இலங்கையில் விமான நிலையங்கள் திறக்கப்பட்ட பின்னர் முதலில் ரஷ்ய நாட்டை சேர்ந்த சுற்றுலா குழு ஒன்றிற்கு நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மசேன இதனை தெரிவித்தார்.
ரஷ்யா மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி 200 சுற்றுலா பயணிகள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி கட்டுநாயக்க மற்றும் மத்தளை விமான நிலையங்களுக்கு செல்ல உள்ளனர்.
இலங்கைக்குள் பிரவேசிக்கும் தரும் சுற்றுலா பயணிகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சுற்றுலா பிரதிநிதிகளை அறிவுறுத்தும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
விமான நிலையங்களை மீளத் திறப்பதற்கு ஒத்திகை!
விமான நிலையங்களை மீளத் திறப்பது தொடர்பான ஒத்திகை எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவிருப்பதாக வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களை எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் திறப்பது தொடர்பில் திட்டவட்டமான முடிவு எட்டப்படவில்லை என்றும் விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்ட அவர், இருப்பினும் இது தொடர்பில் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான ஏற்பாடுகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
2020 செப்டம்பர் 01ஆம் திகதி முதல் 2020 டிசம்பர் 16ஆம் திகதிவரை தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீர்வை வரியற்ற வர்த்தக நிலைய தொகுதிகளில் பொருட்களை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் 16ஆம் திகதி தனிமைப்படுத்தலை நிறைவு செய்கின்ற பயணிகளும், தனிமைப்படுத்தல் செயல்முறை முடிவடைந்து ஒரு மாத காலத்திற்குள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற வர்த்தக நிலைய தொகுதிகளில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)