யாழ்.மாநகரசபை உறுப்பினர்களாக உள்ள தமது கட்சிசார்ந்த 6 பேரை பதவி நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள் உண்டா? என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரியொருவரிடம் ஆலோசனை பெற்றுள்ளதாக கட்சி தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
மாநகர சபைத் தேர்தலில் கட்சியின் சார்பில் நேரடியாக வட்டாரங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்த 6 உறுப்பினர்களையும் உறுப்பினர்களின் சம்மதம் இன்றி கட்சியாக வெளியேற்றுவதற்கான நடைமுறை என்ன ? அதனை நீக்கும் அதிகாரம் கட்சிக்கு உண்டா ? எந்தச் சந்தர்ப்பத்தில் உறுப்பினர்களை பதவி நீக்க முடியும் என்பது தொடர்பிலேயே இந்த ஆலோசனை பெறப்பட்டுள்ளது.
ஒரு உறுப்பினர் பதவியானது அவரது சபை அங்கத்துவத்தை இழப்பது, பதவி விலகல் மூலம், அல்லது நீதிமன்ற உத்தரவின் பெயரில், அல்லது கட்சியின் உறுப்புரிமையை முற்றாக இழப்பதன் மூலம் மட்டுமே என கட்சியினருக்கு குறித்த அதிகாரி கூறியுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்கும், அக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் , ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் அணிக்கும் இடையிலான முறுகல் உச்சமடைந்துள்ள நிலையில், மணிவண்ணன் சார்பான முக்கியஸ்தர்களை களை எடுக்கும் பணியும் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் முதல்கட்டமாக மாநகர சபை மீது முன்னணியின் கவனம் திரும்பியுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் முன்னணியின் 13 உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஒருவர் நீதிமன்ற கட்டளையின் பெயரில் சபைக்கு சமூகமளிக்க முடியாத நிலையில், (சட்டத்தரணி வி.மணிவண்ணனின் மாநகர சபை உறுப்புரிமையை நீக்க வேண்டும் என மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.) எஞ்சிய 12 பேரில் நால்வர் மட்டுமே கட்சியின் தலைமைக்கு சார்பாகவும், எஞ்சிய 8 பேரும் மணிவண்ணனிற்கு சார்பாகவுமே உள்ளனர். அதில் பட்டியல் மூலம் தேர்வான இருவரையும் பதவி விலகுமாறு கட்சி ஏற்கனவே அறிவித்து விட்டது.
அந்நிலையில் தற்போது, எஞ்சிய 6 பேரையும் பதவி விலக்குவதற்கு வழி தேடுகின்றமை குறிப்பிடத்தக்கது. #யாழ்மாநகரசபை #உறுப்பினர்கள் #பதவிநீக்க #தமிழ்தேசியமக்கள்முன்னணி #ஆலோசனை #மணிவண்ணன்