176
யாழ்.தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.பி.போல் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்.தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக வைத்து நேற்றைய தினம் மாவட்ட செயலக உத்தியோகஸ்தர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலுக்கு இலக்கான உத்தியோகஸ்தர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் மல்லாகத்தை சேர்ந்த கனி குரூப் எனும் வன்முறை கும்பலை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களை காவல்துறையினர் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது , பிரதான சந்தேக நபரான மருதனார் மடத்தை சேர்ந்த ஜெகன் அல்லது கைலாயம் என்பவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் நீர்வேலி கரந்தன் பகுதியில் உள்ள வீடு சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
அதன் போது வீட்டினுள் இருந்தும் வீட்டின் பின் பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் இருந்தும் கைக்குண்டு ஒன்று, வாள்கள் மூன்று, மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, இராணுவச் சீருடைகள், தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவர்களை இன்றைய தினம் காவல்துறையினர் யாழ்.நீதிமன்றில் முற்படுத்தினார்கள். அதன் போது காவல்துறையினர் குறித்த சந்தேக நபர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வழக்கு தவணை இருந்ததாகவும் , அதற்கு செல்ல முதல் வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு , மல்லாகம் நீதிமன்றில் தாம் நின்றதாக காட்டிக்கொள்ள முயற்சித்தனர் என தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். #இராணுவசீருடை #சந்தேகநபர்கள் #விளக்கமறியல் #கனிகுரூப் #வாள்வெட்டு
Spread the love