உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலை நியூசிலாந்து சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது. பெப்ரவரி மாதம் அந்நாட்டில் முதல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு மார்ச் முதல் நாடு முழுவதும் முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டது.
ஊரடங்கை தீவிரமாக அமுல்படுத்தியதன் விளைவாக அங்கு கொரோனா வைரஸ் பரவல் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது. நேற்றைய நிலவரப்படி அந்நாட்டில் 1,219 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்ததுடன் ஏனையோா் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெற்றுவருபவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து நியூசிலாந்து வந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் நாட்டின் எல்லையிலே தடுத்து நிறுத்தப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் கொரோனா நாட்டுக்குள் பரவும் நிலையை தகர்த்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் தெரிவித்திருந்தார். அத்துடன் நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக உள்ளூர் மக்கள் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என நேற்று முன்தினம் அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், 102 நாட்களுக்கு பிறகு நியூசிலாந்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத்தொடங்கியுள்ளதாகவும் அந்நாட்டின் ஒக்லாந்தில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு யார் மூலம் கொரோனா பரவியது என்பது இதுவரை கண்டறிப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஒக்லாந்து முழுவதும் முடக்கநிலை அமுல்படுத்தப்படுவதாக பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் அறிவித்துள்ளாா். மேலும் நகரம் முழுவதும் 3 ஆம் கட்ட எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளாதாகவும், நாடு முழுவதும் 2 ஆம் கட்ட எச்சரிக்கை அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
102 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா பரவத்தொடங்கியுள்ளதால் நியூசிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வைரஸ் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது #நியூசிலாந்து #கொரோனா #முடக்கநிலை