171
வேட்பாளர் ஒருவர் கள்ள வாக்குகள் போட்டார் என எமக்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. அவை தொடர்பில் பரிசீலித்து நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசபிரிய தெரிவித்தார்.
வடக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட, பிரதிநிதிகள் யாழ்.மாவட்ட செயலகத்தில் அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடலை நடாத்திய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
அண்மையில் ஒரு வேட்பாளர் 75 கள்ள வாக்குகள் போட்டது தொடர்பில், பேசியிருக்கிறார். இது தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அது தொடர்பில் ஆணைக்குழுவில் பரிசீலித்து வருகின்றோம் அதற்குரிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் சிவஞானம் சிறிதரன் கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தான் 75 கள்ள வாக்குகளை கட்சிக்கு அளித்தேன் என தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அது தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் பல தரப்பினரும் கள்ள வாக்கு போட்டமை தொடர்பில் முறைப்பாடுகளையும் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #மகிந்ததேசபிரிய #கள்ளவாக்கு #சிறிதரன்
Spread the love