ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வுகளும் இல்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடாவும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷமன் கிரியெல்ல, ஜனாதிபதி கூறும் ஒரே சட்டம், ஒரே நாடு சாத்தியப்படாத ஒன்று எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 2015இல் கையுயர்த்திய தற்போதைய ஆளுங்கட்சியினர், ஏன் இப்போது 19ஐ நீக்க அவசரப்படுகின்றனர் எனவும் கேள்வி எழுப்பினார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “கடந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு எமக்கு மக்கள் ஆணை கிடைத்தது. இதுத் குறித்து சட்ட ஆலோசனையைப் பெற்றுக்கொண்டபோது, இதுத் தொடர்பில சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
“எனினும் ஜனாதிபதித் தேர்தல் அதன் பின்னரான நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றதால் அப்போது சர்வஜன வாக்கெடுப்பை எம்மால் நடத்த முடியாமல் போனது.
“எனவே நிறைவேற்று அதிகாரத்தை நீக்காது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டுமென நாம் தீர்மானித்தோம். இதன்படி 19ஆவது திருத்தச் சட்டத்தை நாம் கொண்டு வந்திருந்தோம். 19ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்போது எதிர்க் கட்சியினராக இருக்கும் இப்போதைய ஆளுங்கட்சியினர் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்கினார்கள்.
“19ஐ கொண்டு வரும்போது, முழு நாடாளுமன்றமும் அதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரம் வாக்களிக்கவில்லை.
“நானே 19ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைத்தேன். எவரும் எதிர்க்கவில்லை. இரு கைகளையும் உயர்த்தினார்கள். ஐக்கிய தேசிய முன்னணிக்கு வெறும் 45 உறுப்பினர்களே இருந்தார்கள். ஆனாலும் நாம் அந்த யோசனையை முன்வைத்தோம். ஏன் அப்போது 19க்கு கை உயர்த்தினீர்கள்?
“19ஆம் திருத்தச் சட்டத்தால் கொண்டுவரப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களும் நீக்கப்படும், 19ஐ நீக்குவதற்கான இத்தனை அவசரம் ஏன்? சொல்ல முடியாதக் காரணங்கள் ஏதும் இருக்கிறதா?
“ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் ஒரே சட்டம், ஒரே நாடு எனக் கூறியிருந்தார். இது சாத்தியப்படாது ஒன்று இதனைக் கொண்டுவருவது கடினமானது. “இலங்கையில் குற்றவியல் சட்டம் அனைவருக்கும் பொதுவானது, ஆனால் கண்டிய சட்டம், தேசவழைமைச் சட்டம் என தனிப்பட்ட சட்டங்களும் நாட்டில் இருக்கினற்ன. இவற்றை எல்லாம் நீக்கப் போகிறீர்களா?
“கொரோனா வைரஸ் தொடர்பில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் எதனையும் கூறவில்லை. மக்கள் எதிர்பார்க்கும் பிரச்சினைகளுக்கு எந்தவிதமானத் தீர்வுகளும் இதில் இல்லை.