Home இலங்கை தேர்தல் சம்பந்தமாக தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களிடம் முன்வைக்கும் கோரிக்கைகள்….

தேர்தல் சம்பந்தமாக தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களிடம் முன்வைக்கும் கோரிக்கைகள்….

by admin


தேர்தல் அரசியல் கடந்து எமது மக்களின் சுபீட்சமான எதிர்காலத்தை இலக்காகக்கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையானது மக்களிடம் அன்புரிமையுடன் பின்வரும் 5 கோரிக்கைகளை முன்வைத்து நிற்கின்றது.

1. தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் அணிதிரண்டு தவறாமல் வாக்களிப்போம் என உறுதிபூணுவோம். எமது பிரதேசத்தில் இயங்கும் பொது அமைப்புக்கள் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவைக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகின்றன. இந்த அமைப்புகள் அனைத்தையும் பொதுமக்களை தவறாது வாக்களிக்க வேண்டும் என ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நாம் வாக்களிக்கத் தவறின் விலைபோன வாக்குகளே எமது பிரதிநிதிகளைத் தீர்மானிக்கும் துர்ப்பாக்கியம் அரங்கேறிவிடும்.

2. தேர்தலிலே சரியான, நேர்மையான, விலைபோகாத பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் எமது முழுக் கவனத்தையும் குவிப்போம். இதற்காக எமது மூன்று விருப்பு வாக்குகளையும் தவறாது பதிவிடுவோம். இவ்வாறு பதிவிடத் தவறின் அந்த விருப்பு வாக்குகள் தவறான முறையில் பயன்படுத்தப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதை மனதில் நிறுத்துவோம்.

3. எமது அபிலாசைகள் என்ன என்பதை அடையாளப்படுத்துவதற்காகத் தமிழ் மக்கள் பேரவையானது புலமையாளர்கள், துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் புலம்பெயர் தேசத்து வல்லுனர்கள் போன்றோரைக் கொண்ட குழுவொன்றை அமைத்து நீண்ட கலந்துரையாடல்களின் பயனாக எமக்கான தீர்வுத்திட்ட வரைபொன்றைத் தயாரித்து நிலத்திலும், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்களின் அபிப்பிராயங்களையும் உள்வாங்கி அதனை மெருகேற்றி தீர்வுத் திட்ட வரைபு ஒன்றினை வெளியிட்டிருந்தது. தமிழருக்கென அனைத்துத் தரப்பினரதும் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட முதலாவது தீர்வுத்திட்டம் இதுவென அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த தீர்வுத்திட்ட வரைபின் அடிப்படைகளை ஏற்று இதய சுத்தியுடன் செயற்படக் கூடியவர்களை எமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வோம்.

4. நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் நடைபெற அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. எனவே இதற்காக உங்கள் அனைவரினதும் பூரண பங்களிப்பினை கோரி நிற்கின்றோம்.

5. தேர்தலில் தெரிவாகும் எமது பிரதிநிதிகளை சரியான பாதையில் நெறிப்படுத்தி வழிப்படுத்தும் பாரிய பொறுப்பு பொதுமக்களாகிய எமக்கு இருக்கிறது. இதற்கான திட்டமிடலிலும் முயற்சிகளிலும் கைகோர்ப்போம். தவறானவர்களைத் தெரிவு செய்துவிட்டு தூர விலகி நின்று குற்றம் குறைகளை மட்டும் கண்டுபிடித்து விமர்சித்து பொழுதைக் கழிப்பது ஆரோக்கியமான அணுகுமுறையாக அமையாது. எனவே வாக்களிப்பதுடன் எமது கடமைகள் முடிந்து விட்டன எனக் கருதாது தொடர் பங்களிப்புகளுக்கு ஆயத்தமாவோம்.

தமிழ் மக்கள் பேரவை
19.07.2020.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More