குழந்தை பேறுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தமை தொடர்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை முன்பாக அமைதியின்மை ஏற்பட்டது. இன்று(1) மதியம் குறித்த வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று கூடிய இறந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நீதியை பெற்றுதர கோரியும் வைத்தியரின் அசமந்த நிலையையும் கூறி அமைதியின்மையை ஏற்படுத்தினர்.
கடந்த வெள்ளிக்கிழமை (31) அன்று வெல்லாவெளி பாக்கியல்ல சின்னவத்தை பகுதியை சேர்ந்த 34 வயதான மாசிலாமணி சிவராணி குழந்தை பேறுக்காக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குழந்தைப்பேறுக்காக சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.தொடர்ந்து குழந்தையை பிரசவித்த தாய்க்கு திடிரென ஏற்பட்ட உடல்நலக்குறையினை அடுத்து மீண்டும் அவருக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்த சிகிச்சையினால் தான் தாய் இறந்ததாக உறவினர் ஒருவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.
இதனை தொடரந்து வைத்தியசாலையின் முன்னால் அமைதியின்மை நிலையினை ஏற்படுத்தினார்கள் என சந்தேகத்தின் பேரில் 5 பேர் கல்முனை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இறந்த தாய்க்கு 3 பிள்ளைகள் உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. #குழந்தை #பெண் #கல்முனைஆதாரவைத்தியசாலை #அமைதியின்மை #உறவினர்கள்