இந்தியா பிரதான செய்திகள்

பிகார் தேர்தல்: நிதிஷ் குமாரின் தனித்துவம் முடிவுக்கு வந்தது…

நிதிஷ்

பிகார் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 125 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால், இந்த தேர்தலில் ஆளும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெறும் 43 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், அதனுடன் கூட்டணியில் இருந்த பாஜக 74 தொகுதிகளில் வென்றுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பிந்தைய உடனடி கருத்துகளை முதல்வர் நிதிஷ் குமார் வெளியிடவில்லை. பாஜகவும் அடுத்த முதல்வராக நிதிஷ் குமார் தொடருவார் என்ற தகவலை தேர்தல் முடிவுக்குப் பிறகு உறுதிப்படுத்தவில்லை.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வைக்கும் லோக் ஜன சக்தி, நடந்து முடிந்த பிகார் சட்டமன்ற தேர்தலில் யாருடனும் அணி சேராமல் தனித்து தேர்தல் களம் கண்டது. அதன் தலைவர் சிராக் பாஸ்வானின் கட்சி ஓரிடத்தில் மட்டுமே வென்றது. ஆனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வாக்குகள் பல இடங்களில் பிரிய லோக் ஜன சக்தி காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது ஜேடியு தொண்டர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

ஒரு வேளை இந்த தேர்தலில் நிதிஷ் குமாரின் ஜேடியுவை பலவீனப்படுத்த சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தியை பாஜக பயன்படுத்தியதோ என்றும் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. காரணம், அவரது கட்சி ஜேடியு வேட்பாளர்களை எதிர்த்து மட்டுமே தனது வேட்பாளர்களை களமிறக்கியது. பாஜகவுக்கு எதிராக மூன்று இடங்களில் மட்டுமே அதன் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

சிராக்

காரணம், தேர்தல் முடிவு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான், “எல்லா லோக் ஜன சக்தி வேட்பாளர்களும் எந்தவொரு கட்சி மற்றும் கூட்டணியின் ஆதரவின்றி தனித்துப் போட்டியிட்டது. இந்த தேர்தலில் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. பிகார்தான் முன்னுரிமை என்ற முழக்கத்துடன் நாங்கள் தேர்தலை சந்தித்தோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி வலுப்பெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த ட்வீட்டுகளை விட, இது பிகாரில் பாஜக மீது மக்களுக்குள்ள ஆர்வத்தை காட்டுகிறது. இது பிரதமர் நரேந்திர மோதியின் வெற்றியை காட்டுகிறது என்று சிராக் குறிப்பிட்டிருப்பதுதான், ஒருவேளை இவருக்கும் பாஜகவுக்கும் உள்கூட்டு ஏதேனும் இந்த தேர்தலில் இருந்திருக்குமோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாக நிதிஷ் கட்சியினர் கருதுகிறார்கள்.

மற்றொரு ட்வீட்டில், “அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அடிபணியாமல் கட்சி செயல்பட்டதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். தனித்துப் போராடி மக்களிடம் நிலைமையை எடுத்துரைத்தோம். மக்கள் கொண்டிருந்த அன்பு நமக்கு மேலதிக சக்தியை கொடுத்துள்ளது” என்று சிராக் குறிப்பிட்டுள்ளார்.

பிகாரில் யாராலும் அசைக்க முடியாத தலைவராக தனி அடையாளத்துடன் நிதிஷ் குமார் இதுவரை வலம் வந்தார். ஆனால், அவரது தனித்துவத்துக்கு முடிவு காண்பது போல தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.

தேர்தல் பரப்புரையின்போது பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடங்கள் குறைவாக வந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்குமானால், அப்போதும் நிதிஷ் குமாரே முதல்வராக இருப்பார் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். அந்த உறுதிமொழி காப்பாற்றப்பட்டால்தான் நான்காவது முறையாக நிதிஷ் குமாரால் ஆட்சியில் இருக்க முடியும். இல்லையென்றால் அங்கு ஆட்சிக் கட்டிலில் அமரும் கட்சியின் காட்சிகள் மாறலாம்.

தேஜஸ்வி யாதவ்
படக்குறிப்பு,தேஜஸ்வி யாதவ்

தேஜஸ்வியின் ஆர்ஜேடிக்கு புதிய அந்தஸ்து

இந்த தேர்தலில் நிதிஷ் குமாருக்கு கடுமையான போட்டியாக விளங்கியவர் தேஜஸ்வி. அவர் சார்ந்த ஆர்ஜேடி 75 இடங்களில் வென்று மாநிலத்திலேயே அதிக இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இதில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி போட்டியிட்ட ரகோபுரில் நிதிஷ், பாஜக கூட்டணியின் வாக்குகளை பிரிக்க லோக் ஜன சக்தி கட்சியின் வாக்குகள் உதவியிருப்பது தேர்தல் ஆணையம் வெளியிட்ட முடிவுகள் தொடர்பான தரவுகள் மூலம் தெரிய வருகிறது.

ரகோபூரில் தேஸ்வி பெற்ற வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 97,4040. இங்கு 38,174 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றுள்ளார். இங்கு களமிறக்கப்பட்ட பாஜக வேட்பாளர் சதிஷ் குமார் 59,230 வாக்குகளைப் பெற்றார். இவர்களைத் தொடர்ந்து மூன்றாமிடத்தில் லோக் ஜனசக்தி கட்சியின் ராகேஷ் ரோஷன் 24,947 வாக்குகளைப் பெற்றார்.

ரகோபூர் தொகுதி, யாதவ சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதி. சுமார் 1.25 லட்சம் பேர் இங்கு இருப்பதாகவும் அதில் யாதவ் சமூகத்தினருக்கு அடுத்தபடியாக ராஜ்புத் சமூகத்தினரின் வாக்குகள் 40 ஆயிரம் என்ற அளவிலும் இருந்துள்ளது. யாதவ் சமூகத்தைச் சேர்ந்த தேஜஸ்வியும், அதே சமூகத்தைச் சேர்ந்த சதீஷ் குமாரும் தேர்தல் களம் கண்ட நிலையில், இருவரையும் எதிர்த்து ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த ராகேஷ் ரோஷனை நிறுத்தியதால் நிதிஷ் கூட்டணியின் வாக்குகள் பிரிந்தன. அதுவே தேஜஸ்வியின் வெற்றியை எளிதாக்கியிருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொண்ட அதே சமயம், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளின் திறனை குறைத்து மதிப்பிட்டதால் நிதிஷ் கட்சி பல இடங்களை பறிகொடுத்ததா என்ற கேள்வியும் இந்த தேர்தல் எழுகிறது.

பிகாரில் இதுநாள்வரை பெரிய அண்ணன் போல நிதிஷ் கருதப்பட்டு வந்தார். ஆனால், இனி அவரால் அப்படி இருக்க முடியாது. உறுதியளித்தபடி அவரை முதல்வராக்க பாஜக ஆதரவளித்தாலும், யதார்த்த அளவில் குறைந்த எண்ணிக்கையை பெற்றுக் கொண்டு முதல்வர் நாற்காலியில் நிதிஷ் குமாரால் அதிக காலம் பதவியில் தொடருவது கேள்விக்குறியே என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

மறுபுறம் ஒவைஸியின் கட்சியான அகில இந்திய மஜ்ஜிலிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன், முதல் முறையாக ஐந்து இடங்களை பிகார் தேர்தலில் கைப்பற்றியிருக்கிறது. இது பாரம்பரியமாக ஜேடியு அல்லது காங்கிரஸ் அல்லது ஆர்ஜேடி கூட்டணிக்கு வாக்குகளை செலுத்தி வந்த முஸ்லிம்களின் மன மாற்றத்தை பிரதிபலிக்கிறது.

இந்த தேர்தல் முடிவு குறித்து ஒவைஸின் கூறுகையில், “அரசியலில் நீங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்கிறீர்கள். எங்கள் கட்சியின் பிகார் மாநில தலைவர் முக்கிய கட்சிகளுடன் கூட்டணி சேர முயன்றார். ஆனால், தீண்டத்தகாதவர்களாக எங்களை அக்கட்சிகள் நடத்தின. பல முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் அப்படியே நடத்தினார்கள். ஆனால், அதே முகத்தை ஒரு கண்ணாடி போல அவர்களுக்கே பிகார் மக்கள் காட்டி எங்களுக்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

தமது ட்விட்டர் பக்கத்தில் பிகார் மக்கள் வாக்குகளை மட்டுமின்றி தங்களுடைய அன்பையும் எங்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்களுக்கு நன்றி கூற எனக்கு வார்த்தைகளே இல்லை என்று ஒவைஸி கூறியுள்ளார்.

Thanks – BBC

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.