183
யாழ்ப்பாணம் ஈச்சமொட்டை பகுதியில் உழவு இயந்திரத்தால் மோதி பசு மாடு ஒன்றை கொலை செய்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க மறுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஈச்சமொட்டையில் வீதியைக் கடந்த பசு மாடு ஒன்றை அந்த வழியால் மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை மீறி மோதியது.அதனால் பசு மாடு உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்தது. இந்தச் சம்பவம் கடந்த மே 18ஆம் திகதி நடைபெற்றது.
சம்பவத்தையடுத்து அந்த இடத்திலேயே உழவு இயந்திரத்தைக் கைவிட்டு அதில் பயணித்த மூவரும் தப்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அந்தப் பகுதியிலிருந்த சிசிரிவி கமரா பதிவின் அடிப்படையில் கடந்த 20ஆம் திகதி சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவர் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போலின் உத்தரவில் இரண்டாவது தடவையாக வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 8ஆம் திகதி திங்கட்கிழமை உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற சாரதி எனக் குறிப்பிட்ட நபர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார்.
சந்தேக நபரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பதும் மன்றிடம் சுட்டிக்காட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிவான் ஏ.பீற்றர் போல், இரண்டாவது சந்தேக நபரையும் வரும் யூன் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். #யாழ்ப்பாணம் #ஈச்சமொட்டை #உழவுஇயந்திரத்தால் #பசுமாடு
Spread the love