அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கல்முனை சாஹிரா கல்லூரி வீதியில் இருந்து கல்முனை வாடி வீதி(REST HOUSE ROAD) வரையில் உள்ள வீதிகள் மற்றும் சகல வர்த்தக நிலையங்கள், அரச தனியார் மற்றும் நிறுவனங்கள், கல்முனை சந்தை, கல்முனை பஸார் உட்பட பல பகுதிகள் இன்று(18) தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அப்பகுதி வெறிச்சோடிக் காணப்படுகின்றது. இப்பிரதேசங்களில் இராணுவத்தினர் காவல்துறையினா் இணைந்து சுகாதார தரப்பினருடன் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கல்முனை தலைமையக காவல் நிலையத்தில் காவல்துறையினருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் எழுமாற்றாக பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர பொதுமக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து கைகளை கழுவுதல் முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளிகளை பேணதல் பேணி வருகின்றனர்.
குறித்த தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக மேற்படி அறிவித்தலானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(20) வரை முழுமையாக சன நடமாட்டத்தை மட்டுப்படுத்தி பொதுமக்களை வீடுகளிலே தங்கி இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இவ் உயர் மட்ட குழு கூடி தொடர்ந்தும் இவ் நிலையினை நீடிப்பதா? இல்லையா? என முடிவு எடுக்கப்படவுள்ளது.
வியாழக்கிழமை (17) பிற்பகல் 5.30 மணிக்கு கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற கொவிட் 19 தடுப்பு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் மேற்படி முடிவுகள் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #கல்முனை #தனிமைப்படுத்தல் #பிரகடனம் #அம்பாறை #பிசிஆர் #கொரோனா