தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற துரித இலக்கத்திற்கு வருடாந்தம், 550,000 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 2015 முதல் 2019 வரை 47,177 முறைப்பாடுகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், தொலைக்காட்சி சிறுவர் நிகழ்ச்சி வடிவமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த தகவலும் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் தேசிய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியன இணைந்து நடத்திய கூட்டத்தில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் முதித்த விதானபத்திரன, அதன் பிரதித் தலைவரும் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான சுஜாதா அலஹப்பெரும, அதன் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன ஆகியோர் ஆகியோர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டவாறு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான ஐந்து ஆண்டுத்திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கான தொழில்நுட்ப குழு ஒன்றை அமைப்பதை நோக்கமாக கொண்டே இந்தக் கூட்டம் இடம்பெற்றது. சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய நடைமுறைப்படுத்தல் திட்டம், தேசிய நடைமுறைப்படுத்தல் குழுவின் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இதில் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், நீதி, சமூக நலன்புரி, தொழில், சுற்றுலா மற்றும் ஊடக அமைச்சுக்கள் பங்குதாரர்களாக இணைந்து செயற்பட்டு இத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினா் ஊடாக உரிய நேரத்தில் சட்டத்தை அமுல்படுத்தல், பாதுகாப்பான சூழல் மற்றும் சிறுவர் நேயம் ஆகிய மூன்று பிரதான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள சட்டத்தை உருவாக்க பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்துள்ளது.
“குழந்தைகள் எல்லா வகையான துஷ்பிரயோகங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அவசியம்” என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
காவல்துறையினா் வெளியிட்டுள்ள 2019ஆம் ஆண்டின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, இலங்கையில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படுவதோடு, ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு கற்பழிப்புகள் இடம்பெறுகின்றன.
எவ்வாறெனினும், பெறப்பட்ட ஆயிரக்கணக்கான முறைப்பாடுகளில் எத்தனை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டுள்ளன என்பதை பாதுகாப்பு அமைச்சோ அல்லது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையோ வெளிப்படுத்தவில்லை. #சிறுவர்துஷ்பிரயோகம் #முறைப்பாடுகள் #பாதுகாப்புஅமைச்சு #தேசியசிறுவர்பாதுகாப்புஅதிகாரசபை