மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் கடந்த ஓகஸ்ட் 7ஆம் திகதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில், அப்பகுதியில் தங்கியிருந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் 80க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இவர்களில் பெரும்பாலானோர், தமிழகத்தின் கயத்தாறு, சங்கரன்கோவில், தென்காசி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களைத் தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், உள்ளூர் மக்கள் என பல்வேறுத் தரப்பினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முதல் நாளில் 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, இரண்டாவது நாளில் 10 உடல்களும், மூன்றாவது நாளாக நேற்று 16 உடல்களும் மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 43 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், எத்தனை பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் இதுவரை கேரள அரசால் அறிவிக்கப்படவில்லை. அனைத்து உடல்களும் மீட்கப்பட்டு அறிவிப்பதற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் 30க்கும் மேற்பட்ட உடல்களாவது மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கப்படும் நிலையில் 4ஆவது நாளாக இன்று (ஓகஸ்ட் 10) மீட்புப் பணி நடைபெறவுள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.
மீட்கப்படும் உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்துக்கே சென்றுள்ள மருத்துவக் குழுவினர், அங்கே பிரேதப் பரிசோதனை மேற்கொள்கின்றனர். பின்னர் உடல்கள் அங்கேயே ராட்சத குழிகள் தோண்டப்பட்டுப் புதைக்கப்படுகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள கல்லார் ஆற்றில் தண்ணீர் அதிகளவு ஓடுவதால் உடல்கள் ஆற்றிலும் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் மீட்புக் குழுவினர் கூறுகின்றனர்.
இதனிடையே உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்தில் கூடியுள்ளனர். சூறைக்காற்று மழையும் பொருட்படுத்தாமல் தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்களா என்ற தவிப்புடன் காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் உடல்கள் உறவினர்களிடம் கொடுக்கப்படாமல் அடக்கம் செய்யப்படுவது தமிழக, கேரள மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. #கேரளமாநிலம் #மூணாறில் #நிலச்சரிவு #மீட்புக்குழுவினர்