இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் முதல்தர வீரர் நோவக் ஜோகோவிச் ஸ்வாட்ஸ்மனை வீழ்த்தி 5-வது முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்.
ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-3 என்ற நேர்செட்டில் டியாகோ ஸ்வாட்ஸ்மனை (அர்ஜென்டினா) வென்று5-வது முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றினார்.
இது ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் மாஸ்டர்ஸ் வகை டென்னிஸ் போட்டியாகும். இத்தகைய போட்டியில் ஜோகோவிச் வென்ற 36-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் ஆயிரம் தரவரிசை புள்ளி வழங்கும் மாஸ்டர்ஸ் போட்டியில் அதிக பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனை பெற்றுள்ளாா். இதுவரை ஸ்பெயினின் ரபெல் நடால் (35 பட்டம்) பெற்றதே சாதனையாக இருந்து வந்தது.
இதேவேளை பெண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் கரோலினா பிளிஸ்கோவாவுக்கு (செக்குடியரசு) எதிராக சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-0, 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது இடது தொடையில் ஏற்பட்ட காயத்தால் பிளிஸ்கோவா விலகினார். இதனால் ஹாலெப் முதல்முறையாக இத்தாலி ஓபனில் வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளாா். #நோவக்ஜோகோவிச் #இத்தாலிஓபன்டென்னிஸ் #சம்பியன் #சாதனை