வல்வெட்டித்துறை நகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சதீஸ்,சபையில் ஏனைய உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலை விடுத்தார் என சபையின் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
“வல்வை. நகர சபை அமர்வில் உறுப்பினர்களுக்கு சபை அமர்வின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சக உறுப்பினரான சதீஸ் அச்சுறுத்தல் விடுத்தார்”
முக்கியமான தீர்மானங்கள் சிலவற்றை எடுப்பதற்காக நேற்று வியாழக்கிழமை (நவ.5) வல்வெட்டித்துறை நகர சபையின் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டது. நீச்சல் தடாகம் மற்றும் பொது விளையாட்டு மைதானம் குறித்தும் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பில் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன.
அவற்றில் வல்வெட்டித்துறை பொது மைதானம் சம்பந்தமாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போது, அந்தத் திட்டத்தைக் குழப்புகின்ற செயற்பாடுகளில் சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர் கஜேந்திரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் சதீஸூம் ஆரம்பத்திலிருந்தே ஈடுபட்டனர்.
உறுப்பினர் சதீஸ், ஏனைய உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலை விடுத்தார். அத்தோடு சபையில் பயன்படுத்த முடியாத தகாத வார்த்தைகளை அவர் தொடர்ச்சியாகக் கதைத்துக்கொண்டிருந்தார். அதனால் அவரை சபையிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சியை எடுத்த போது, அதனையும் குழப்பினார்.
உறுப்பினர்கள் இருவரினதும் குறிக்கோள், வல்வெட்டித்துறை பொது விளையாட்டு மைதானத்தை கழுகுகள் கழகத்துக்கு தாரைவார்க்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் அவர்கள் செயற்பட்டனர்.
கடந்த 20 வருடங்களாக பொது விளையாட்டு மைதானத்துக்கான வழக்கை வல்வெட்டித்துறை நகர சபைதான் முன்னெடுத்து வருகின்றது. அந்த செயற்பாடுகளுக்கு ஆதரவளித்த சதீஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் பொது விளையாட்டு மைதானத்தைச் சுவீகரிப்பது என்ற தீர்மானத்தை எடுக்கவிடாது குழப்பியடித்தனர்.
இவர்கள் தொடர்ச்சியாகவே தவிசாளரது கட்டளைக்குப் பணியாமல் கூட்ட நடைமுறைகளுக்கு மாறாக தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றனர்.எனவே இவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு உள்ளூராட்சி ஆணையாளரை சந்தித்து முறைப்பாட்டைச் செய்வதற்கு திட்டமிட்டுள்ளேன் என்றார். #வல்வெட்டித்துறைநகரசபை #தமிழ்தேசியக்கூட்டமைப்பு #அச்சுறுத்தல்