219
எதிர் வரும் புதன் கிழமை இடம் பெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடாத்பாகவும்,மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் விசேட கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை(3) மாலை 3 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்ராஸ் தலைமையில் இடம் பெற்ற தேர்தல் பாதுகாப்பு குறித்த விசேட கலந்துரையாடலில் கொழும்பிலிருந்து வருகை தந்த உதவித் தேர்தல் ஆணையாளர் பண்டார பாபா , மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல்துறைஅத்தியட்சகர் பந்துல வீரசிங்க,மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஜே.ஜே.ஜேனிற்றன், உதவி காவல்துறை அத்தியட்சகர மற்றும் காவல்நிலைய பொறுப்பதிகாரிகள், காவல்துறை உத்தியோகத்தர்கள்; உட்பட தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது இடம் பெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ‘கொரோனா’ நோய் தொற்று பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
விசேடமாக மன்னார் மாவட்ட பகுதிகளில் கொரோனா தொற்று தொடர்பாக சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள 4 பேர்கள் தேர்தலில் வாக்களிக்க பிற்பகல் 4 மணிக்கு பிற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு கடமையில் சுமார் 700 காவல்துறையினா் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை காலை 7 மணியில் இருந்து மாவட்டச் செயலகத்தில் இருந்து மன்னார் மாட்டத்தில் உள்ள 76 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான சி.ஏ.மோகன்றாஸ் மேலும் தெரிவித்தார். #தேர்தல் #கலந்துரையாடல் #கண்காணிப்பாளர்கள்
Spread the love