தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 30 லட்சத்தினைக் கடந்துள்ளது.
அந்தவகையில் பிரேசிலில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 13 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 543 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பிரேசிலில் 841 பேர் உயிரிழந்துள்ளதுடன் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் கடந்த மே மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சுமாா் 4 மாதங்களில் பிரேசிலில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சராசரியாக நாள்தோறும் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் போதுமான அளவு பரிசோதனையை அதிகப்படுத்தாதது மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதது உயிரிழப்புக்கு காரணமாகும் என பிரேசிலின் சுகாதாரத்துறை அமைச்சு தொிவித்துள்ளது
அதேவேளை பிரேசிலில் கொரோனாவில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தார்கள் என்பது மிக்ககுறைவாகும் எனவும் உண்மையான தகவல்களை அரசு மறைக்கிறது எனவும் பிரேசிலில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் தொிவித்துள்ளனா்.
மேலும் மருத்துவக் கட்டுப்பாடுகளுக்கு அரசு தரப்பிலிருந்தே போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை எனவும் ஊரடங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படாமல் விரைவாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வந்துவிட்டதாகவும் கடைகள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்கள் திறக்கப்பட்டு மக்கள் கூட்டமாகச் செல்கிறார்கள் எனவும் அவா்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உலகளவில் கொரோனா உயிரிழப்பிலும், பாதிப்பிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரோனாவால் 51.49 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1.65 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழப்பிலும், பாதிப்பிலும் பிரேசில் 2-வது இடத்தி்ல் உள்ளது. .
3-வது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21.52 லட்சமாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. #கொரோனா #உயிரிழப்பு #பிரேசில்