தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு மினுவாங்கொடை பெண் காரணமல்ல எனத் தெரிவித்த ஜே.வி.பியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத், தற்போது காணப்படும் நிலைமைகளால் எதிர்வரும் தினங்களில் இன்னுமொரு கொத்தணி உருவாகக்கூடுமெனவும் எச்சரித்தார்.
பத்தரமுல்லயில் உள்ள ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், கொரோன வைரஸ் பரவலை கட்டுப்படுத்திவிட்டதாக மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலேயே, கடந்த காலங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்பட்டனவெனவும் உண்மையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அரசாங்கம் கைவிட்டிருந்தமையாலேயே இரண்டாவது அலையொன்று உருவெடுத்துள்ளதெனவும் சாடினார்.
கொரோனா வைரஸ் பரவலை சாதகமாக கட்டுப்படுத்திய இரண்டாவது நாடு என்ற பெருமை இலங்கைக்கு கிடைத்துள்ளதென அரசாங்கம் மார்த் தட்டிக்கொண்டதாகத் தெரிவித்த அவர், மறு திசையில் முன்பு இருந்ததை விடவும் உக்கிரமாக கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கிறதெனவும் சாடினார்.
இவ்வாறிருக்க பிரெண்டிக்ஸ் கொத்தணியில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட பெண்ணால் கொரோனா வைரஸ் பரப்பட்டதென ஊடகங்களில் சில தகவலை கட்டமைக்க முற்பட்டதாகத் தெரிவித்த அவர், இந்நேரத்தில், அந்தப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கவில்லை என்ற உண்மையை சுகாதார துறையினர் தற்போது வெளிப்படுத்தியுள்ளனரெனவும் கூறினார்.
“இவ்வாறிருக்க இந்தியாவுக்குச் சென்று வந்த பிரெண்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் 14 பேர் தங்களுடைய மேற்பார்வையின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டிருக்கவில்லை என பொது சுகாதார அதிகாரிகளின் சங்கம் தற்போது அறிவித்துள்ளது. இவ்வாறான நிலைமைகளால் எதிர்வரும் தினங்களில் இன்னுமொரு கொத்தணி உருவாகக்கூடும்” எனவும், விஜித்த ஹேரத் எச்சரித்தார்.