ஹொங்கொங்கில் பாடசாலை மாணவர்கள் எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட தடை விதித்து உத்தரவு போடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பிடியிலிருந்த ஹொங்கொங் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஒரே நாடு இரண்டு அமைப்புகள் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறைந்தது 50 ஆண்டுகளுக்கு ஹொங்கொங் மக்களுக்கு சில உரிமைகளை வழங்குவதற்கு சீனா உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.
எனினும் அவ்வாறு நடந்துகொள்ளாது ஹொங்கொங் மக்களின் தன்னாட்சியை பறிக்கிற வகையில் நடந்து வருகின்ற சீனா அண்மையில் உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம் ஒன்றை அமுல்படுத்தி உள்ளது.
அந்த சட்டத்தின்படி ஹொங்கொங்கில் நேற்று முன்தினம் தேசிய சீன பாதுகாப்பு அலுவலகம் திறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பாடசாலை மாணவர்கள் எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட தடை விதித்து உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, மாணவர்கள் பாடல்கள் பாடுவது, கோசங்கள் போடுவது, வகுப்பறைகளை புறக்கணிப்பது உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கையிலும் இனி ஈடுபட முடியாது என்று பிரதேச கல்வி அமைச்சர் கெவின் யியுங் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஹொங்கொங் நூலகங்களில் இருந்து ஜனநாயக ஆதரவு புத்தகங்கள் அகற்றப்பட்ட நிலையில், இப்போது மாணவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும் #ஹொங்கொங் #மாணவர்கள் #அரசியல் #தடை #சீனா