Home இலங்கை சமகாலத்தில் மருத்துவிச்சி முறையினை மீளக் கொண்டுவருதலும் அதன் முக்கியத்துவமும்..

சமகாலத்தில் மருத்துவிச்சி முறையினை மீளக் கொண்டுவருதலும் அதன் முக்கியத்துவமும்..

by admin

மனிதர் அவர்தம் சமுதாய கூட்டிணைப்பு வாழ்க்கையில், பண்பாட்டுகலப்பு என்பது இன்றியமையாதது. ஆனால் குறிப்பிட்ட அதிகார வர்க்கம் சார்ந்த பண்பாடு, ஏனைய பண்பாடுகளை புறகணித்து, ஒருவித அதிகார மனபாங்குடனும், வெள்ளை சிந்தனையுடனும் அவ் அதிகார வர்க்கம் சார்ந்த பண்பாடு, பண்பாட்டு கலப்பாக அன்றி தனிமுதன்மையானதாக, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளோ அல்லது சமுகத்திற்குள்ளோ உட்புகுத்தும் போது அதிகார நிலைப்பட்ட பண்பாட்டுருவாக்கம் என்பது சாத்தியமாகிறது. இந்த அடிப்படையில் தான் காலனியக்காரர்கள், அவர்தம் பண்பாட்டு மரபுரிமைகளை, நவீனம் என்பதான போர்வையில், குடியேற்ற நாடுகளில் நிறுவுகின்றனர். இதன் பேறாக பண்பாட்டு கலப்பு என்ற இயல்பான விடயம், அதிகாரமயப்பட்டு, ஏனைய பண்பாட்டு மரபுரிமைகளை புறக்கணித்து தனிமுதன்மையான பண்பாடாக காலனியர் அவர்தம் பண்பாடு, உலகம் முழுதும் செல்வாக்குப் பெறுகிறது.

இந்த பின்னணியில் தான், உள்ளுர் அறிவுமுறைகளின் புறக்கணிப்பு என்பது, அவர்தம் கல்வி, மருத்துவம், பொருளாதாரம், சட்டம், நீதி என அனைத்துவிதமாக சமுக உட்கட்டமைப்பு சார்ந்து, காலனியர்களின் அறிவு பொறிமுறைகளின் வாயிலாக நிகழ்த்தப்படுகின்றது.

இதனடிப்படையில், மருத்துவிச்சி முறை என்பது, காலனிய கல்விகேள்விகளாலும், அறிவு பொறிமுறைகளாலும் புறக்கணிக்கப்பட்டு, நவீன மருத்துவம் நிலைப்பெறுகிறது. மருத்துவிச்சி முறைமை புறகணிப்பிற்காக முன்வைக்கப்படுகின்ற பொருளற்ற குற்றச்சாட்டுக்கள் ( தாய் சேய் மரணம் அதிகரிப்பு, ) நவீன மருத்துவ முறையிலும் இருக்கின்ற போதும், தொடர்ச்சியாக மருத்துவிச்சி முறைமை புறக்கணிக்கப்படுவதும், கேள்விக்குட்படுத்தப்படுவதும், பொருளற்ற குற்றச்சாட்டுக்கள் வழி மிக இலாவகமாக நிகழ்ந்தேறுகிறது. இதனடிப்படையில் மருத்துவிச்சி முறைமை தமிழர் மருத்துவ முறை என்ற அடிப்படையிலும், தமிழர் பண்பாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது என்ற அடிப்படையிலும், மருத்துவிச்சி முறையின் முக்கியத்துவம் குறித்தும் அதனை மீள கொண்டுவருதலின் தேவைப்பாடு குறித்தும் சிந்திக்க வேண்டிக்கிடக்கிறது.

சமகாலத்தில், நிறுவனமயப்பட்டு நிற்கின்ற அறிவுபுலம், சான்றிதழ் மையப்பட்ட கல்விபுலத்தை அங்கீகரித்துக் கொள்வதன் பேறாக, உள்ளுர் அறிவு புலங்கள் புறக்கணிக்கப்படுவது என்பது சர்வசாதாரணமாக நிகழ்ந்தேறுகிறது. இந்த பின்னணியில் அவரவர் சமுகக்குழுமச் சார்ந்த அறிவு, அறிவுடைமையாகக் கொள்ளப்படாமையும், பன்மைத்துவ அறிவுபுலம் என்;பது, காலனிய மனபாங்கில், உலகம் முழுவதும் ஏகநிலையுடைய ஒன்றாகவே நிறுவப்பட்டு, நிலைப்பெற்றுள்ளதையும் அவதானிக்கமுடிகிறது. இந்த பின்னணியில்தான் ஆலோபதி மருத்துவமுறை ( ஆங்கில மருத்துவம்) உலகம் முழுதும் நிலைக் கொண்டுள்ளது.

சமகாலத்தில் அவரவர் பண்பாட்டு மரபுரிமைகளை பேணிபாதுகாப்பதன் அவசியம் உணரப்பட்டு வருகின்றபட்சத்தில், மருத்துவிச்சி முறைமையை மீளக் கொண்டு வருதல் என்பது அவரவர் பண்பாட்டு மரபுரிமை காப்பாகவும், இருப்பாகவும் அமைகிறது. பேறு காலம் அல்லது கருப்பகாலம் தொடக்கம் குழந்தை பிரசுவித்தல் வரையான காலம் என்பது, உறவுகளுக்கிடையிலான தொடர்பை வலுப்படுத்துகின்றது என்ற வகையிலும், அதன் வழி ஆரோக்கியமான சமுகக்கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்கும் துணை செய்கிறது என்ற அடிப்படையில் மருத்துவிச்சி முறை முக்கியம் பெறுகிறது.

கர்ப்பிணிக்கும் அவரது குடும்பத்திற்குமான தொடர்பினை வலுவூட்டலில், மருத்துவிச்சி இணைப்பு பாலமாக செயற்படுகிறார் என்ற அடிப்படையிலும், சூழல் இயைபுடைய மருந்து மூலிகைகளை பயன்படுத்தல் என்ற வகையிலும், மருத்துவிச்சி சூழலுடனான இசைவாக்க செயற்பாட்டில்; பழக்கப்படுத்துவதிலும், அது சார்ந்த அறிவு முறை பேணுகைக்கும் பிரதான கருத்தா என்ற வகையில் முக்கியம் பெறுகிறார். பிரசவம் என்பது மறுவாழ்வோடு தொடர்புபட்ட நிகழ்வு என்ற அடிப்படையில், அவரவர் பண்பாட்டு பின்புலம் சார்ந்து பேணப்படுகின்ற மருத்துவ முறைகளை கைக் கொள்ளுவதற்கான வாய்ப்பாக, மருத்துவிச்சி முறையை மீளக் கொண்டுவருதல் என்பது, அவரவர் சமுகம் சார்ந்த, நல்லிணக்கத் தொடர்பை ஏற்படுத்துவதற்கும், அதன் வழி உள்ளுர் அறிவுமுறைகளை, அவரவர் சூழல்சார்ந்துக் கொண்டிருந்த அறிவு பொறிமுறைகளை மீள கொண்டுவந்தளித்தல் என்பதன் ஊடாக, அவரவர் மரபுரிமைகளினதும், அறிவுநெறிமுறைகளினதும் பாதுகாப்பிற்கு வழிசமைக்க முடியும் என்ற வகையில், யுனெஸ்கோ மருத்துவிச்சி முறையை மீளக் கொண்டுவருதல் தொடர்பில் கவனஞ் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, நவீனமும் பாரம்பரியமும் ஒன்றை ஒன்று எதிர்ப்பதாக அன்றி, ஒன்றுக்கொன்று கொடுத்து வாங்கல் என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருவதை அடிப்படையாகக் கொண்டு, உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும், பாரம்பரிய மருத்துவமுறைகளை முன்னெடுத்து செல்வதற்கு, பேறுகால மருத்துவம் முக்கியமாகிறது. பாரம்பரிய மற்றும் தற்கால அறிவுமுறைகளினை உள்ளடக்கிய பகுதியாக, கருப்பகால மருத்துவம் அமைகின்றமையும், இயற்கை பிரசவமுறையில், மருத்துவிச்சியின் வகிபங்கு என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றமையும், பேறுகால மருத்துவத்தில் ஆண், பெண் என்ற வேறுபாட்டை தவிர்த்து, சமத்துவ வாய்ப்பை வழங்கி முன்னெடுக்கவும், அவரவர் பண்பாட்டு பின்புலம் சார்ந்து நிலவுகின்ற மருத்துவ முறைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை வழங்கவும், சிறப்பாக பேறுகால மருத்துவத்தில், மருத்துவிச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அவரவர் பண்பாட்டு பின்புலத்தில் உருவாகின்ற பேறுகால மருத்துவர்களை அல்லது மருத்துவிச்சிகளை, அவர்களது அறிவுநெறிமுறைகளை, அதன் தன்மைகளை அறிந்து தெளியவும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு யுனெஸ்கோ மருத்துவிச்சி முறைமையை பரிந்துரை செய்கிறது.

அந்தவகையில் தமிழர் பண்பாட்டை பொறுத்தவரை, ஆண்களும் மருத்துவிச்சிகளாக செயற்பட்டமைக்கான வரலாற்று பதிவுகள் காணப்படுகின்றன. இலங்கையில் கூத்து மரபிலும், நாட்டார் பாடல்களிலும், சிறுகதைகளிலும் ( சிங்களத்து மருத்துவிச்சி- நந்தியின் கதைகள்) பெண்மருத்துவிச்சி சார்ந்த ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன. மருத்துவிச்சி முறை என்பதும், அந்த அந்த சூழல் சார்ந்து, சூழலிசைவாக்கஞ் சார்ந்து, பேறுகால மருத்துவ முறை சார்ந்து, சிற்சில வித்தியாசங்களுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால், காலனிய காலத்தில், மருத்துவிச்சி என்பவர் ‘ வாட்டு கங்காணி’ என்பதாக மேற்பார்வை செய்பவர் என்ற அடிப்படையில், அதிகாரநிலைப்பட்ட பதவியாக நிறுவி, உள்ளுர் மருத்துவிச்சி முறைமை மருவிச் செல்வதற்கு படிப்படியாக, வழிவகுக்கப்பட்டது.

இந்த அடிப்படையில், ஒற்றை குவிமைய பார்வையில், ஆலோபதி மருத்துவமுறை சிறந்தது என்றும், மருத்துவிச்சி முறைமை ஆபத்தானது என்றும் குறிப்பிடுவது மேலோட்டமான பார்வையின் வெளிப்பாடாகவே இருக்க முடியும். ஏனெனில் மருத்துவிச்சி முறை என்பது, குறிப்பிட்ட பண்பாட்டு பின்புலம் சார்ந்து, சூழல் இசைவாக்கஞ் சார்ந்து பேணப்பட்ட, தனித்துவமான அடையாளங்களின் வெளிப்பாடாகவே அமைகின்றது. கொடுத்தலும் வாங்கலும் பண்பாட்டுகலப்பில் இன்றியமையாதது என்ற அடிப்படையில், மருத்துவிச்சி முறையில் கையாளப்பட்ட பிரசவிப்பு முறைகள் வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் பயன்பாட்டில் இருக்கின்றன. ( தமிழர் பண்பாட்டில் இருந்த, நின்று கொண்டு குழந்தையை பிரசுவித்தல் முறைமை, ஆலோபதி மருத்துவ முறையை பின்பற்றுகின்ற நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வருகின்றது)

மருத்துவிச்சி முறைமை என்பது, ஒருவகையான வைத்திய முறை என்பதையும் கடந்து, உறவு முறையாக, உறவு முறையாக வழிப்படுத்தல் என்பது, கருப்பகாலத்தில் தாய், சேய்க்கான பயத்தை போக்கி, மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் வலிமையோடு இருப்பதற்கு வழிசெய்கிறது. மருத்துவிச்சிமாரை பொறுத்தவரை, அனுபவமும், தீர்க்க தரிசன பார்வையும், மன வலிமையும், கருப்பிணியை ஆற்றுப்படுத்தும் விதமும், பிரசவ வலியில் துடிக்கும் பெண்களை கையாளும் பக்குவமும் முக்கியமாகிறது. பெண் மருத்துவிச்சிமார்களை பொறுத்தவரை இத்தகைய பக்குவங்களோடு, கருப்பகாலத்தில் பெண்களை கையாண்ட விதங்கள் குறித்த வரலாறுகள் இருக்கின்றமையையும் அவதானிக்கலாம். பிரசவகாலத்தில், ஆண்கள் பிரசத்தில் பங்கெடுத்தல் என்பது முக்கியமானது. குறிப்பாக, நஞ்சு கொடி விழாவிட்டால், சில நம்பிக்கைகளின் அடிப்படையில் கொடிகளை சென்று அறுத்தல், ஓட்டாங்களச்சியை( உடைந்த மண்சட்டி பானைகள்) உரலுக்குள் இட்டு இடித்தல், வெற்றிலை மடித்து உண்ணக் கொடுத்தல் ஆகிய முறைகள் பின்பற்றபடுகின்றன.

கருப்பகாலத்தில் செய்யப்படுகின்ற சடங்குகள், தாய், சேய் மகிழ்விற்கும் ஆரோக்கியத்திற்கும் வழி செய்கிறது. மருந்துக்களோடு மட்டும் நின்றுவிடாமல், இத்தகைய கருப்பகால சடங்குகள், உளரீதியான வலிமைக்கு இயல்பாக இட்டுச் செல்லுகிறது. குறிப்பாக இத்தகைய சடங்குகள் மகிழ்வித்தலை மாத்திரம் நோக்காகக் கொண்டு நடைபெறாமல், எந்த காலப்பகுதியில் எந்த சடங்கினை நடத்த வேண்டும் என அறிந்து நடத்தப்படுகின்றன. ( உ-ம் வலைகாப்பு சடங்கு, 8 அல்லது 9 வது மாதத்தில் நடத்தப்படுகிறது. கருப்பகாலத்தில் 8 அல்லது 9 வது மாதம் என்பது குழந்தை முழுமையாக வளர்ச்சியடைந்த காலப்பகுதியாக காணப்படுகிறது. ஆக இத்தகைய சடங்குகள், கருப்பகாலத்திலே, குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும், சிந்தனை வளர்ச்சிக்கும் துணை செய்யும் வகையில் அமைவதை அவதானிக்கலாம்.) இத்தகைய முறைகளின் அடிப்படைகளை கைக்கொண்டு ஆலோபதி மருத்துவ முறையிலும் னழடிhin phலளழை வாநசயில முதலிய முறைகள் கைக்கொள்ளப்படுவதை அவதானிக்கலாம்.

உணவே மருந்து என்ற அடிப்படையில், கருப்பம் தறித்த நாள்முதல், பிரசுவித்தல், பிரசுவித்த பின்னரான காலப்பகுதி, தாய்சேய் நலன் ஈராக தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள், கொடுக்கப்பட வேண்டிய உணவுகள் குறித்து கவனஞ் செலுத்தப்படுகிறது. குறிப்பாக கருப்பிணிகளுக்கு ஏற்படும் விக்கலுக்கு, இரண்டு தேக்கரண்டி இஞ்சி சாறுடன், புளியங்கொட்டை அளவு திப்பிலியும், அதே அளவு கடுக்காயும் சேர்த்து மைபோல் அரைத்து பருகக்கொடுத்ததான செய்திகள் காணப்படுகின்றன. ( தமிழ் மருத்துவம்) இந்த அடிப்படையில், உணவே மருந்தாக அமைகின்ற வைத்திய முறை என்ற அடிப்படையில், மருத்துவிச்சி முறைமை முக்கியம் பெறுகிறது.

குழந்தை வெளிவருவதில் சிக்கல் நிலைகள் ஏற்படும் போது, ஊறல் கொடுத்து ( மல்லி,மிளகு,இஞ்சி வெள்ளாங்;கணி வேர், வெந்தயம். சேர்த்து அவித்து ஊறல் கொடுத்தல் ) பிரச துரிதல்படுத்தல் முயற்சிகள் நடைபெறுகின்றன. பிரசவத்திற்கு பின்னரான காலப்பகுதியில், ஏற்படுகின்ற வலிகளை போக்கவும் பல்வேறு மூலிகைகளை பயன்படுத்தி வேதுவார்க்கப்படுகிறது. குறிப்பாக வேதுவார்த்தல் குழந்தை பிறந்து, 5 அல்லது 7 நாட்களில் நடைபெறுவதோடு வேதுவார்த்தல் பின்னரான காலப்பகுதியிலேயே, குளித்தல் உட்பட்ட ஏனைய தேவைகளுக்கு அந்த பெண் நீரை பயன்படுத்த முடிகிறது. பிரசவத்திற்கு பின்னரான காலப்பகுதியில், சுக்கு, மல்லி சேர்த்து தட்டி, கொதிக்க வைத்து, கருப்பட்டி சேர்த்து கசாயம் கொடுக்கிற முறையும் காணப்படுகிறது. தண்ணீர் அடித்தல் என்ற அடிப்படையில், பிரசவத்தின் பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் அடித்து, முதுகு, இடுப்பு பகுதி, வயிறு ஆகிய பகுதிகளைத் தேய்த்து, குளிக்க வைக்கும் முறையும் பேணப்படுகிறது. பிரசவகால வயிற்றுபுண் குணமடைவதற்காக காயம் என்று சொல்லப்படுகின்ற ஒரு கூட்டு அரைத்து, சாராயத்துடன் ( மதுபானத்துடன் கலந்து) கலந்து பருகக் கொடுக்கின்ற முறை காணப்படுகிறது.

உடல் வலிமை பெறுவதற்காக, கோழிகுஞ்சுகளை அறைத்து, காய்ச்சிக் கொடுக்கின்ற முறை சில இடங்களிலும், பத்தியகறி என்ற அடிப்படையில், மாமிசம் தவிர்த்து, காய்கறிகளை காய்த்துக் கொடுக்கின்ற வழக்கமும் காணப்படுகிறது. இடுப்புக்கட்டுதல் என்ற அடிப்படையில், தொப்புளுக்கு கீழான பகுதியில், துணிக் கொண்டு இருகக் கட்டி குழந்தை பிறந்த மூன்று நாட்களின் பின்னர், குறித்த பெண்ணை தனது அன்றாட செயற்பாடுகளில் ( நீர் தொடர்பான செயற்பாடுகள் தவிர்த்து) ஈடுபடுவதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

நஞ்சுக் கொடியை வெட்டுவதிலும் சில நுட்பங்கள் கையாளப்படுகின்றன. சம மூன்று துண்டுகளாக வெட்டப்பட்ட நஞ்சு கொடியில், ஒருபகுதியை, பிளிந்து, காயவைத்து, பொடி செய்து தாயத்தாக குழந்தைக்கு அணிவிக்கப்படுகிறது. தீராத நோய் தொற்றுக்கள் ஏற்பட்டக்காலத்தில், அந்த பொடியை தண்ணீரில் அல்லது பாலில் கலந்து கொடுத்து, நோய்களைத் தீர்த்ததாக குறிப்பிடப்படுகிறது. இந்த முறை, ஆலோபதி மருத்துவமுறையில், ளவநஅ உநடட வாநசயில என்பதாக கையாளப்படுவதையும் அவதானிக்கலாம்.

குழந்தை பிறந்ததன் பின்னரான காலப்பகுதியில், குறிப்பிட்ட காலம் வரை குழந்தையின் உடலை, ஈரத்துணியால், துடைத்து எடுப்பதும், பின்னரான காலப்பகுதியில், குழந்தையை நீராட்டும் போது, கால்களுக்கிடையில் வைத்துக் கொண்டு, மூலிகை நீர் கொண்டு குளிப்பாட்டுவதும், எண்ணெய் தேய்த்து, உடல்பாகங்களை நீவிவிடுவதும், தொப்புள், காதுகளில் ஊதிவிடுதல் போன்ற செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தொப்புள் புண் ஆறாத பட்சத்தில், காய்ந்த வாழைமட்டையை கறுகச்செய்து, அந்த பொடியை தொப்புளில் வைத்தல், அல்லது மிளகை வருத்து, அம்மியில் பொடியாக அரைத்து, அந்த பொடியை தொப்புளில் வைத்தல் என இரண்டு வழிமுறைகளில், தொப்புள் புண்ணை ஆற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குழந்தைகளின் துடிப்புகளை குறித்துவைத்தல், மாதாமாதம் கிள்னிக், ஸ்கேனிங் செய்தல் என நவீன முறை கருப்பகால செயற்பாடுகள் அமைய, மருத்துவிச்சி முறையில், அவரவர் செய்கின்ற தொழிலும், வாழ்ந்த சூழலும், கருப்பகாலத்தில் ஏற்படுகின்ற உடலியல் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு, ஆண், பெண் பிள்ளைகளை கண்டறிதல், நாடிப்பார்த்தல் மூலம் கருப்பத்தை கண்டறிதல் என கருப்பகால வைத்திய முறை காணப்படுகிறது.

ஆக, ஆலோபதி மருத்துவமுறை சிறந்தது என்றோ, மருத்துவிச்சி முறை சிறந்தது என்றோ நிறுவுவது என்பதல்ல மாறாக அவரவர் பண்பாட்டு சூழலில், குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கமைய, இசைவாக்கமடைந்த வைத்திய முறை எதுவாக இருக்கிறதோ அதனை பேணுவதற்கும், காப்பதற்குமான வழிவகைகளை கண்டறிதல் என்பதே தேவைப்பாடுடையதாகிறது. குறிப்பாக இத்தகைய தேவைப்பாடு என்பது, மருத்துவிச்சி முறையை கண்டறிதலும், கொண்டாடி மகிழ்தலும், என்பதையும் கடந்து, சமகாலத்தில், அவரவர் பண்பாட்டு பின்புலத்தில் காலத்தின் தேவைக்கருதி உருவாகிய மருத்துவ முறைகளை மீளகொண்டுவருதலும், அதன் வழி அவரவர் பண்பாட்டுமரபுரிமைகளின் காப்பாளனாக செயற்படுவதும், அவசியமாவதுடன், உள்ளுர் அறிவுமுறைகளை, அதன் தன்மைகளை குறித்த சமுகக்குழுமம் அறிந்துக் கொள்ளலும், பயன்பாட்டுக்கொண்டுவருதலும், அதன்வழி காத்திரமான உள்ளுர் சமுகக்கட்டமைப்பொன்றை கட்டியெழுப்புதலும் அவசியமாகிறது.

கலாநிதி.சி.ஜெயசங்கர்
விரிவுரையாளர்.து கௌரீஸ்வரன்
அலோசியஸ், ஆன் நிவேதிகா
இரா. சுலக்ஷனா.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More