்களுடைய முன்னைய கோட்டையாக திகழ்ந்தது. 1782ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆளுகைக்குட்பட்ட பின்னர் மரிய செம்பட்டே சிறைப்பிடிக்கப்பட்டு கொழும்பு கோட்டையில் அடைக்கப்பட்டார். காவிய நாயகன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியன் வெள்ளையருடன் வன்னி மண்ணின் பெருமை காக்கப் போராடி தோற்கடிக்க முடியாத பண்டார வன்னியன் 1803 அக்டோபர் 31இல் லெப்டினன் வொண்ட்டிபேக் அவர்களால் கற்சிலை மடு எனும் இடத்தில் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

எனினும் பண்டாரவன்னியன் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் உறுதியாக இல்லை. பண்டாரவன்னியன் 1803ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டதை வைத்தே, அவன் இறந்த நாள் அக்டோபர் 31 என்று கணக்கிடுகின்றனர். ஆனால் 1810 வரை அவன் உயிரோடு இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் போரில் ஏற்பட்ட காயங்களினால் அவர் 1811ஆம் ஆண்டில் பனங்காமத்தில்; இறந்திருப்பார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

முல்லைமணி வே.சுப்பிரமணியம் அவர்கள் பண்டாரவன்னியனின் கற்சிலை மடுவில் உள்ள நடுகல்லினை அவதானித்து அவன் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இது மிகப்பெரும் வரலாற்று திரிபாகும். வன்னியில் ஒட்டச்சுட்டானில் உள்ள கற்சிலைமடுவில் வைத்த பண்டாரவன்னியன் வெள்ளையர்களால் தோற்கடிக்கப்பட்டார். இதன் நினைவாக பண்டாரவன்னியனுக்கு; கற்சிலை மடுவில் லெப்டினன் வொண்ட்டிபேக அவர்களால் நினைவுச்சிலை அமைக்கப்பட்டதாக வரலாற்று திரிபாக கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மை எதுவெனில் லெப்டினன் வொண்டிபேக்கின் தினக்குறிப்பில் இருந்த தகவலை பார்த்த 1904 – 1905இல் முல்லைத்தீவு உதவி அரசாங்க அதிபராக இருந்த ஆர். ஏ. ஜீ. வெஸ்ரிங் என்பவர் 1803இல் பண்டாரவன்னியன் கற்சிலைமடுவில் வொன் டிறிபேர்க் தோற்கடித்ததை உறுதிப்படுத்த, 1904இல் அதாவது சுமார் நூறு வருடங்களின் பின்னரே இவ் நடுகல்லை நிறுத்தினார். நடுகல் நிறுவப்பட்டு 8 வருடங்களின் பின்னர் 1913இல் ஜே.பி.லூயிஸ் அவர்கள் தொகுத்த ‘இலங்கையில் உள்ள நடுகற்களும் நினைவுச் சின்னங்களும்’ என்ற நூலிலே கற்சிலைமடுவில் உள்ள நடுகல் பற்றி குறிப்பிடுகிறார். அங்கு குறிப்பிடும் வாசகம் பின்வருமாறு:

HEREABOUTS CAPTAIN VON DRIE-
BERG DEFEATED PANDARA VAWNIYAN
31ST OCT 1803.

கல்வெட்டில் ; VANNIYAN  என்னும் சொல்  VAWNIYAN என்றே பொறிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தப்பியோடிய பண்டாரவன்னியன் 1811ஆம் ஆண்டுவரை ஆங்கிலேயப்படைகளை தாக்கும் திட்டத்தடன் நடமாடினான் என கதிர்காமநாயக்க முதலி ஆளுனர் ரேணருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார். இதன் மூலமும் பண்டாரவன்னியன் ஆட்சி உண்மை என அறியலாம்.

மேலும் பண்டாரவன்னியனின் ஆட்சி பற்றி முக்கிய ஓர் நூலாக J.P.LEWIS  என்பவரால் எழுதப்பட்ட “MANUAL OF VANNI”  எனும் நூல் காணப்படுகின்றத. ஜே.பி.லூயிஸ் அவர்கள் வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இருமாவட்டங்களில் 1892ஆம் ஆண்டுக்கு முந்தியிருந்த நாட்குறிப்பேடுகளின் துணையுடன் இந்த நூலை உருவாக்கியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டாரவன்னியன் பற்றியது:

  1. before it acquired the name(Vanni) it appears to have been known as the Adankappattu because it was independent of both Jaffna and Anuradhapura.
  2. it is characteristic of the spirit of this people that the Dutch met nowhere a more determined resistance than from one of the native princess the vannichi maria sempatte(Nallanachchiyar)
  3. pandara vanniyan……….. again revolted and undertook to expel the English from his country on august 25, 1803 attacked the government house at mullaitivu in great forcedrove out the garrison which was under the command of captain drieberg of the “invalid malays” and seized the fort captain drieberg withdrew his small garrison in good order to boats.which had been sent to mullaitivu to secure his retreat, and by this means to Jaffna. the insurgents were subsequently driven from mullaitivu and its neighbourhood by a detachment sent from trincomalee under captain Edward medge of the 19th regiment . A third under captain drieberg marched from mannar and surprised pandara’s forces at katchilaimadu at 5am on October 31, 1803.
  4. pandara vanniya had carried off three cannos from mullaitivu in 1803.

1782இல் வன்னியை கைப்பற்ற நடத்திய போர் பற்றி எழுதும் ஜே.பி.லூயிஸ் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ‘ஒல்லாந்தர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை. ஒல்லாந்தர் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திருகோணமலை வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடாத கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன் தான் பண்டாரவன்னியன’;.

முத்தரையன் கட்டு எனும் பிரதேசத்தில் பண்டாரவன்னியனின் அரண்மணை சரிவர பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் இன்றும் உள்ளது.
ஈழத்தின் ஏனைய பாகங்களிலே தாய் மண்ணின் சுதந்திரத்திற்காக அயராது போரிட்ட மன்னர் வரிசையிலே வைத்து எண்ணப்படக்கூடிய மாவீரன் பண்டார வன்னியனை ஈழத்து வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடத் தவறிவிட்டனர். வீரமும் செல்வமும் ஒருங்கேயமைந்த வன்னி இராச்சியம் பற்றிய குறிப்பபுக்களை ஈழத்த வரலாற்று ஏடுகள் கண்டறியமாட்டா. போர்த்துக்கேயர் இலங்கை வந்த போது கோட்டை இராச்சியம், கண்டி இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம் என்னும் மூன்று இராச்சியங்கள் இருந்தன என்றே இன்றைய மாணவர் படிக்கும் வரலாற்று நூல்கள் கூறும். வன்னி இராச்சியம் இருந்ததைப் பற்றி அறிய வாய்ப்பில்லை.

டச்சுக்காரரின் காலத்திலும் ஆங்கிலேயரின் காலத்திலும் அவர்களுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள் இலங்கையில் தேசிய வீரர்களாக கௌரவிக்கப்பட்டிருந்தனர். அந்தவகையில் 1982ஆம் ஆண்டு பண்டாரவன்னியன் தேசிய வீரராக அங்கீகரிக்கப்பட்டார். இவரை இரண்டு தடவைகள் இலங்கையின்  தமிழ்நாட்டில் வெள்ளையர்களை எதிர்த்து இறுதிமூச்சு வரை போராடியவன் தான் வீரபாண்டியன் கட்டபொம்மன். அவனைப்போல இலங்கையிலும் வெள்ளையரை எதிர்த்தவர் பண்டாரவன்னியன் எனக்கூறினால் மிகையாகாது. பிரபாகரன் கூட தனது போராட்ட அடையாளமாய் இலங்கை முழுவதையும் ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனை நிறுத்தவில்லை. பின்னாளில் வெள்ளைக்காரர்கள் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட வன்னி நில மன்னன் பண்டாரவன்னியனைத் தான் தனது போராட்டத்தின் அடையாளமாய் குறிப்பிட்டார். அதனாலேயே இன்றும் பண்டாரவன்னியனின் அடையாளங்கள் சிதைக்கப்பட முக்கிய காரணம்.

ஒரு சமூகம் கடந்த கால வரலாற்றுக்குள்ளிலிருந்தே தனக்கான உயர்ப்பினைப் பெறுகின்றது. சமகால வாழ்வுக்குரிய படிப்பினைகளையும் பண்புகளையும் வரலாற்று வேரில் இருந்து பெற்றுக்கொள்ளும் போதே அது தனது மண்ணுக்குரிய தனித்துவத்தையும், உறுதிப்பாட்டினையும் நிலைத்து நிற்கச் செய்யும் என்பது மறுக்க மடியாத உண்மையாகும். அந்தவகையில் ஈழத்தமிழர்களின் மேல் வரிச்சட்டங்களாக நிற்கும் மன்னர் பெருமக்களில் பண்டார வன்னியனும் ஒருவராவார். அந்தவகையில் பண்டாரவன்னியனின் ஆட்சி பற்றிய தொடர்ச்சியான வரலாறு கிடைக்கவில்லையாயினும் வன்னி பெருநிலப்பரப்பில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் பண்டாரவன்னியனின் வரலாறு நிஜம் என உறுதியாக கூறலாம்.

இது எனது சொந்தக்கட்டுரை என்பதை விட பல்வேறு சஞ்சிகைகள், நூல்கள், பத்திரிகைகளில் வெளிவந்த பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்களின் கட்டுரைகளின் தொகுப்பு என்று சொல்வதே சரியாகும். அத்துடன் பண்டாரவன்னியனின் அடங்காப்பற்று ஆட்சி பிரதேசங்களான முத்தரையன் கட்டு, குமிழமுனை, குஞ்சுபரந்தன், பனங்காமம், வன்னியன் மேடு போன்ற பிரதேசங்களை துறை சார் ஆய்வாளர்கள் முறையாக தொல்லியல் ஆய்வுக்கு உட்பட்டுத்தினால் பண்டாரவன்னியன் பற்றிய பல வரலாற்று உண்மைகள் வெளிவரலாம் என்பது எனது கருத்தாகும்.

சுரேஸ்குமார் சஞ்சுதா,
வரலாற்றுத்துறை,
கிழக்குப்பல்கலைகழகம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More