கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதிகளில் புகுந்து தாக்குதல் நடத்திய அவுஸ்திரேலியரான 29 வயது தீவிரவாதி பிரென்ட்டன் டேரண்ட் என்பவருக்கு பிணை இல்லாத ஆயுள் தண்டனை விதித்து நியூஸிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவா் மசூதிகளில் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ந 51 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்தனா். இவா் மீது சுமத்தப்பட்ட 51 கொலை, 40 கொலை முயற்சிகள், பயங்கரவாதச் செயலுக்கான குற்றச்சாட்டு ஆகியவற்றை அவா் ஒப்புக் கொண்டதையடுத்து இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி டேரண்ட்டின் குற்றங்கள் மிகவும் கொடூரமானது, ஆயுள் முழுதும் சிறை என்பது கூட அந்த கொலை பாதகங்களுக்கு பிராயச்சித்தமாகாது, மிகவும் கறைபடிந்த ஒரு பாவ கருத்தியலிலிருந்து இந்த கொலை பாதகம் நடந்துள்ளது என நீதிபதி கமரூன் மண்டர் தொிவித்துள்ளாா்.
மேலும் பிரென்ட்டனின் செயல் மனிதவிரோதமானது எனவும் தன் தந்தையின் முழங்காலைக் கட்டிக் கொண்ட 3வயது குழந்தையைக் கூட கொலை செய்திருக்கிறாா் எனவும் நீதிபதி மண்டர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக குற்றவாளி பிரென்ட்டனின் தன் வழக்கறிஞர்களை நீக்கியதுடன் விசாரணையில் தான் எதுவும் பேச விரும்பவில்லை எனத் தொிவித்துள்ளதுடன் பிணை இல்லாத ஆயுள் தண்டனையை எதிர்க்கவில்லை எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது
தாக்குதலுக்கு முன்பாக மசூதியைப் ட்ரோன் மூலம் படம்பிடித்து மிகவும் திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 6 துப்பாக்கிகளுடன் மசூதிகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளாா்.
நியூஸிலாந்தின் வரலாற்றிலேயே கறைபடிந்த ஒரு சம்பவமாகவும் நியூஸிலாந்தின் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்தியதாகவும் இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது . #நியூசிலாந்து #மசூதி #பிணை #ஆயுள்தண்டனை