வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசாமி கோவிலின் இரதோற்சவ நன்நாளில், ஆலயச்சூழலில் பக்த அடியார்கள் ஒரே நேரத்தில் பெருந்திரளாகக் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தேவஸ்தானத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை, 17 ஆம் திகதி திங்கட்கிழமை நல்லூர் கந்தசாமி ஆலய மஹோற்சவத்தின் இரதோற்சவ தினமாகும். நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனாப் பெருந்தொற்று பரவல் அபாயம் காரணமாக, சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எம்பெருமானின் அருளைப் பெற்றுய்வதற்கு ஆலய நிர்வாகத்தினால் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேவஸதானத்தினரால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு:
தனி மனித இடைவெளியைப் பேணியும், முகக் கவசங்கள் அணிந்தும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிக் கொள்ளுங்கள்.
எம் பெருமானின் இரதோற்சவ தினத்தன்று அதிகாலை முதல் மதியம் 2 மணி வரை சண்முகப் பெருமானைத் தாராளமாகத் தரிசிக்கலாம்.
எனவே, அடியவர்கள் தயவு செய்து சிறு குழந்தைகளையும், வயதானவர்களையும் கோவிலுக்கு அழைத்து வருவதைத் தவிருங்கள். அவர்கள் வீட்டில் இருந்தவாறே எம் பெருமானைத் தியானத்தில் தரிசனம் செய்யுங்கள்.
ஒரே நேரத்தில் அனைவரும் ஒன்று கூடாமல், வெவ்வேறு நேரங்களில் கோவிலுக்கு வருகை தந்து சண்முகப் பெருமான் – ஆனந்தக்கூத்தன் தரிசனங் கண்டு, அவன் குஞ்சிதபாத சேவை கண்டு இக, பர சௌபாக்கியம் அடைவீர்களாக!
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, நல்லூர் ஆலயப் பணியாளர்களுக்கும், தொண்டரகளுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்.
நல்லூர்க் கந்தப் பெருமானுடைய அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். #நல்லூர்க்கந்தசாமிகோவில் #இரதோற்சவம் #பெருந்திரளாக #கொரோனா