யாழ்.சுன்னாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த “நொதேன் பவர்” நிறுவனத்தினால் பொறுப்பற்ற விதத்தில் வெளியேற்றப்பட்ட கழிவோயிலினால் பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் உற்பத்தி நிறுவனமான “நொதேன் பவர்” நிறுவனத்திலிருந்து வெளியேறிய கழிவோயில் அப்பிரதேசத்தை சூழவுள்ள வீடுகள் , தோட்டங்களின் குடிநீர் கிணறுகளில் கலந்தன. அதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் பிரகாரம் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அது தொடர்பிலான திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அதன் போது , என்ன அடிப்படையில் இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளது, என்ன வழிமுறையில் வழங்கப்படும் போன்ற விடயங்களை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் கலந்து கொண்டவர்கள் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டனர். அத்துடன் அது தொடர்பிலான தமது மேலதிக சந்தேகங்களையும் கேட்டு தெளிவு படுத்திக்கொண்டு , முடிவில் இழப்பீட்டினை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.