வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு, இலங்கையில் உள்ள இராஜதந்திர சமூகம் நேசக்கரம் நீட்டியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச தினமான இன்று, சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகள் சிலர் தமது ஆதரவுக்கான கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நியாயம் கோரி பணியாற்றுபவர்கள் தமது பணியை தொடர்ந்து முன்னெடுப்பது மிகவும் அவசியம் என ஐக்கியநாடுகளுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கர் வலியுறுத்தி உள்ளார்.
“இலங்கையின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன் நான் உறுதுணையாக நிற்பேன்” என தனது ருவீட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்தக் குடும்பங்கள் மிக மோசமான மனவேதனையை அனுபவித்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ள அவர், காணாமல் போனவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக பணியாற்றுபவர்கள் தொடர்ந்தும் செயலாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
“குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு நியாயம் கோரிய போராட்டத்தில் பெரும்பாலும் பெண்கள் முன்னணியில் இருப்பதை நாங்கள் அறிவோம், எனவே அவர்கள் பல சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை எதிர்கொள்வதால் அவர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பலியானவர்களின் குடும்பங்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், சாட்சிகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான வழக்குகளை கையாளும் சட்ட ஆலோசகர்களின் பாதுகாப்பும், செயற்பாடுகளும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இதேவேளை வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கு முடிவு காண்பது மட்டும் போதாது எனவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பதில் கிடைக்க வேண்டும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகத்தின் பணி பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்களுக்கு மாத்திரம் அல்ல அடுத்த தலைமுறையினருக்கும் அவசியம் ஆனது எனக் குறிப்பிட்டள்ளார். இவ்வாறே பிரித்தானியா மற்றும் கனடா தூதர்களும் ருவீட்டர் செய்திகளை வெளியிட்டுள்னளர்.