ரஸ்ய நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் 2-ம் கட்டமாக பரிசோதிக்கும் பணி 20-ந் திகதி முதல் 28-ந் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி உலகின் பல நாடுகளில் நடந்து வருகின்ற நிலையில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள ரஸ்யாவில் உள்ள கேமலயா தொற்றுநோய் மற்றும் நுண்உயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், கடந்த மாதம் 18ம் திகதி மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தடுப்பூசியின் திறனை உறுதி செய்வதற்காக, மனிதர்களிடம் 2-ம் கட்ட பரிசோதனை, எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பமாகி . 28ம் திகதிக்குள்ள நிறைவடைந்துவிடும் என அந்நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் தங்கள் தடுப்பூசியை பதிவு செய்வதற்காக ஆவணங்களை தாக்கல் செய்வோம் எனவும் அதற்கு தேவையான ஆவணங்களை ஏற்கனவே சேகரிக்க தொடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் சிறிதளவு தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கும் எனவும் செப்டம்பர் மாதத்தில், இந்த தடுப்பூசியை தனியார் நிறுவனங்களும் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
சுகாதார மையங்களில் ரஸ்ய மக்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று நம்புவதாக தெரிவித்துள்ள அவர் அடுத்த சில மாதங்களுக்கு மருந்தகங்களில் இது கிடைக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார். #ரஸ்யா #கொரோனா #தடுப்பூசி #பரிசோதனை