ஒரு நியாயமான தீர்வுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலினால் கட்சிகளுக்குள்ளேயும் கட்சிகளுக்கிடையேயும் எழுந்துள்ள ஒற்றுமைக்குலைவு ஒரு வேதனையான விடயமாக அமைந்திருக்கிறது. இன்றைய எமது நிலையில் குழுக்களாகப் பிரிந்து நின்று சுயநலத் தேர்தல் அரசியல் செய்வது ஆரோக்கியமான அணுகுமுறையாக அமையாது.
எமது வாக்குகள் அற்ப சலுகைகளுக்காக விலை பேசப்படும் இந்த நிலையிலே எமது தேசிய நலனில் அக்கறை கொண்டுள்ள நாம் பிரிந்து நின்று சண்டையிடுவதற்கான காரணங்களைத் தேடுவதிலும் பார்க்க ஒற்றுமைப்பட வேண்டியதற்கான அவசியத்தையும் அதன் அனுகூலங்களையும் ஆராய்வது ஆரோக்கியமானதாக அமையும்.
இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு சரியான திசையில் சிந்திக்கும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பெரும் பொறுப்பு தமிழ் மக்கள் முன் எழுந்து நிற்கிறது. அரசியல்வாதிகளின் குறுகிய சுயநல சிந்தனைப் போக்குகள் காரணமாகவும் மாறிவரும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலை காரணமாகவும் எம்மக்கள் மனமுடைந்து விரக்தியடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் காரணமாக சரியாகச் சிந்தித்து வாக்களிக்கும் திறன் உடைய பலர் “வாக்களித்து என்ன பயன்” என்று எண்ணி வாக்களிக்காமல் இருந்து விடுவார்களோ? என்ற ஏக்கம் எம்மத்தியில் எழுகிறது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் விலைபோன வாக்குகளால் மட்டுமே எமது பிரதிநிதிகள் எனப்படுவோர் தெரிவாகும் ஒரு ஆபத்து நிலை இருக்கிறது. அவ்வாறு நடந்தால் அது ஒரு பிழையான செய்தியை உலகிற்கு தெரிவிப்பதாக அமைந்துவிடும்.
எனவே எத்தனையோ இடர்களைத் தாண்டி பயணித்த நாம் மனம் சோர்ந்து போகாது ஒரு தூய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக அனைவரும் அணிதிரண்டு சிந்தித்து வாக்களிப்போம். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் தவறாமல் சிந்தித்து வாக்களிக்கத் தூண்டுவோம். எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்வோம். #தேசியஇனம் #தேர்தல் #ஒற்றுமை #வறுமை #வாக்கு #தமிழ்மக்கள்பேரவை
தமிழ் மக்கள் பேரவை